Friday, December 8, 2017

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்



இலட்சியமே என்கனவே முழித்திடு வாயே
      இராக்கனவே வீணேதாம் துரத்திடு நீயே
கட்டில்லை காவலிலை பயணப் பட்டே
      கனவேமெய்ப் படுவாயே வானந் தொட்டே
உலகைப்பெயர் உள்ளங்கை நடுவே நட்டு
      உலகைச்சுழல் உன்னிப்பாய் உளதைக் காட்டு
தாய்மொழியெதோ தழுவினரோ தேச மெங்கும்
      தமிழ்மொழியதோ பாரேறி ஊதுஞ் சங்கும்

தமிழறிந்தான் தமிழ்மட்டு மறிந்தான் யாரும்
      தரணிமுழுஞ் சுற்றுங்கனா மெய்யாய் வாரும்
மூன்றாமக வையாங்கில மோகம் வீழ்க
      முத்தமிழே மழலைச்சொல் முத்துக் குளிக
நாடுபல உண்டிங்கே நூற்பல உண்டே
      தமிழற்ற நூலகமிலை மெய்க்கனா கண்டே
எம்மையா ளுந்தமிழே நும்மை யாளும்
      எம்கனவே மெய்யோடி உலகை ஆளும்

ஏழைக்கொரு எடுத்துக்காட் டின்றி போக
      எந்நாட்டில் எல்லோரும் மன்ன ராக
எத்தனையோ கோடிகளே கொண்டான் கூட
      ஏர்பிடித்துழ துயிலெழுந்தே வயலுக் கோட
சேறுமுழுகிச் சேர்ந்தானைக் கண்ட கையும்
      மறுநொடியே கூப்புவதே அனிச்சை யாயும்
ஆட்காட்டி விரலாடி சுட்டுந் திசை
      ஆளுஞ்சேவகன் ஓடுங்கனா மெய்யாய் இசை

மூடிக்கிடக் கட்டுமிங்கே முதியோ ரில்லம்
      நாடியடங் கட்டுமந்த அனாதைச் சொல்லும்
ஆதரவே அற்றுப்போ அனாதை இல்லம்
      ஆருமில்லை உன்வீட்டில் எங்கனா வெல்லும்
தாய்ப்பறவை குஞ்சைத்தெரு விட்ட சேதி
      தாய்ப்பசுவை கன்றுமுட்டி விரட்டுஞ் சேதி
களவாங்கி காசுக்காய் குளவி விற்றும்
      கறிவளர்ப்பார் கதையில்லை கனவு முற்றும்

காந்திகனா கண்டேனே கனவாய் நானும்
      கழுத்துநகை போட்டபெண்ணே நடவாய் நீயும்
துணையின்றி பயமின்றி வீரநடை போடு
      அணைந்தவொளி இருட்டிலும் தனிநடை போடு
யாரதுவழி மறிப்பாருனை முறுக்கு கைகள்
      வாரதென்ன முறுக்குமீசை உன்னால் உடையும்
காமத்தோடு நீளுங்கை வெட்டு பெண்ணே
      கண்டகனா மெய்யாக்கி நிமிர்த்து பெண்ணே

எல்லையெதும் இல்லையடி பெண்ணே கல்நீ
      எவனேதும் வகுத்தாலதை யழித்தே வெல்நீ
விண்ணேறிய பெண்மைத்திறங் கொண்ட நீயோ
      மண்ணாண்ட வீரமேநீ வளைந்திடு வாயோ
அடுப்பூதும் பெண்ணெண்றே இழிக்கும் மூடா
      அவள்கல்வி அறியாமை அழிக்கா வீடா
மெழுகானது போதுமடி பெண்ணே போதும்
      எரியாதே புல்லரையே எரித்தே மீளும்

கற்றோரே சான்றோரே தேர்தல் காணும்
      கனவேகனி அரசியலே சுத்தம் பேணும்
வாக்குக்கே வாங்கோமே யாரும் ஏதும்
      வாக்காரே யோசிக்க நன்றுந் தீதும்
நல்லோரை நாற்காலி ஏற்றி வைப்போம்
      அல்லோரை மீவழைக்கும் விதிகள் கேட்போம்
வென்றோனே தலைவனன்றே வேலைக் காரன்
      என்கனவே மெய்ப்படுநீ தண்டல் காரன்

