Thursday, April 26, 2018

சிறுமொட்டும் பெருநெருப்பும்

சிறுமொட்டும் பெருநெருப்பும்


பாரதி பிறந்த பூமியிலே - யாமும்
பிறந்திட்டோ மென்றோம் கர்வத்திலே! - அதை
பாதகர் காமுகர் காமத்திலே கூடி
பாருக்கு முன்னே உடைத்தனரே!

நேற்றுதான் பெய்த மழையினிலே - இங்கு
அரும்பிய மொட்டுகள் செடியினிலே! - ஐயோ
பூத்து மணங்கூட பரப்பவில்லை - வண்டு
மொட்டினைக் குடைந்து கசக்கிடுதே!

பால்மணம் வீசும் பவளக்கொடி மேலே
காமத்துப் பாலினைத் தேடுதம்மா! - ஐயோ
மொட்டிதழ் படிந்த பனித்துளியில் - பல
முதலைகள் குளித்திடத் துடிக்குதம்மா!

பிஞ்சவள் முகங்கண்ட ஐந்தறிவு நாயும்
கொஞ்சிடும்! ஆபத்தில் குரைத்திடுமே! - இந்த
ஆறறிவு மனித மிருகங்கள் செயல்
வேலியே பயிரை மேய்ந்தகதை!

புனிதமே கெட்டுப் போய்விடும் என்றே
அடைத்திட்டார் பெண்ணுக்கு ஆலயத்தை! - இங்கு
கருப்பை வளரா பனிப்பூவிதழ் - ஐயோ
பொசுங்கிய தீட்டுக்கு யார்பொறுப்பு?

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...