Tuesday, September 11, 2018

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்



நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே!
நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே!
நாற்றுநட தாயவளும் போகையிலே
நானும்போக அழுததெல்லாம் கண்ணுக்குள்ளே!
சேற்றுக்குள்ளே நானிறங்கிப் போகையிலே
தவளையிடம் தாவக்கற்றேன் விரைவினிலே!





கிணற்றருகே எட்டிச்சென்று பார்க்கையிலே
என்முதுகு புண்ணானது தாயினாலே!

சாலையிலே நான்நடந்து போகையிலே 
இருபுறமும் குடைபிடிக்கும் மரங்கள்தானே!
இன்றெல்லாம் பறவையெல்லாம் புத்தகத்தில்!
நான்பார்த்தேன் நேரினிலே கானகத்தில்!
நீச்சலுக்குப் பயிற்சிப்பள்ளி போனதில்லை!
நீந்தக்கற்றேன் மாமாவால் கண்மாயிலே!
தவில்காரர் வாசிக்க அருகேசென்று
அதுவெனக்கு வேண்டுமென்று அழுதேன்நானே!


என்முத்தம் வாங்கினார்கள் நிறையபெண்கள்!
இன்றதனைத் திரும்பக்கேட்டால் என்னவாகும்?
உறவுகளும் நட்புகளும் கூடிவாழ்ந்த
அந்தக்கால நினைவுகளும் சுகமே!சுகமே!


- சரவணபெருமாள்

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!


கண்ணுக்குத் தெரியாத
தென்றலின் சேட்டையால்
கண்ணில் தெரிந்த
தென்றல் கூந்தல்!
ஒற்றைக் கோட்டில்
ஆடவன் தடுமாறினால்
ஒய்யாரமாய் நெளியும்
புருவத்தின் சேட்டையாம்!


சிலையென நின்று
நிலையினை மறந்தால்
ஏழாம் அறிவு
விழிகளின் மந்திரம்!
தங்கச் சில்லறையின்
சிதறல் ஒலி
தவிடு பொடியானால்
உனது சிரிப்பொலி!


உன் புன்னகை
சிந்தும் வழியில்
வரிசையாய் நிற்கிறது
வாலிபர் கூட்டம்
ஏறெடுத்துப் பாராத
எட்டாக்கனி முகம்
எனையேனோ பார்த்து
எடுத்துக்கொள் என்றது


நிலவின் விடுமுறையில்
நிறைந்த ஒளிப்பேழை
நிலத்தில் விழுந்தாற்போல்
இதயத்தில் நீ!
உலகைச் சுருட்டி
ஒட்டுமொத்த மகிழ்வும்
உன்னால் வந்தது!
எனக்கு என்னானது?


மனம்போன ஒத்தையடியில்
கைகோர்க்க வந்தவளே!
இனியென்ன தயக்கம்?
பெற்றோரின் விருப்பம்!
வரவெனில் கல்யாணப்
பந்தலில் காத்திருப்பேன்!
பிரிவெனில் கல்லறை
வாசலில் காத்திருப்பேன்!


- சரவணபெருமாள்

என் விழியில் உன் பார்வை

என் விழியில் உன் பார்வை




மயக்குவாள் இன்றி திரிந்த விழிக்கு
உடைவாள் ஆனது உன் விழியே!
என்னைப் பார்த்ததோ?
இல்லை எதார்த்தமோ?
மண்ணைக் கவ்வியது என் விழிகள்!


தானியங்கு சேமிப்பகமாய்
என் மூளையில்
தவறுதலாய்ப் பதிவான காட்சி
உன் பார்வை!
தொலைக்காட்சியின்
முக்கியச்செய்தி போல்
தொடர்ந்து
என் நினைவில் ஒளிபரப்பாகிறது!


மறுபடி அந்தக் காட்சிக்காய் ஏங்குவேன்!
அதுபுரியும் ஆட்சியில் தான் வாழுவேன்!
வறட்சியில் குளத்தினில்
பாய்ந்திட்ட மழைவெள்ளமே!
மிரட்சியில் உடைந்திட்ட கரை
என் உள்ளமே!
இலக்கற்ற தென்றலாய்
பாய்ந்தேன் நானடி!
இலக்கினி நீயடி!
படர்வேன் கண்மணி!
உரசலாய் கொஞ்சம்!
மெர்சலாய் கொஞ்சம்!
சிரிசினில் ஊதி;
மூச்சினில் பாதி!
நான் இருப்பேன்!


விழிசெய்யும் நிகழ்ச்சியே
காதலின் புரட்சியே!
விரைந்துனை அடைவதே
இதயத்தின் குளிர்ச்சியே!
இதற்குமேல் எதற்கு,
உதாரணம் நமக்கு?
இணைந்தினி வாழ்வோம்;
இதயமே வாயடி!


- சரவணபெருமாள்

தாவணிக்காலக் கனவுகள்

தாவணிக்காலக் கனவுகள்



வெட்கத்த பூட்டத்தான் வழியேதும் இருக்கா?
வந்து சொல்லடி சிநேகியே
அந்தக்காலக் கதை சொல்லி அறுக்குற
கெழவியக் கூட்டிட்டுப் போ வெளியே


ஓலை அனுப்புன அடுத்த வண்டியில
மாமன் வந்துட்டான் குச்சுக்கட்ட - என்
மாமன் வயசுக்கு வந்ததேதி கேளு
நான் போறேன் அவனுக்கு குச்சுக்கட்ட


மூஞ்சிய மூடுன தாவணிக் குள்ளேயும்
நூலிடுக்குல குட்டிச்சன்னல் - அந்த
சன்னல என்கண்ணு தாவிக்குதிக்குது - அது
மாமன்மேல நான் வச்சகாதல்


தாவணி மிச்சமா விட்ட இடுப்புல
சந்தைக்கு வந்த மாமங்கையி
கண்ணுல கையில காமம் ஏதுமில்ல
அதனால தப்பிச்சான் பொடிப்பையன்


தாவணி எப்பத்தான் சேலையா மாறும்
காத்துக் கெடக்கேன் என்மாமனுக்கு
தாலியக் கட்டுன அப்புறம் நான்புருசன்
பொஞ்சாதி எனக்கு மாமங்காரன்


- சரவணபெருமாள்

காதலாகிய கவிதை!

