Thursday, December 21, 2017

பேருந்தில் ஒருநாள்

பேருந்தில் ஒருநாள்

கைநீட்ட நின்ற நகரப்பேருந்து
          நடுவழியில் நகர மறுத்தது
நகராப்பேருந்து நாலைவர் நகர்த்த
          சமாதானம் நகர ஆரம்பித்தது
ஏதோ உடைந்து விழுந்ததுபோல்
          அடிக்கடி தடதடதட சத்தம்
நிறுத்தும் இடம் எல்லாம்
          கீஇச்சென்ற சத்தம் ஒலிமாசு

இடம்தேடி கண்கள் சுழல
          கடைசி முன்னிருக்கை காணவில்லை
வேறொரு இடம் கிடைத்து
          அமரஅது ஆட்டம்போட ஆரம்பித்தது
இருக்கைகளின் பின்புறம் எல்லாம்
          சாதிய வசனம் ஒருவரிக்கவி
நடிகர் பட்டங்கள் திட்டல்களென
          விளம்பர மேடைகள் இருக்கைகள்

மிதமான தூரல் தூவ
          சன்னல் கண்ணாடி இறக்கினேன்
வலுகொண்டு அமுக்கிப் பார்த்தேன்
          பல்கடித்து இழுத்துப் பார்த்தேன்
இறுதியில் கண்ணாடியே வென்றது
          சட்டை குளித்து முடித்தது
மழையது நின்று போக
          மறுபடியும் பேருந்து நோய்வாய்ப்பட்டது

பத்துப்பேர் இருந்தோம் பயணிகள்
          அருகில் இடமெனசிலர் நடந்தனர்
சற்றேபோக ஒருபேருந்து நிறுத்தம்
          எப்போது விழுமோ நிழற்குடை
நிறுத்தப்பெயர் குடையில் தேட
          அரசியல் திருவிழா சுவரொட்டிகள்
வாளேந்திய மன்னர்கள் நடிகர்கள்
          முகம்பொறித்த இல்லவிழா வரவேற்புகள்

அடுத்துவந்த பேருந்தில் ஏறினேன்
          கடைசிவரை தெரியவில்லை நிறுத்தப்பெயர்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...