Saturday, April 21, 2018

கைகளுக்குள் கை

கைகளுக்குள் கை

பெற்றார் கரத்துள் கைகள் புதைத்தால்
சுற்றும் நோக்கோம்! ஏதும் கேட்கோம்!
கடலும் மிதிப்போம்; படகென அவர்கை!
நெருப்பும் உடுப்போம்; நனைக்கும் அன்புமழை!

கற்றல் நேரம் கரங்கள் பிடித்து
தேற்றல் அவரே கற்றேன் எழுத்து
சிற்றாய் நடக்க பற்றிய கரங்கள்
முற்றிய போதும் கைதியாய் அடைக்கும்!

தாயுந் தந்தை தங்கை தனயன்
நோயுந் தீரும் ஒன்றிட அன்பில்
யாரும் அடிக்க புகாரும் அளிப்போம்!
தாயிடம் தந்தை தாய்க்குத் தலைகீழ்!

- சரவணபெருமாள்

விளக்கம்:

பெற்றோருடைய கைகளுக்குள் எங்கள் கைகள் புதைந்து இருந்தால் (அவர்கள் எம் கைகளைப் பிடித்திருந்தால்), சுற்றி நடப்பது என்னவென்று பார்க்க மாட்டோம்; ஏன் எதற்கு என்று கேட்க மாட்டோம்.  கடலையும் மிதித்து உள்ளே நடப்போம். படகென அவர்கள் கை இருக்கும் தைரியமே! நெருப்பையும் ஆடைபோல் உடுப்போம், அவர்களின் அன்பு மழை நனைத்துவிடும்! (அன்பு கொண்ட அவர்கள் எப்படியும் அணைத்துவிடுவர் என்ற தைரியமே!)

பாடங்கள் கற்க ஆரம்பித்த காலம், எம் கரங்களைப்பிடித்து, எழுதக்கற்றுக் கொடுத்து தேற்றியவர் அவர்களே! அவர்களால் தான் எழுத்துக்களை எழுத எளிமையாய்க்கற்றோம். சிறுகுழந்தையாய் இருக்கும் போது, நடைபழக என்னைப்பற்றிய கரங்கள், முற்றியவன் போல் ஆன போதிலும், விட்டுவிடவில்லை. கைதி போல் கரங்களுக்குள்ளே வைத்திருக்கிறார்கள்.

தாய், தந்தை, தங்கை, தனயன் என எல்லோரும் ஒன்றாய் அன்பில் கலந்து மகிழ்ச்சியாய் இருந்தால், நோயெல்லாம் தீரும். எம்மை யாராவது அடிக்க வந்தால், உடனே புகார் அளிப்போம். எப்படியென்றால், தந்தை அடித்தால் தாயிடமும், தாய் அடித்தால் அதையே தலைகீழாய் தந்தையிடமும் சென்று புகார் அளிப்போம்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...