Tuesday, December 19, 2017

கடைவீதி போகும் வழியில்

கடைவீதி போகும் வழியில்
 
காலை முழித்து கடைவீதிக்கு நடந்தேன்
மூலை முடுக்கும் பார்த்துக்கொண்டே கண்கள்
ஊரையே பனிப்புகை போர்த்தி மூடிவிட
உடலைப்போர்த்த ஏதுமின்றி நடுக்கத்தில் முதியவர்

தள்ளாடி தத்தித்தத்தி வந்துநின்ற முதியவர்
இன்னும் சோறாக்கலய்யா என்ற அந்தம்மா
விறுவிறுவென்று மொட்டைமாடி சென்று சோறுவைத்து
காகாவென்று காக்காயை விருந்துக்கு அழைக்கிறார்

மண்டையோடு வடிவங்காட்டும் ஒட்டிய தோல்கள்
மூங்கில்கணு இடுப்பில் கண்ணீருடன் பாப்பா
பால்வாங்க பத்துகேட்டவளை விரட்டிய கடைக்காரர்
செல்லநாய்க்கு கிண்ணத்தில் பாலூற்றி கொஞ்சுகிறார்

இலட்சப்பண மகிழுந்துவிட்டு இறங்கிய செல்வர்
கையகல கைபேசியில் கதைத்தபடி சந்தைநுழைய
இணைய வர்த்தகத்தில் உடைவாங்கல் பற்றிபேச்சு
காய்கறிக்கடை மூதாட்டியிடம் தக்காளிக்கு பேரம்பேசுகிறார்

சங்கிலியில் பிணைத்த நாயுடன் நடைபயிற்சி
தெருவோரம் படுத்திருந்த நாயொன்று அருகில்வர
தெருநாயென்று கால்லால் அடித்து விரட்டுகிறார்
நாயிலும் வீட்டுநாய்தெருநாய் இனம்பிரித்த மனிதர்

அவசரஊர்தி ஓட்டுநரிடம் பையை திறந்துகாட்டி
கலங்கியபடி கர்ப்பிணி கடுகடுவென ஓட்டுநர்
திரும்பிவந்த கர்ப்பிணி ஆட்டோவில் ஏறிச்சென்றார்
ஆட்டோவின் பின்னால் பிரசவத்திற்கு இலவசம்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...