Monday, December 18, 2017

காலைநேர நடைபயணம்

காலைநேர நடைபயணம்
காலைநேரத்தில்
வீல்வீலென்ற சத்தம்
எதிர்வீட்டுக்குழந்தை கையில்
பரிதாபமாய் ஒரு நாய்க்குட்டி
தன்குழந்தை விளையாட
கடத்தி வரப்பட்ட குழந்தை
அந்த குட்டி நாய்க்குட்டி

ஆதரவாய் தடவி
தண்ணீர் காட்ட
பாசமென்றெண்ணி
அவரை
உரசிக்கொண்டே குடிக்கிறது கிடா
பொங்கல் வருவதை அறியாமல்

மாட்டுத்தொழுவத்தில்
பின்னால் நிற்கும்
கன்றுக்குட்டி
பசியாறுவதாய் எண்ணி
பால்ச்சட்டியை
நிரப்பிக்கொண்டிருக்கிறது பசு

முதலாளியை நம்பி
முட்டை வைத்துச்செல்கிறது
கோழி
அவித்து தின்னும்
ஆவலை அறியாமல்

வாசலில்
எறும்பு புற்றைச்சுற்றி
வெண்ணிற விசக்கோடுகள்
ஐந்து மனித உயிர்
கடிபடாதிருக்க
நூறு எறும்புயிர்கள்
கொல்லப்பட்டிருந்தன

கேட்பதற்கு ஆளில்லை
பூவிற்குள்
ஆள்துளை போடுகிறது வண்டு
தேனுறிஞ்ச

வரத்து வாய்க்கால் தொலைய
தாகத்தில் தரைபிளந்து
வறண்டு கிடக்கிறது
கண்மாய்

ஒவ்வொன்றாய் கண்டு
யோசித்தபடியே நடந்துவர
காலை நடைபயணம்
முடிந்து போனது

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...