Saturday, December 16, 2017

ஓகி மீனவன்

ஓகி மீனவன்
 


ஆறேழு நாட்கள் ஆகிப்போனது
ஆவி என்உடல் உகுத்து
காத்திருப்பதில் பலன் இல்லை
இனியும் உடல்சேர வாய்ப்பில்லை
விர்ரென்று புறப்பட்டேன் கரைக்கு
வீட்டினர் நலமறியும் ஆவலில்

கரையில் இறங்கிவிட்டேன்
கண்ணுக்கெட்டியவரை மக்கள் கூட்டம்
அங்கெழுந்த அழுகுரல் சத்தம்
அலையோசையை அடக்கிப்போட்டிருந்தது
மணல்வீடுதான் கரைந்து போகுமென்றால்
மனிதர் வாழும்வீடுகளும் கரைந்திருந்தன

மெல்லநடந்தேன் கரையை பார்த்துக்கொண்டே
என்அழுகை யார்காதும் சேரவில்லை
நீச்சல் கற்றனவோ படகுகள்
குப்புற கவிழ்ந்தும்
நீந்தி கரை சேர்ந்துவிட்டன;
எங்களை காக்காமல் சுயநலமாய்

ஆ..! அய்யோ..! அதோ என்குடும்பம்!
என்கால் உதைத்த வயிற்றில்
தானே அடித்துக்கொள்கிறாள் என்தாய்!
மீண்டு வந்த மீனவர்கூட்டத்தில்
என்முகம் தேடியலைகிறார் என்தந்தை!
"எம்புள்ளைய பாத்தீங்களாய்யா??" என்றே விம்முகிறார்

நெஞ்சில் அடித்தழுகிறாள் என்மனைவி
ஏனென்றே அறியாமல் அழுகிறாள் என்குழந்தை
ஓடிச்சென்று அள்ளி அணைத்தேன்
அய்யோ..! கைசேரவிள்ளையே என்தங்கம்!
ஆயிரம் முத்தங்கள் இட்டேன்
ஒன்றும் கன்னத்தில் ஒட்டவில்லையே!

" டேய்..! பாப்பு..! டேய்..! செல்லம்..!
   பாப்பா..! அப்பா தெரியுறனாடா..!
   அய்யய்யோ..! அப்பா செத்தத நெனச்சு
   இப்பத்தான்டா அழுகுறேன்..! என் அம்மு..!
   தங்கமே..! பட்டே..! புதுவருசத்துக்கு
   புதுட்ரெஸ் வாங்க நெனச்சென்னே..! அய்யோ..!"

மீட்கச்சென்ற படகு கரைசேர
கைபேசியில் படமொன்று காட்ட
ஆடித்தான் போய்விட்டது அந்த ஆழிக்கரை
ஆம்..! அதுதான்..! அதேதான்..!
என் உடல்தான் மிதக்கிறது!
கடலலையில் ஏறிஇறங்கி மிதக்கிறது!

நான் குடித்த உப்புநீரில்
உப்பிப்போயிருந்தது என் உடல்
கடல் ஏன் உப்பானது தெரியுமா?
கலக்கும் ஆற்று நீரைவிட
கரையோர மக்களின்
கண்ணீர் அதிகமாய் கலப்பதுதான்!

மின்னல் வேகத்தில் கிளம்பினேன்
"கடவுளே! விதிய பொரட்டிப்போட்டுறுப்பா!
  என்புள்ள முகம் வாடிப்போயிரும்!
  எனக்கும் அவமுகம்பாத்து வாழணும்!
  உடம்புல என்ன சேத்துவிட்டுறுப்பா..! அய்யோ.!"
கத்திக்கொண்டே உடலில் முட்டிக்கொண்டிருக்கிறேன்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...