Monday, December 18, 2017

நாளிதழே

நாளிதழே
நாளிதழே நாற்புறமும் பரவியதே
காலைத்தேநீர் கசந்துவிடும் நீயின்றியே
பகுதிநேர வேலையளித்தாய் சிறுவனுக்கு
பரவாயில்லை கட்டிடுவான் தேர்வுக்கட்டணம்

நாச்சுவர்நடப்பு நாற்றிசை பறைவாய்
நாற்றிசைகாட்டி நாச்சுவற்றுள் நுழைவாய்
நானும் பக்கமெல்லாம் புரட்டுகிறேன்
நாளிதழே நற்செய்தி கிடைக்கவில்லையோ

நடிகையின் பிரசவம் வண்ணப்படம்
காணவில்லை அறிவிப்பு கருப்புவெள்ளை
திரைப்படச்சேதி இலவச பிரசுரம்
குழந்தைத்தேடல் காசுக்கு விளம்பரம்

பிரபலத்தின் பேச்சு தலைப்புச்செய்தி
முதுகெலும்பின் போராட்டம் மூலைச்செய்தி
மாணவன் கண்டுபிடிப்பு குறுஞ்செய்தி
மக்கள் பிரச்சனைபல வாராச்செய்தி

மதுவிலக்கு மாணவிப்போர் மூலைப்பக்கம்
ஆடைச்சுதந்திர அமைப்புப்போர் முதற்பக்கம்
திரைப்பட விளம்பரம் தனிப்பக்கம்
இளைஞர் சாதனை ஏதோ ஒருபக்கம்

தற்பெருமை ஆளுங்கட்சி நாளிதழ்
முன்னாட்சி ஊழலை ஊழலாய் உரைக்கும்குரல்
தன்திட்டமெனும் எதிர்கட்சி நாளிதழ்
அளவைத்தாண்டி புழுகிடும் அதன்குரல்

அரசியல் செய்திகளானது போனது
செய்திகளில் அரசியல் ஆனது
டெங்குக்காய்ச்சல் மரணமும் மாறிப்போனது
மர்மக்காய்ச்சல் பலியென்று மாற்றமானது

தவறாய் அச்சிட்டு தமிழைக்கொல்லாதே
மனைஇலவசம் மனைவிஇலவசம் ஆக்காதே
ஓரெழுத்தும் ஒருபொருள்தரும் தமிழல்லவோ
ஓரெழுத்துமாற பொருளனைத்தும் மாறுமல்லவோ

நாளிதழே நயஞ்சுட்டல் வல்லதே
கணவனுக்கு ஆப்பு காட்டிக்கொடுத்த சூப்பு
இளைஞர் கொலை நண்பருக்கு வலை
அடடா அடடா என்னமாய் சுட்டுகிறாய்

நன்றாய்க்கேள் நாளிதழேநீ மாறுவாய்
நல்லநல்ல சேதியோடுநீ வருவாய்
தனித்தமிழில் பிழையின்றிநீ வருவாய்
வருங்கால சந்ததிநீ பேணுவாய்

சமுதா கூட்டங்கள் சேதிவேண்டாமே
சமூகஒற்றுமை கட்டுரை போடு
சாதிச்சாய மாலைஅணிவிப்பு சேதிவேண்டாமே
சாதிஒழித்தலைவர் உரையை தொடராய் போடு

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...