காதலாகிய கவிதை!
 
வந்தோம்; உண்டோம்!
எனும் வண்டினம்,
இதோ!
பூவனம் சுற்றி
பூவெழில் கிறங்கி
மதுகொண்ட மலர்முன்னே
மதுவுண்ணாது மயங்கிடுதே!
பாடத்திலக்கியம் பயின்ற
இளவல்கள்
பட்டம்பெற்ற பின்னரே,
இதோ!
உண்மையான இலக்கியத்தேடல்!


தற்கொலை வேண்டாமென
தாவிப்பிடிக்கிறது,
பனித்துளியைப் புல்நுனி!


கண்ணில் மண்தூவாது
களவாடும் கதிரிடம்
கத்தியின்றி ரத்தமின்றி
நீர்மீட்ட குளிர்காற்று!


பூச்சிகளின்
கால்களில் ஒட்டிச்சென்று
களவுமணம் புரியும்
மகரந்தங்கள்,
மணம்வீசும் மலர்களாய்!


சுற்றலென்பாரைப் பொய்யாக்கி
நிலையாய் பூமியும்
விழுந்தெழும் வெய்யோனும்
மந்திரவாதிகள்!


கயிறின்றி
கடலைக் கட்டியிழுக்கும் காற்று,
ஏதுமறியாததாய்
உடல்நுழைகிறது அப்பாவியாய்!


அடடா!
இன்னும் எத்தனை காட்சிகள்?
இந்தக் கவிதைகளில்!


இதக்காற்றின் இச்சையில்
இதழ்விரித்த மயில்தோகையென
கவியிச்சையில்
விரிகிறதே இமைத்தோகை!


காதலியிருப்பவனுக்கு
ஒற்றைக்காதலி!
காட்சிகளை ரசிக்கப்பழகியதால்,
ஒவ்வொரு கவிநூலும்
என்காதலி!
கவிதையில் காதலாகிப்போன
காதல் மன்னன் நான்!


- சரவணபெருமாள்

வெந்தணல் வீசும் காற்று!

வெந்தணல் வீசும் காற்று!


குற்றங்கள் ஏதும் செய்யவில்லை! - நாங்கள்
பெண்ணாய்ப் பிறந்ததே குற்றமம்மா! - எங்கள்
பால்முகத்தைக் கண்டோர் காலமெங்கே? - இன்று
பாலுறுப்பை நோக்கும் அவலமம்மா!


எவ்வுறுப்பு எதற்கு யாமறியோம்! - அதில்
நெருப்புக் குழம்பை ஊற்றுகிறார்! - நேற்றுதான்
பால்குடி பருவங் கடந்தோம் - தாயே!
காமத்துப் பால்தேடிக் கடத்துகிறார்!


வகுப்பறை சென்றே யாமமர்ந்தோம்! - அதை
பள்ளியறை ஆக்கும் ஆசிரியர்! - தாயே!
அப்பனே ஆசையில் அணைக்கும் காலமிது!
ஆசிரியன் மட்டும் விதிவிலக்கா?


பெண்ணுக்குப் பெண்ணே காவலென்றார்! - பொய்யே!
பேராசிரியையே தூது வந்தார் - ஐயோ!
இந்தக்கொடுமை பெண்ணிற்கு மட்டுமா? - இங்கு
மாணவனைக் கட்டும் ஆசிரியை!


எம்மேலே மட்டுந்தான் வெந்தணலா? - இல்லை!
எம்தந்தை மேலும் வெந்தணலே! - ஆமாம்!
விவசாயம் செய்யும் யாவருக்கும் - அந்த
அரசாங்கம் மூட்டும் வெந்தணலே!


- சரவணபெருமாள்

தமிழ்ப் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகள்!

தமிழ்ப் போர்வையில் திரியும் பிரிவினைவாதிகள்!


           பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உதயமானது என்று சொல்லப்பட்டாலும் கூட, அதனையும் உறுதியாய் சொல்ல முடியாத அளவிற்கு தொன்மையும் வன்மையும் மிகுந்தது, நம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி. ‘அறிவியல் உலகம்’ என்று இன்றைய உலகைச் சொன்னால் கூட, அது மூடத்தனம் என்றே குட்டு வைத்து விடுகின்றன, நம் முன்னோரின் விஞ்ஞானம் புகுந்துள்ள தமிழ் நூல்களும் தமிழரின் பழங்கால கட்டிடங்களும் ஆலயங்களும். அத்தகையதோர் தமிழ் மொழியை, நம் செம்மொழியை இன்று புல்லுருவிகள் போல, தமிழ் தமிழ் என்று பொய்க் கூப்பாடு போடும் சில அரசியல் கட்சிகளும், நேற்றைய மழையில் முளைத்த இன்றைய சில காளான்களும் தம் வயிற்றை நிரப்ப, தமிழின் அடையாளங்களைச் சிதைக்கும் வண்ணம் செயல்படுகின்றன. அதனைக் கண்டிக்கும் வகையிலும், உண்மையை உரைப்பதற்காகவுமே இந்தக் கட்டுரை.

           தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டுமாம்! ஆமாம்! இதில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்கப் போகிறது, இந்தத் தமிழ்நாட்டில்? ஆனால், அந்தத் தமிழர் யார்? என்ற ஒரு கேள்வி வருவதற்கான சூழ்நிலையினை தாங்களே உருவாக்கி, அதற்குத் தாங்களாகவே ஒரு விளக்கம் தருகின்றனர். தாம் தான் கடவுள் போலவும், தமிழர் உருவான போதே பிறந்து விட்ட மூதாதையர் போலவும், கையில் ஒரு சாதிப் பட்டியலைத் தாமாகத் தயாரித்து, இந்த சாதியினர் தமிழர், இந்த சாதியினர் தெலுங்கர், இவர் கன்னடர், இவர் மலையாளி என்றே பறை சாற்றி, தம் வயிற்றைக் கழுவ தண்ணீர் தேடித் திரிகின்றனர், இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள்.

