Sunday, December 17, 2017

கன்னம்

கன்னம்
கன்னங்கள்
அழகுசாதனம் தேவைப்படாத
கலைச்சின்னங்கள்!

தொட்டால்தான் தெரியுமா
மென்மை?
பாப்பாத்தி பட்டுப்புழுத்தேகம்
கன்னம்!

ஒளியின் குறியெல்லாம்
கன்னம்தானோ?
கன்னத்தின் உச்சிகள்
கூடுதலாய் மின்னுகின்றன
புகைப்படத்தில்!

உன்னையே சுற்றித்திரியும்
என் கண்கள்
கன்னத்தில் மட்டும்
கூடுதலாய் தங்கிக்கொள்கின்றன!

என்நகை வாழ்வது
உன் புன்னகையில்!
அந்நேரம் வாழ்கிறது
ஒரு குழி
உன் கன்னத்தில்!

அந்த கன்னக்குழி
என் புதைகுழி!
முத்த முயற்சியில்
என்னை
புதைக்காமல் விட்டால் சரி!

கன்னம்
கலிக்கிண்ணமோ?
கண்டவுடன் ஆசை
கடித்திட அல்ல;
கிள்ளிடவும் உரசிடவும்
கிட்டாதோ வாய்ப்பு
என்றுதான்!

கன்னம்
மெல்லிய இசைக்கருவி!
விரல்கள் பட
சிணுங்கல் ஓசை!
மெல்லிசை!

மஞ்சளின் மருத்துவம்
நான் அறியேன்!
மங்கையின் கன்னத்தில்
குழைந்தது அழகு!
அட்டகாசமான அழகுசாதனம்!
மஞ்சள்!

காதோரம் வழிந்த முடி
கன்னத்தை கண்டதும்
குறைகொண்டன,
கருப்பாய் பிறந்தனவாம்!

கன்னம்
உறைந்து நின்ற மேகம்!
உதட்டின் எண்ணம் எல்லாம்
அங்கு தான்!
முத்தம்

நாக்கைத்துழாவ
வெளிக்குவியும் கன்னம்
அட்டக்கத்தி மந்திரம்!
வெட்டவில்லை!
ஆனால் காயம்!

கன்னம்
இமாச்சலப்பிரதேசம்!
ஆப்பிள் விளைச்சல்
அமோகம்!

ஆப்பிள்
அதிகம் சாப்பிடச்சொல்லி
எனக்கு
மருத்துவர் உபதேசம்!
என்ன விலை?
சொல், தருகிறேன்...

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...