ஓட்டைகளே இல்லாப்பே ருந்து வேண்டும்
      ஓட்டுக்களே ஒழுங்காயிட சாத்திய மாகும்
சட்டங்குடை பெருச்சாளி சாக வேண்டும்
      நாயொன்றைக் கொன்றாலும் நீதி வேண்டும்
தாமதாமாய் வரும்நீதி அநீதி ஆகும்
      தர்மங்கேட் டான்சாக எதற்கு ஆகும்
வேலியதே பயிர்மேயும் மொழிமெய் வேண்டாம்
      காவலரே நலிந்தாரைத் தாக்க வேண்டாம்

பாறைமேல் போட்டவிதை முளைக்க வேண்டும்
      கொடுத்துக்கெடா கொடாமற்கெடா வருணன் வேண்டும்
விதைத்தவனே விளைந்தனவிலை விதிக்க வேண்டும்
      விவசாயுமே முதலாளி யாக வேண்டும்
மதியாது மச்சுக்குள் இருந்தான் சோறு
      கதியேதும் இல்லாமலே வயிற்றுக் கூறு
வரும்காலம் வருங்காலம் வந்தாற் சிற்றே
      வந்ததுமே தண்டனையே பசிதீர்த் துற்றே

பிணிசெய்து குணமாக்கோன் மனித னல்ல
      பணம்பார்க்க மருத்துவமே தொழிலே அல்ல
இரத்தஞ்சொட் டியொருத்தன் வரவே ஆங்கே
      படிவங்கே ளாமருத்துவ சாலை யெங்கே
மருத்துவக்கனா கண்டசிறுமி மாண்டா ளிங்கே
      இலட்சியக்கனா சிதையாத கல்வி யெங்கே
வரிகேட்டு நரியமர்ந்த ஆட்சி வீழும்
      மதுவூட்டி உயிரழிக்கும் மந்தை மாளும்

ஊழலாளி கொலையாளி வெளியே சுற்ற
      அழகுக்கிளி அதேகுற்றம் சிறையே உற்ற
சாதனையோ தேசப்பெயர் சுமந்தே போக
      சாவுகளோ ஏனோவோ தமிழ னாக
தாம்பிடித்த முயலுக்கு மூன்றே காலே
      வம்பாக வதைத்திட்டம் பலவே வேலே
குத்துதேயது குடையுதேயது கனவே நீயே
      சித்தம்போ லழித்தேநீ மெய்ப்பிப் பாயே

குடிசையில் லாநாட்டில் நானே வாழ
      துடிப்போடு கனவேநீ செயலை யாற்று
குளமேரி கண்மாய்க்கால் வாயும் மீள
      நடிப்போடு போலிதந்த தகவல் சாற்று
புதையுண்ட நீர்நிலையே உயிர்த்தெ ழேநீ
      வதையுண்ட விளைநிலமே வந்தெ ழேநீ
நன்னீரைக் கடல்சேர்க்கும் ஆறே கைது
      நடுவேயணை போடேயொரு சிறையே செய்து

யாசகமே கேளாத மாந்தர் வேண்டும்
      யாவருமே கேளீரே உணரர் வேண்டும்
கொலைக்கொள்ளை சேதியற்ற நாளிதழ் வேண்டும்
      பத்திரிக்கை பசிதேடா நிலையே வேண்டும்
சாதியொழித் தலைவர்மேல் சாதி வேண்டாம்
      சதியேசிலை செய்துசாதிச் சாயம் வேண்டாம்
வீதிக்கொரு சாதிக்கட் சிவேண்டவே வேண்டாம்
      நாதியற்றே செத்துப்போ வாநிலை வேண்டாம்

அவசரஊர் தியின்றித்தோள் சுமந்தான் பிணமே
      அவமானமே இன்றியுள்ளார் பணமே பணமே
குழந்தைபல கொத்தாகச் சாகத் தினவாய்
      சொன்னானே காற்றுக்கிலை பணமே பணமே
சோதனைபல விட்டானே அவனே தினமே
      அவன்கட்சி தப்புவதே பணமே பணமே
இதற்கெல்லாங் காரணமே ஓட்டுப் பணமே
      இதுவில்லாக் கனவேமெய்ப் படுவே விரைவே