           சாதியினை அடிப்படையாகக் கொண்டு, தம்மைத் தமிழர் என்றே, தாம் தான் கூவும் குயிலென்றே நினைத்துக் கொண்டு கரையும் காக்கைகளுக்கு, ‘சாதி’ என்ற வார்த்தையே தமிழ் இல்லை என்ற சேதி தெரியாமல் போய்விட்டதே! பாவம்! இதில் ஒரு நபர், இளைஞர். அவர் பெயர் பாரி சாலன். ஒரு ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழர் யார்? என்பதனை அறிய நிச்சயமாய் சாதி என்ற ஒன்று இருக்க வேண்டுமாம். ஒருவர் எந்த சாதி என்பதனை வைத்துத் தான் வைத்துத் தான் அவர் தமிழரா? என்பதனையே முடிவு செய்ய முடியுமாம்! எப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு இளைஞன் அவன்! இளைஞர்களின் முற்போக்கான சிந்தனைகளின் மத்தியில், ஒரு அவமானச் சின்னம் என்றே எனக்குத் தோன்றுகிறது!

           தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கர்கள் ஆந்திராவில் இருந்தும், கன்னடர்கள் கர்நாடகாவிலிருந்தும் இது போலே இன்னமும் சில வரலாறுகளை அவராய் உருவாக்கி, மிகைப் படுத்திப் பேட்டியளித்திருந்தார், அந்த மூடர். 1956-ல் இருந்து தான், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா. ஏன் இந்தியா முழுமைக்கும் 1956-ல் தான் மாநிலங்களே பிரிக்கப் பட்டன. அதற்கு முன் திராவிட நாடு, நம் நாடு என்ற தெரியாமல் போனது இந்த முட்டாள்களுக்கு! அத்தனை ஆதி கால வரலாறு பேசும் அவர்களுக்கு, இவ்வரலாறு தெரியாமல் போய் விட்டதா என்ன?

           தமிழர், திராவிடர் என்ற இரு சொற்களும் தமிழரையே குறிக்கும் என்று அன்றே கூறிச் சென்றுள்ளார், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று குரல் கொடுத்த அறிஞர் திரு. இராபர்ட் கால்டுவெல் அவர்கள். மேலும், ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெறுவதற்கு அம்மொழி, தன் கிளைமொழிகளுக்குத் தாயாக விளங்க வேண்டும். இந்த விதி தமிழ்மொழிக்கு கச்சிதமாய் பொருந்தி உள்ளதாக, நமது மூதாதைக் கவிஞர்களும் மொழியியல் வல்லுநர்களும் தெரிவித்து உள்ளனர். அதாவது, தமிழ் மூலமொழி அல்லது தாய்மொழி எனவும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தமிழின் வழிமொழிகள் அல்லது கிளை மொழிகள் எனவும் விளக்கப் பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு தமிழ், உயர்தனிச் செம்மொழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது உண்மை தானே!

           ஆக, அங்ஙனம் நோக்கின், இன்றைய தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ், சில இடங்களுக்கு ஏற்ப சிறு மாறுதல்களோடு நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் என்ற வழங்கப் பெறுவது போலத்தான், பழைய திராவிட நாட்டில் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் இருந்திருக்கும். ஓய்வற்ற காலச்சக்கரத்தின் சுழற்சியினால், பெரும் மாற்றங்கள் கண்டு இன்று அவை பெரும் வித்தியாசப் பட்டிருக்கலாம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்தான், இங்கு அவற்றிற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லாதது போலான மாயையகள் உருவாகியுள்ளன; அல்லது உருவாக்கப் பட்டுள்ளன. ஆக, அவ்வாறு சிந்திக்கையில், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் போலவே அவையும் தெலுங்குத் தமிழ், மலையாளத் தமிழ், கன்னடத் தமிழ் என்றே அன்று இருந்திருக்க முடியும். இது குறையா? இது தமிழின் தொன்மைக்குப் பெருமை!

           மேலும், பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர் போன்ற மொழிப்போர் வல்லவர்களும், தமிழ்ச்செம்மொழித் தன்மைக்கு மேற்கண்ட தாய்மொழி, கிளைமொழி என்ற விதியினை ஆராய்ந்து உரைத்த கூற்றுகளையும் நாம் உற்று நோக்க வேண்டும்.

           இத்தகைய மாபெரும் சரித்திரங்களைச் சுமந்த, வரலாற்றுச் சாதனைமிக்கத் தமிழ்ச் செம்மொழியை, தம் சுய லாபத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, முட்டாள் தனமான கருத்துகளைத் தெரிவித்து, செம்மொழித் தகுதியினை அவமானப் படுத்தும் செயலைச் செய்வதுடன், அடுத்த தலைமுறைக்கும் தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து, அதனோடு நில்லாது, சாதிச் சாயலும் பூசி, ஒன்றாய், நண்பர்களாய், உறவினர்களாய் வசிக்கும் திராவிடர்களுக்குள்ளே, தமிழருக்குள்ளே அடங்கியுள்ள இவர்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்து, பகைமையை வளர்த்து, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் சிந்தும் குருதியில் குளித்திட முனைகின்றனர்.

           மேலும், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குற்றமாக, அந்த பாரி சாலன் என்ற வடிகட்டிய முட்டாள், தமிழர் என்ற போர்வையில், நம் பாரத விடுதலைப் போராட்ட வீரரான, மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனைக் கூட தவறாய் சித்தரித்து, மொழி வேற்றுமையைத் தாண்டி, கொச்சைப் படுத்தி ஒரு பேட்டியளித்துள்ளார்(ன்). வேறு எந்தெந்த பேட்டிகளில் அல்லது மேடைகளில் எத்தனை தியாகிகளையும் வீரர்களையும் அவமானப் படுத்திப் பேசியிருப்பானோ? தெரியவில்லை!

