Monday, December 18, 2017

எழுதி முடியாத அழகு அவள்

எழுதி முடியாத அழகு அவள்

அடடா அவள் அழகி
ஆளை மயக்கும் குழலி
எத்தனை கவி எழுதியும்
எழுதி முடியாத அழகு அவள்

அருவி வீழ்ச்சி சரிந்த கூந்தல்
அதில் குளிக்கும் ஆசையில் என்முகம்
கட்டிவைத்த குப்பி அவிழ்க்க
மூழ்கிப்போனது முடியுள் என்முகம்

நெற்றி நெடுநாள் பிரார்த்தனை
உதடுகள் உட்கார விரும்பும் பூங்காவனம்
நெற்றி வேர்வை சுனைநீர்
உதடுகள் குளித்தெழ ஊற்றெடுக்கும்

நெற்றி மேல் விழுந்த பொட்டு
மூக்கின் மேல் சிதறுவது உலகவழக்கம்
ஒருதுகளும் உதிரவில்லை ஆச்சர்யம்
காரணம் பொட்டின் சிறப்பல்ல நெற்றியின் வனப்பு

ஊசியிலைக்காடு புருவம் ரெண்டும்
சட்டென பார்த்து திரும்பினாலும்
துளைபோடுகிறது மனதில்
நிலைததும்புது நிஜவாழ்க்கை கனவாகிறது

வழுக்கும் இடத்தில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி
உட்கார்ந்த இடத்திலேயே எழும்பாமல்
படபடவென சிறகடித்து தோற்றும் அழகுபோல
வலிக்காமல் கண்களை அடிக்கும் இமைகள்

கண்ணது கதிரியக்கச்சாதனமோ
எதேச்சையாய் அவள் பார்த்தால்கூட
நேராய் ஊடுருவி நெஞ்சைப்பிளக்கிறது
மின்னியக்கம் போல துள்ளவிடுகிறது

கருவானில் ஒரு வெண்ணிலா உள்ளது
வெண்வானில் ஒரு கருநிலா அவள் கருவிழி
வானிலவை மூட வெண்மேகம் போர்வை
விழிநிலவை போர்த்தும் மேகம் கண்ணிமை

மூக்கு முந்திவந்து முகமுரசும்
எந்தநேரமும் முழித்திருக்கும் பாகமது
உதடுகளின் முத்த உரசலில்
முற்றிலும் இலவசம் மூக்கின் உரசல்

காதுமடல் கவிமடலின் ஆரம்பம்
காதலின் உச்சத்தில் உதடுகளின் தஞ்சம்
தொங்கிக்கொண்டிருக்கும் கம்மல்கள்
தூக்கணாங்குருவி கூடுகள் முத்துக்கள் குருவிகள்

கன்னங்கள் நெருக்கங்கள் நீளும் இடங்கள்
காயமின்றி கடிபடும் அப்பாவிகள்
பற்கள் படாமல் தொடாமல்
உதடுகள் கடிக்கும் காயங்கள் மாயங்கள்

உதடுகள் இரட்டைக்கிளவி இலக்கணம்
பிரிந்திருந்தாலும் அர்த்தம்தரும் இலக்கணப்பிழை
உடல்முழுதும் முத்தங்கள் போட்டாலும்
இங்கொன்று இல்லையென்றால் முழுமைப்பாடாது முத்தம்

கழுத்து உதடுகள் வழுக்கி விளையாடுமிடம்
வேண்டுமென்றே வழுக்கி நழுவி விழுமிடம்
மூச்சுக்காற்றின் சூடுகள் சுடும் இடம்
சுட்டாலும் எட்டிப்போகாமல் உதடுகள் கூடுமிடம்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...