வைகைகாக் கமலக்கிய மெத்து வைத்தார்
      கடற்சேர்ந்த எண்ணெய்எட வாளி கொண்டார்
டெங்குவையே தடுத்திடவே சாணி யென்றார்
      உறுப்பினரை ஓடாவிடாப் பேணிக் கொண்டார்
அணிமாறி அணிமாறி போயே வந்தார்
      அரையோடு டெல்லிபோன விதையார் விட்டார்
அறைகூவல் விடுத்தோய தெரியா தென்றார்
      அவர்காதே செவிடாகுங் கனவே மெய்யேற்

குடித்திடவே விளைத்திடவே தண்ணீ ரில்லை
      குளிர்பானத் தொழிற்செய்யத் தடையே யில்லை
தொழிற்பெருக்கி நிதிபெருக்கத் துப்பே யில்லை
      யாமுழைக்க வரிபிடிக்க கூச்ச மில்லை
தொலைக்காட்சி அலைபேசி திட்ட முண்டு
      யாம்படிக்கும் மேற்படிப்பில் துட்டு முண்டு
இப்படியே ஆண்டாரை இனமே கண்டு
      இனிமேலே வாராக்கன வேமெய்ப் பூண்டு

கனவேநீ மெய்ப்படூஉ வாயே வந்து
      நனவைத்திரி உலகமழியு முன்னே முந்து
மதமேயது இல்லாத உலகே வேண்டும்
      மனிதச்சா தியொன்றேதான் வாழ வேண்டும்
நாம்பெரிதோ நீப்பெரிதோ சண்டை கொல்லே
      நாடேதும் ஊற்களையு மன்பே வெல்லே
வெள்ளைப்புறா வினமேநீ உலகைச் சுற்று
      ஆயுதமழிக் குமாயுதமா யுன்னை மாற்று

வெள்ளங்கள் வரும்முன்னே சைகை போடு
      கடலூரே நுழையத்தடை வலிதாய் போடு
வெந்தழலில் வேகாத சக்தி ஈயேன்
      வெய்யோனைக் கட்டுவிக்கும் வித்தை தாயேன்
வாவெனவர நில்லெனநில மாரி தாயேன்
      கண்ணில்நீர் மூலமேநீ ஓடிப் போயேன்
பூப்போல மலர்ந்தன முகமே மாந்தர்
      பூலோகம் முழுதுமே புன்னகை வேந்தர்

அழிக்குமறி வியலேநீ முழுதாய் வீழ்க
      ஆக்குமறி வியலாய்நீ சிறப்பாய் வாழ்க
வெண்ணிலவே பார்த்துச்சோ றுண்டோம் போதும்
      வெண்ணிலவில் சிற்றுண்டி காலம் வாரும்
நட்சத்திர அப்பளங்கள் தின்றோம் போதும்
      நாட்டுவோமே நட்சத்திர வீடு நாமும்
விளையாட்டுப் பிள்ளைகா ணோமென் றேநாம்
      விண்வெளியிற் தேடும்விந் தையும் வாரும்

இன்பச்சுற் றுலாபூமியில் சலித்தோ மென்று
      விண்ணுக்கொரு ஏற்பாடு வானவில் செல்வோம்
வந்ததுதான் வந்தோமே செவ்வாய் சென்று
      என்னதுதான் இருக்கிறது அதையும் பார்ப்போம்
போனவழி வந்தவழி வசிப்போர் பார்த்தால்
      நம்கிரகம் அழைத்தவரை உபச ரிப்போம்
செந்தமிழைச் செப்புவித்து கிரகந் தாண்டி
      அங்கேயொரு தமிழ்ச்சங்கம் திறந்தே வைப்போம்

இப்படியாக
கனவே பல்லாயிரம் உண்டு
இவற்றிற்கே
அதில் முதலிடம் உண்டு

நான் விரும்பும் நேரமே வரும்
      நிறுத்தும் நேரமே நிலும்
என்கண் கேட்டது மட்டுமே காட்டும்
      திருப்பும் திசையெல்லாம் திரியும்

என் கனவே
மனதில் ஓடியது போதும்
வெளியே தாவு
விரைந்தே மெய்ப்படு
விடியட்டும்
நல்லதொரு விடியல்
-    
        -  சரவணபெருமாள்




No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...