           உணர்ச்சி பொங்கப் பேசும், திரு.சீமானுடைய பேச்சுக்களைக் கேட்க கடைவரிசை இடமாவது கிடைக்குமா என்பது போல் ஆவல் கொண்டிருந்த என்னை, அவருடைய இதே கொள்கையும், அரசியல் சுயலாபிகளாய்ப் போய் விட்டதனைப் போன்ற காரணத்தினாலும், மொழி வேற்றுமை புகுத்தும் காரணத்தினாலும், அதனையும் தாண்டி பகைமை வளர்க்கும் தொனியில் இருப்பதானால், அதுவும் உண்மையினைத் திரித்துச் செயல்படுவதனால், அவரை வெறுத்த என் போன்ற தமிழ்க் கவிஞர்களும், இளைஞர்களும் ஏராளம்.

           அடேய்! முட்டாள் மூடர்களே! என் தமிழ்த்தாயினையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் இவ்வாறு தவறாய் அரங்கேற்றுவதற்கும், தம் தாய் தந்தையையே தவறாய் அரங்கேற்றுவதற்கும் வித்தியாசமே இல்லையடா!. திருந்துங்களேனடா! நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதனை உணருங்களேனடா!


- கவிஞர் சரவணபெருமாள்

முகவரி தேடும் முழுமதி!

முகவரி தேடும் முழுமதி!
 

அடக் கடவுளே!
ஆண்களுக்கு
பாதுகாப்பே இல்லையா?
முன்னே சென்றாலும்
பின்னே சென்றாலும்
பின் தொடர்கிறது;
முழுமதி! - என்
முகவரி தேடி!


கண்ணடிக்கும்
வெண்ணிற மான்கள்
வானத்து மீன்கள்!
அவற்றை விடுத்து
கருப்பு நிலாவைக்
காதலிக்கிறதே,
வெண்ணிற நிலா!


காதலைச் சொல்ல
காலம் பார்த்தேன்!
அந்நேரம்
ஆலையின் நச்சால்
அசுத்தமாய் மரங்கள்!
நஞ்சேறி நரன்கள்!


மரமும் மாள
ஓசோன் சிதைய
ஓட்டையில் புகுந்த புகை
வெள்ளழகியை
புற்றாக்கலாம்!


சிந்திக்கும் போதே
சிறைபிடித்தது எம்மையும்
புற்றுநோய்!
விழித்தோம்!
வினந்தோம்!
ஆயுதம் இல்லை!
அடிகளும் இல்லை!

அந்தோ! எம்மை
ஆட்கொண்டது
கூரிய குண்டு!


சிவந்த வானமே!
பார்!
சிவந்தது மண்!
என் உதிரத்தால்!
என் முழுமதியிடம் சொல்!
அவள் புகுந்த நெஞ்சில்
புகுந்தது எச்சில்!


பணம் கேளோம்!
பதவி கேளோம்!
பாதிப்பின் நிவாரணம் கூட கேளோம்!
பதித்தனர் எம்மில்
பயங்கரக் குண்டுகளை!


முழுமதியே!
என் முகவரி தேடாதே!
உன்னையும் உடைக்கும்
பணம் விளைந்த பூமி இது!
நீயேனும்
நிம்மதி கொள்!


- சரவணபெருமாள்

அவளும் நானும்!

அவளும் நானும்!


அவளும் நானும்,
வானும் மண்ணும்!
அவள் வான்!
நான் மண்!
வானம் சிந்தும் மழைத் துளிக்காய்
அவள் சிந்தும் காதல் துளிக்காய்
காத்துக் கிடக்கும்
வானம் பார்த்த வயல்வெளி நான்!


அவளும் நானும்,
நிலவும் இரவும்!
அவள் நிலவு!
நான் இரவு!
நிலவு ஏற்றி வைக்கும்
நிலவொளிக்காய்
அவள் ஏற்றி வைக்கும்
என் வீட்டு விளக்குக்காய்
காத்துக் கிடக்கும்
தினந்தோறும் வந்து நிற்கும்
இரவு நான்!


அவளும் நானும்
கடலலையும் காலடியும்!
அவள் கடலலை!
நான் காலடி!
காலடி தொட்டிடும்
கடலலையின் தழுவலுக்காய்
அவள் விழியலை
என் விழி மோதிடும் ஆவலுக்காய்
காத்துக் கிடக்கும்
இதயத்தின் காலடி ஓசை நான்!


அவளும் நானும்
பூவும் காற்றும்!
அவள் பூ!
நான் காற்று!
பூ மணம் நுகர
பூவுக்குள் நுழைவதற்காய்
அவள் கரம் பற்ற
அவள் மனம் நுழைவதற்காய்
காத்துக் கிடக்கும்
என்னுடைய மூச்சுக் காற்று நான்!


அவளும் நானும்
முகிலும் மலையும்!
அவள் முகில்!
நான் மலை!
முகிலால் குளிர
முகிலின் மழைக்காய்
அவள் பார்வை முகிலின் குளிச்சிக்காய்
காத்துக் கிடக்கும்
மலைக் குன்றுகளின்
தலை உச்சி நான்!


அவளும் நானும்!
நானும் அவளும்!
அவள் நான்!
நான் அவள்!
ஆழமான மனதில்
நுழைந்திட்ட இம்சைக்காய்
மூடி வைத்த இதயக்கதவை
உடைத்தெறிந்த காதலுக்காய்
காத்துக் கிடக்கும்
நானும் அவளும்!


அவளும் நானும்
அமுதும் தேனும்!


- சரவணபெருமாள்

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்(16 வார்த்தைகள் மட்டும்)

 

அறுத்தாள்;
தொப்புள் கொடிதான்!
முறைத்தாள்;
சாப்பிடச் சொல்லித்தான்!
கடித்தாள்;
விரல்நுனி நகம்தான்!
எறிந்தாள்;
கைகளாலுன் கழிவுகள்தான்!
தவறுகளுக்குத் தண்டனை,
முதியோர் இல்லம்!


- சரவணபெருமாள்

உயிரில் கலந்த உறவே!

உயிரில் கலந்த உறவே!
 

உயிர்க்கும் முன்பே எனையே
உயிர்மெய் சுமந்த தாயே!
உயிரை யொழிக்குந் தொழிலே
உடனே முடக்கச் சொலலே!


