Saturday, April 28, 2018

பயிர் செய்ய விரும்பு

பயிர் செய்ய விரும்பு


 
மாட்டோடு அதிகாலை பயிர்க்காடு!
    காட்டூடே மரமெங்கும் புள்கூடு!
கட்டிடங்கள் நாட்டிடவே நரமாடு
    வெட்டமரம் காடெல்லாம் சுடுகாடு!
நீரின்றி வாடாப்பயிர் அந்நாளே!
     நீரின்றி நிலவெடிப்பு இந்நாளே!
பறந்தன நடந்தன கண்டதெல்லாம்
    இருப்பது திரைப்படம்தான் இந்நாளே! 

அனைவருமே அலுவலகம் சென்றாலே
    அறுவடைக்கு உழவோட்ட ஆரங்கே?
மனைநிரம்ப பணமெல்லாம் கிடைத்தாலும்
    உனைமாற்றி உழுதிடவே துணிவாயோ?
முனையாது போனாலும் போயேண்டா!
    மழைமுடக்கும் மரமறுக்கும் பணியேனோ?
மனையருகே மரமொன்று நடுபோதும்!
    மிச்சமுள்ள உழவனுக்கு மழைவரட்டும்!

காடழித்த வீடழிக்குமா நின்பசியை?
    நாடோடிய பணமழிக்குமா நாருசியை?
எண்களையே கொண்டதுவும் வெறுந்தாளே!
    நதிவறண்டு பஞ்சம்வரும் அந்நாளே!
உழுவதிலே மலைப்பென்ன? குறைவென்ன?
    உயிர்காப்பவன் உயிர்காப்பான் உழவனன்றோ?
போதுமடா! ஏடெடுத்து நிழலாடியது!
    உழுதிடுவோம்! பயிர்செய்து உயிர்காப்போம்! 

-    சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...