Friday, December 29, 2017

முடியும்.... விடியும்....

முடியும்.... விடியும்....
முடியாது என்றசொல்
முடியும்
விடியாத இரவுகள்
விடியும்
உழைத்திடு மனிதா!
சாட்சியாய் விடிக்கிறது
மின்விளக்கு
உழைப்பே 
உன்வாழ்வின் ஒளிவிளக்கு

பட்டங்கள் வாங்கிய இளைஞனுக்கு
நட்டங்கள்
சான்றிதழின் நகல்கள்
வேலை தேடுவதே
ஒரு வேலையாக
"தம்பி என்ன வேல பாக்குற"-என்று
கேட்டு மகிழ்வதே
சுற்றாரின் வேலை
கலங்காதே! கரையாதே!
முயற்சிகளே
உன் விடியலுக்கு சேவல்கள்

இயந்திரம் ஒன்று
மாலையில் மனிதனாகிறது
தன் குழந்தையோடு
குழந்தையாகிறது
வேலைக்குச்செல்லும்
தந்தையின் விடியல்கள்
காலையல்ல
மகவோடு விளையாடும்
மாலை

பகல்முடிய
ஆடவரின் வீராப்பும் முடியும்
தலையணை மந்திரத்தில்
மனைவியின்
சொற்களனைத்தும் விடியும்
நகைப்புக்குச் சொல்லும்
இந்த நகைச்சுவையும் முடியும்
பெண்ணின்
அன்பிலும் அர்ப்பணிப்பிலும்
குடும்பமே கட்டுப்படும்
நாளும் விடியும்

மஞ்சுவிரட்டை
விடிய வைத்த இளைஞரே!
மாநிலத்தையும்
விடித்திட முடியும்
மாணவருக்குப்பயந்து
மூடப்பட்ட மெரீனாவும்
திறவும்

ஏமாற்றப்படும் மக்களே!
வாங்கும் ஆயிரம்
ஒருநாள் மட்டும் 
விடியல் தரும்
விலையில்லா வாக்குகள்
நிச்சயம்
ஒவ்வொரு நாளும்
விடியல் தரும்

பகலொன்று முடிந்தால்தான்
மின்மினிகள் திரியும்,
இரவுகள் விடியும்;
நிலவொன்றும் தெரியும்
எதையும்
முடிந்ததென்று வருந்தாதே
அனுபவமாய் அது விடியும்

முயற்சியதை விட்டுவிட்டால்
எல்லாமே முடியும்
முயற்சியதை தொடரவிட்டால்
முடியாததும் முடியும்;
விடியாததும் விடியும்
முயன்றிடு தோழா!
உன்னால் முடியும்;
உன்னால் விடியும்
நம்மால் முடியும்;
நம்மால் விடியும்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...