உரிமை யெமக்கும் உளதே!
உயரிய பணிவாய் சொலலே!
உண்மை யொளித்த உலகே!
உயிரைக் குடித்த குழலே!


உதிர்த்த நாய்கள் வெறியே
உதிரம் உதிர்க்குங் குறியே!
உன்னிட மருந்தித் தானே
உருத்தது பாலும் சிவப்பாய்!


என்னைத் துளைத்துத் தானே
என்கீழ் மண்ணும் சிவப்பாய்!
வெண்ணிற உப்பளம் நனைந்து
செந்நிறச் செம்மண் நிலமாய்!


வந்தோர் போனோர் சுடார்
வதைத்த அரக்கர் எமார்
உயிரில் கலந்த உறவே!
உயிரை எடுத்த ததுவே!


- சரவணபெருமாள்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!




என்னவளே! எனக்கானவளே!
ஏதோவொரு மூலையில்
எனக்காய் பிறந்தவளே! - நீ
எங்கே இருக்கிறாய்?


முகமும் பார்த்தது இல்லை!
முழியில் விழுந்ததும் இல்லை! - ஆயினும்
முழுமதியெனவே ஒளி வீசுகிறது,
அன்பே! திருமண ஞாபகம்!

எப்படி இருப்பாளோ? எவளாய் இருப்பாளோ?

மல்லிகா என்று பெயர் வைத்தாலும்
மங்கையவள் மணப்பது இல்லை!
மண் என்றே பெயர் வைத்தாலும்
மல்லியின் நறுமணம் மாறுவது இல்லை!
மல்லியின் மணமடி, என் மனம்!
உன்முகம் பாராமலே,
உன்மேல் ஆசை வைத்தேனடி,
என் வருங்கால ராஜகுமாரி!


எங்கிருக்கிறாய்?
என் அருகிலா? தொலைவிலா?
நீயாவது என்னைக் கண்டால்,
காதல் வந்தால், சொல்லி அனுப்பு! - இன்னொரு
கம்பன் உருவாகட்டும் நம் காதலால்!


- சரவணபெருமாள்

விவசாயி

விவசாயி



விதைத்தவர்
வானை அண்ணார்ந்து பார்க்கிறார்
வானுயர கட்டிடம்!


- சரவணபெருமாள்

கரையும் நொடிகள்

கரையும் நொடிகள்



திரைபோடத் திரியாது நேரக்குறி யோட்டம்!
நரையான நரனுக்கும் காத்திரா வோட்டம்!
கரைகின்ற நொடிக்கீடாய் திரைகடலும் நீயோடி
கரைதொடு வாழ்வில்! வழிவிடு விரையூர்தி!


- சரவணபெருமாள்

Wednesday, May 16, 2018

மௌனமொழியே போதும், காதலுக்கு!

மௌனமொழியே போதும், காதலுக்கு!
 

ஆழம் இல்லை!
அகலம் இல்லை!
ஆனால், சமுத்திரம்!
எச்சரிக்கை பலகையில்லை!
எதேச்சையாய் நோக்க
எட்டி இழுத்துவிட்டது என்னை,
விழி அலை!

சத்தம் இல்லை!
சலனம் இல்லை!
எதிர்நீச்சல் போட்டேன்!
கடல்கன்னிக்கு
கண்ணி வைத்து
கைதியாக்கினேன்!

எம் காதல்கோட்டையில்
செவித்தூதனும்
நாத்தூதனும்
விடுப்பெடுக்க,
விழித்தூதன்
இமைகளுக்கு விடுப்பளித்தான்!
தமிழ்மொழியின் இன்பரசம்
விழிமொழி தொடுவதால்,
செவியையும் நாவையும்
பணிநீக்கமே செய்திடலாம்!

அதோ!
வரவேற்பு வசனமின்றி
வரும் நிலா,
என்னவளின் அழகு!
அதன் மௌனஒலிகள்
இதயம் துளைக்க,
இருள் தொலையும்!

இம்மௌனமே
எம்காதல் மூச்சாக,
பேச்செதற்கு?
நிசப்தம் காதல்வசம்!

- சரவணபெருமாள்

Tuesday, May 8, 2018

மஞ்சக் கயிறு போதும் - கிராமியக்கவிதை

மஞ்சக் கயிறு போதும் - கிராமியக்கவிதை


அன்பாகவே வம்பிழுக்கும்
ஆசை மச்சானே! - ஒரு
பூஞ்சோலையே பூக்கூடையை
சுமப்பதைப் பாரு!

சுருட்டி மடித்து
கட்டிவைத்த காகிதப்பூவும் - என்
இடுப்பில் இறக்கி வைத்ததனால்
மணப்பதைப் பாரு!

உன்வீட்டுத் தெருவில்
பூவைவிற்று முடித்திட்டபோதும் - என்
காலில் வேர்கள் முளைத்ததுபோல்
நிற்பதைப் பாரு!

பெரியவீட்டு முதலாளியும்
பெண்கேட்ட போதும் - என்
மனசு இறங்கிப் போகலியே
காரணம் யாரு?

மனசுக்குள்ளே உன்னைக்கட்டி
வாழுறேன் நானும் - அங்கே
வேறு யாரும் நுழையப் பார்த்தால்
சாவேனே நானும்!

காடுவேணாம் கரையும்வேணாம்
நகை நட்டு வேணாம் - நீ
கட்டிக் கிறேன்னு ஒரு வார்த்தை
சொல்லிடு போதும்!

பெரிய வேலை வேணுமுன்னு
கேட்கலை நானும் - மாமா
காட்டு வேலை பார்த்து சோறு
பொங்குவேன் நானும்!

தங்கத்திலே தாலிகட்டி
போட்டிட வேணாம் - ஒரு
நூலை மஞ்சளின் நனைத்துப் போடு
போதுமே மாமா!

- சரவணபெருமாள்

Saturday, April 28, 2018

கனவுக்குள் ஒரு பூகம்பம்

கனவுக்குள் ஒரு பூகம்பம்


உடற்விழி திறந்த உயிரெனவே - நான்
      உளவிழி திறவ பள்ளி சென்றேன்!
உலகுக்கே விளம்பரம் இலவசக் கல்வி
      உண்மையில் அதுவொரு வியாபாரமே!

தாயவள் மடியிலே நித்தமும் உறங்கி
      தடையில்லாத் தூக்கமும் நானுங் கண்டேன்!
தவறித்தான் போனதே தாயவள் அன்பு
      தட்டிப் பறித்தது விதிச்சதியே!

வாழ்வினைக் கடத்திட வேலைக்குச் சென்றிட
      வந்து போனேன் நான் கல்லூரிக்கு!
பட்டமும் வந்தது! சான்றிதழ் வந்தது!
      எப்போது வேலை வருமெனக்கு?

கனவிலே பூகம்பம் தாங்கிய படியே
      கால்களும் நகர்ந்தன நிலவழியே! - அங்கே
வானையே நம்பியே வயக்காடு வீற்ற
      விவசாயி வாழ்வு பேரழிவே!

- சரவணபெருமாள்

பயிர் செய்ய விரும்பு

பயிர் செய்ய விரும்பு


 
மாட்டோடு அதிகாலை பயிர்க்காடு!
    காட்டூடே மரமெங்கும் புள்கூடு!
கட்டிடங்கள் நாட்டிடவே நரமாடு
    வெட்டமரம் காடெல்லாம் சுடுகாடு!
நீரின்றி வாடாப்பயிர் அந்நாளே!
     நீரின்றி நிலவெடிப்பு இந்நாளே!
பறந்தன நடந்தன கண்டதெல்லாம்
    இருப்பது திரைப்படம்தான் இந்நாளே! 

அனைவருமே அலுவலகம் சென்றாலே
    அறுவடைக்கு உழவோட்ட ஆரங்கே?
மனைநிரம்ப பணமெல்லாம் கிடைத்தாலும்
    உனைமாற்றி உழுதிடவே துணிவாயோ?
முனையாது போனாலும் போயேண்டா!
    மழைமுடக்கும் மரமறுக்கும் பணியேனோ?
மனையருகே மரமொன்று நடுபோதும்!
    மிச்சமுள்ள உழவனுக்கு மழைவரட்டும்!

காடழித்த வீடழிக்குமா நின்பசியை?
    நாடோடிய பணமழிக்குமா நாருசியை?
எண்களையே கொண்டதுவும் வெறுந்தாளே!
    நதிவறண்டு பஞ்சம்வரும் அந்நாளே!
உழுவதிலே மலைப்பென்ன? குறைவென்ன?
    உயிர்காப்பவன் உயிர்காப்பான் உழவனன்றோ?
போதுமடா! ஏடெடுத்து நிழலாடியது!
    உழுதிடுவோம்! பயிர்செய்து உயிர்காப்போம்! 

-    சரவணபெருமாள்

Thursday, April 26, 2018

விளையாட்டாய்ப் பசியென்றேன் அம்மா!

விளையாட்டாய்ப் பசியென்றேன் அம்மா!

குருதி வெளுத்து ஊட்டினாயே!
        குறைக ளின்றித் தேற்றினாயே!
விதிகள் சதிகள் செய்திடவே
        வீதி வந்து நாமமர்ந்தோம்!
சேலைக் குடையே வெயில்மழைக்கு!
        சோலைக் குயில்நீ நானுறங்குதற்கு!

கொஞ்சங் கிடைத்த சோற்றையுமே
        கொஞ்சி ஊட்டியுன் பசிமறப்பாய்!
இன்று ஏதும் இல்லையென்றால்
        ஒன்றும் இல்லை தாய்ப்பசுவே!
கலங்காதே! விளையாட்டாய்ப் பசியென்றேன்!
        உன்முகத்தைப் பார்த்தேநான் பசிமறப்பேன்!

- சரவணபெருமாள்

சிறுமொட்டும் பெருநெருப்பும்

சிறுமொட்டும் பெருநெருப்பும்


பாரதி பிறந்த பூமியிலே - யாமும்
பிறந்திட்டோ மென்றோம் கர்வத்திலே! - அதை
பாதகர் காமுகர் காமத்திலே கூடி
பாருக்கு முன்னே உடைத்தனரே!

நேற்றுதான் பெய்த மழையினிலே - இங்கு
அரும்பிய மொட்டுகள் செடியினிலே! - ஐயோ
பூத்து மணங்கூட பரப்பவில்லை - வண்டு
மொட்டினைக் குடைந்து கசக்கிடுதே!

பால்மணம் வீசும் பவளக்கொடி மேலே
காமத்துப் பாலினைத் தேடுதம்மா! - ஐயோ
மொட்டிதழ் படிந்த பனித்துளியில் - பல
முதலைகள் குளித்திடத் துடிக்குதம்மா!

பிஞ்சவள் முகங்கண்ட ஐந்தறிவு நாயும்
கொஞ்சிடும்! ஆபத்தில் குரைத்திடுமே! - இந்த
ஆறறிவு மனித மிருகங்கள் செயல்
வேலியே பயிரை மேய்ந்தகதை!

புனிதமே கெட்டுப் போய்விடும் என்றே
அடைத்திட்டார் பெண்ணுக்கு ஆலயத்தை! - இங்கு
கருப்பை வளரா பனிப்பூவிதழ் - ஐயோ
பொசுங்கிய தீட்டுக்கு யார்பொறுப்பு?

- சரவணபெருமாள்

Wednesday, April 25, 2018

என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்

என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்

வெய்யோனே! வேளை தவறாதோனே!
           வெளிநாடு போனவனைப் பார்த்தாயோ?
நிலவோனே! நித்திரை ரசிப்போனே!
           நிதமுணவு உண்பானோ? அறிவாயோ?
மழைமகளே! மகனவனைக் கண்டாயோ?
           மழைசேராதே! தீண்டாது விடுவாயோ?
வளியோனே! விழிப்பார்வை மறைந்தோனே!
           வந்தமாசு வடித்தேயவன் மூச்சாவாயோ?

காடுகரை காலிறக்கி காசாக்கி
           கடல்தாண்டி அனுப்பினேனே ராசாத்தி!
கைபேசி ஒன்றனுப்பி அவன்பேச
           கண்ணீர்தான் வந்ததடி, நாவடக்கம்!
கன்னத்தில் கைவைத்து பகலெல்லாம்
           கண்ணிமையாது கைபேசி பார்த்தேனே!
நள்ளிரவில் அடித்தமணி அடங்கிடவே
           நுன்மகனிடம் அதைக்காட்ட நிறுவனமாம்!

வீடுண்டு! காடுண்டு! அன்புத்தோழியே!
           உடலுண்டு! உயிருண்டு! அவனில்லையே!
வெளிநாடு அனுப்பிய வீராப்பெனக்கு
           அந்திமாலை வந்ததுமே அடங்கிப்போனதே!
அய்யய்யய்யா! அம்மம்மம்மா! அப்பப்பப்பா!
           என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்!
வந்திடுவான்! கண்டிப்பாக வந்திடுவான்!
           வாடா!தங்கமே! வருவான்! அவன்வருவான்!

- சரவணபெருமாள்

மலர்களைக் காப்போம்

மலர்களைக் காப்போம்


மலர் காக்க மன்றம் வைத்தால்
மதம் பிடித்த மிருகக் கூட்டம்
மலரும் முன்னே மொட்டு பிய்த்து
மணம் நுகர மதிகெட்டுத் திரிகிறதே!

வலியாது தேனுறிஞ்சும் வண்டு கூட
வழிவிடா மலரிதழைத் தீண்ட லாகாது!
வலுவோடு வஞ்சிதழை வாழ் வழிக்க
வந்திட்டால் வழிமறித்து வேலெனவே தாக்கிடுவோம்!

- சரவணபெருமாள்

மனிதம் மறந்தார்

மனிதம் மறந்தார்
ஏனென்று தெரியாது!
கள்ளங்கள் அறியாது!
கண்சிமிட்டு போதும்;
கன்னக்குழி சிரிப்பு பரிசாகும்!

காதலென்று தெரியாது!
காமமென்று அறியாது!
சுமக்கின்ற முத்தங்கள்
கபடமென்று அறியாது!
கயமைத்தனம் புரியாது!

பிஞ்சுமுகம் நோக்கியவர் 
பித்தாய்த்தான் போனதுண்டு!
கலிகாலம்!
நஞ்சுமுகம் உடுத்தவரே
பஞ்சணைக்குப் பிஞ்சழைத்தார்!

பால்முகத்தை காமப்பாலாக்கி
பலியாக்கி
மனிதம் மறந்தார்!

- சரவணபெருமாள்

Sunday, April 22, 2018

பனிப்பூக்கள்

பனிப்பூக்கள்


பள்ளம் நோக்கிப் பாயும் நீர்,
நுனிப்புல்லின் உச்சியிலும்
பனிப்பூவிதழ் மேல்தட்டிலும்
அமர்ந்து
இறங்க மறுப்பதேன்?

வடிவமற்ற நீர்மம்
சிறு உருண்டைகளாய்
பூ மடல்களின் மேல்
வடிவம் பெற்றது எப்படி?

தூசியின் பாரமும்
தாங்காத புல் நுனி,
விண்பொருள் பனியை
தாங்கிப்பிடித்தும்
தலை நிமிர்ந்து நிற்பதன்
இரகசியம் தான் என்ன?

வேரில் உறிஞ்சிய நீரா?
வானம் எறிந்த பனியா?
பூக்களின் நடுவில்
தேனாறு!
அந்தப் பூக்களைச்சுற்றி
வண்டுகள் ஒரு நூறு!

தேன் மட்டுமே
களவாடிச் செல்லும் வண்டுகள்
பூவைக் காயப்படுத்தியதில்லை!
உன் கூந்தலின் மணத்திற்கு
பூவையே களவாடும் கன்னியே!
மணம் மட்டும் களவாடி
பூவை விட்டுவைக்கும் வித்தை
உன்னிடம் இல்லையோ?

பெண்ணைப் பூ என்பார்!
தினம் ஒரு பூ ஒடித்து
தன்னினத்தையே
அழித்தொழிக்கும்
பூவரக்கியடி நீ!

அதென்ன?
கல்லின் மனதிற்குள்
திடீரென
இத்தனைக் கேள்விகள்!
இத்தனை ரசனைகள்!
கேள்விக்கணை தொடுக்காதே?

ஆம்!
இரும்பு இதயம்
கரும்பாய் மாறிவிட்டது!
காதல் வயப்பட்டது!
பெண்ணே!
ரசனையே அற்ற என் விழிகள்
ஒவ்வொரு அசைவினையும்
ரசிக்கத் தொடங்கி விட்டது!
பனித்துளியிலிருந்து
பனிப்பூவிலிருந்து
பனிமலை வரையிலும்!
பார் வியக்கும்
வான்தொலைவு தாண்டியும்!

இன்னும் என்ன சொல்ல?
நீ பூ!
நான் பனி!
விழுந்திட்டேன்!
ஆதலால்,
நாம் பனிப்பூ!

- சரவணபெருமாள்

வாழ்க நம் நட்பு!

வாழ்க நம் நட்பு!

ஓடும் மேகம்
ஓரிரு நொடி நின்று
நம்மை வேடிக்கை பார்க்கும்;
நேசம் நிறைந்த நட்பு வாழும்
இவ்விடம்
மழை பொழிவோமென!

வருவதற்கு
வாகனம் இருந்திருந்தால்
வானத்துச்சந்திரன்
நட்சத்திர நட்பை முறித்து
நம்மிடம் வந்திருப்பான்!

எதிர் வந்த எமன் கூட
உண்மையான நண்பர்கள்
வாழட்டுமென
ஆயுட்காலம் நீட்டிச்செல்வான்!

நாலாபுறம் சிதறும் குண்டுகள்
நட்பிருந்தால்
நலிந்து போயிருக்கும்;
அவர்கள்
நம்மைப்பார்த்து
கற்றுக்கொள்ளட்டும்!

வா நண்பா!
வாழ வேண்டும் நூறு ஆண்டு!
நீ மட்டுமல்ல;
நம் நட்பும்!
வாழ்க பல்லாண்டு!

