Sunday, April 22, 2018

பனிப்பூக்கள்

பனிப்பூக்கள்


பள்ளம் நோக்கிப் பாயும் நீர்,
நுனிப்புல்லின் உச்சியிலும்
பனிப்பூவிதழ் மேல்தட்டிலும்
அமர்ந்து
இறங்க மறுப்பதேன்?

வடிவமற்ற நீர்மம்
சிறு உருண்டைகளாய்
பூ மடல்களின் மேல்
வடிவம் பெற்றது எப்படி?

தூசியின் பாரமும்
தாங்காத புல் நுனி,
விண்பொருள் பனியை
தாங்கிப்பிடித்தும்
தலை நிமிர்ந்து நிற்பதன்
இரகசியம் தான் என்ன?

வேரில் உறிஞ்சிய நீரா?
வானம் எறிந்த பனியா?
பூக்களின் நடுவில்
தேனாறு!
அந்தப் பூக்களைச்சுற்றி
வண்டுகள் ஒரு நூறு!

தேன் மட்டுமே
களவாடிச் செல்லும் வண்டுகள்
பூவைக் காயப்படுத்தியதில்லை!
உன் கூந்தலின் மணத்திற்கு
பூவையே களவாடும் கன்னியே!
மணம் மட்டும் களவாடி
பூவை விட்டுவைக்கும் வித்தை
உன்னிடம் இல்லையோ?

பெண்ணைப் பூ என்பார்!
தினம் ