Tuesday, December 19, 2017

என்று தீரும் மீனவர் துயரம்?

என்று தீரும் மீனவர் துயரம்
எல்லை 
வரைந்து வைத்தது மாதிரி
கடல் தாண்டி வந்தால்
கைது செய்யுங்கள் என்று 
அயல்நாட்டவனுக்கு
தூதாய் திரியும்
எச்சங்களும்


ஆயிரக்கணக்கில் காணாமல் போக
அறுபத்தைந்து என்று
கணக்கு சொல்லும்
கணிதத்தில் தோல்வியடைந்த
முட்டாள்களும்


எத்தனையோ பேர் மிதக்க
எகத்தாளமாய்
தேர்தல் களத்தில் நடனமாடும்
கூத்தாடிகளும்
குரங்குகளும்


சுட்டுப்போட்டாலும்
தட்டிக்கேளாமல்
உள்நாட்டில் அழைத்து
விருந்தளிக்கும்
வீணர்களும்


காப்பாற்றச்சொல்லி
போராடிய அழுகுரல்கள் மீது
அனுமதியில்லா போராட்டம் என்று
வழக்குப்போர் தொடுத்த
கைவினைஞர்களும்


கண்டவர்களும்
கண்டு
கொள்ளாதவர்களும்
கட்டளையிடும் இடத்தில்
காட்சிப்பொருளாய் இருக்க
என்று தீரும் மீனவர் துயரம்?

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...