- சரவணபெருமாள்

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

கரையைத் தாண்டும் கடல்நீரும்
          கட்டுண்டு கிடந்திடும் நாள்பல!
கடலைத் தாண்டிக் கண்டந்தாவும்
          கன்னித்தமிழ் கட்டிட யார்உல?
குகைகளில் நுழைந்து பாரும்;
          மலையெங்கும் எந்தாய்த் தமிழே!
தரையைக் குடைந்து பாரும்;
          மட்காத எந்தமிழ்ச் சுவடிகளே!

மரத்தில் பிறந்த பிராணம்
          இன்றியும் வாழ்வோம் ஓரிருநொடி!
உயிருள் உறைந்த தமிழும்
          இல்லையேல் முடிந்திருக்கும் மரணம்!
ஊமையாய்ப் பிறந்தும் இருந்தால்
          உயிரை என்றோ மாய்த்திருப்போம்!
உன்னதத் தமிழை உச்சரியா
          உயிரும் இருந்து என்னபயன்?

ஊமையாய்ப் பிறப்பது விதியேயென்றால்
          மாடாய்ப் பிறந்து அம்மாவென்போம்!
மரமாய்ப் பிறப்பது உறுதியென்றால்
          தமிழ்க்கவி புரளும் காகிதமாவோம்!
சொர்க்கத்தில் தமிழ்மொழி இல்லையென்றால்
          முக்தியும் வேண்டுடாமென்றே பிறப்போம்!
மறுபடி பிறப்பு தமிழில்லையென்றால்
          மறுநொடிமாண்டு தமிழனாய்ப் பிறந்திடுவோம்!

- சரவணபெருமாள்

Saturday, April 21, 2018

கைகளுக்குள் கை

கைகளுக்குள் கை

பெற்றார் கரத்துள் கைகள் புதைத்தால்
சுற்றும் நோக்கோம்! ஏதும் கேட்கோம்!
கடலும் மிதிப்போம்; படகென அவர்கை!
நெருப்பும் உடுப்போம்; நனைக்கும் அன்புமழை!

கற்றல் நேரம் கரங்கள் பிடித்து
தேற்றல் அவரே கற்றேன் எழுத்து
சிற்றாய் நடக்க பற்றிய கரங்கள்
முற்றிய போதும் கைதியாய் அடைக்கும்!

தாயுந் தந்தை தங்கை தனயன்
நோயுந் தீரும் ஒன்றிட அன்பில்
யாரும் அடிக்க புகாரும் அளிப்போம்!
தாயிடம் தந்தை தாய்க்குத் தலைகீழ்!

- சரவணபெருமாள்

விளக்கம்:

பெற்றோருடைய கைகளுக்குள் எங்கள் கைகள் புதைந்து இருந்தால் (அவர்கள் எம் கைகளைப் பிடித்திருந்தால்), சுற்றி நடப்பது என்னவென்று பார்க்க மாட்டோம்; ஏன் எதற்கு என்று கேட்க மாட்டோம்.  கடலையும் மிதித்து உள்ளே நடப்போம். படகென அவர்கள் கை இருக்கும் தைரியமே! நெருப்பையும் ஆடைபோல் உடுப்போம், அவர்களின் அன்பு மழை நனைத்துவிடும்! (அன்பு கொண்ட அவர்கள் எப்படியும் அணைத்துவிடுவர் என்ற தைரியமே!)

பாடங்கள் கற்க ஆரம்பித்த காலம், எம் கரங்களைப்பிடித்து, எழுதக்கற்றுக் கொடுத்து தேற்றியவர் அவர்களே! அவர்களால் தான் எழுத்துக்களை எழுத எளிமையாய்க்கற்றோம். சிறுகுழந்தையாய் இருக்கும் போது, நடைபழக என்னைப்பற்றிய கரங்கள், முற்றியவன் போல் ஆன போதிலும், விட்டுவிடவில்லை. கைதி போல் கரங்களுக்குள்ளே வைத்திருக்கிறார்கள்.

தாய், தந்தை, தங்கை, தனயன் என எல்லோரும் ஒன்றாய் அன்பில் கலந்து மகிழ்ச்சியாய் இருந்தால், நோயெல்லாம் தீரும். எம்மை யாராவது அடிக்க வந்தால், உடனே புகார் அளிப்போம். எப்படியென்றால், தந்தை அடித்தால் தாயிடமும், தாய் அடித்தால் அதையே தலைகீழாய் தந்தையிடமும் சென்று புகார் அளிப்போம்

Friday, April 20, 2018

தனிமையின்றி வந்துவிடு!

தனிமையின்றி வந்துவிடு!


தனிமையில் இனிமை கனியுமா பெண்ணே?
நிலவின் தனிமை அழகென்னும் உலகம்,
நிலவின் சோகம் அறிந்தது இல்லை!
நீயில்லா என்சோகம் நீயேயறிவாய் வந்துவிடு!
 
- சரவணபெருமாள்

தாய் மண்ணே வணக்கம்-தமிழ் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்-தமிழ் மண்ணே வணக்கம் 


தாய் மண்ணே வணக்கம்
         தேய் வில்லை உனக்கும்
சேய் கோடி இருக்கோம்
         நாய் போலே இருப்போம்
வாய் சொல்லும் உன்சொல்
         மெய் வீழும் உன்கால்
மாய் வுண்டு எமக்கே
         சாய் வில்லைத் தமிழே

ஓர் எழுத்தும் ஒருபொருளே
         ஈர் அடிகள் இவ்வுலகே
ஊர் வந்த மேநாட்டார்
         பேர் மாற்றித் தமிழானார்
பார் மருண்ட பரங்கியர்
         நேர் நில்லார் பாரதிக்கு
ஏர் ஓட்டோன் நாவிலும்
         தேர்ந் தெழுமே நாட்டுப்புறம்

குமிழ் போலே வெடியாது
         சிமிழ் போலே குறுகாது
உமிழ்த் தேனே அஃதேயது
         அமிழ் செயும் அதேயது
அமிழ் தம்தான் உண்டீரோ
         தமிழ் மாந்தர் உண்டவரே
அமிழ்ந் தோமே உன்னுள்
         தமிழ் மண்ணே வணக்கம்

- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...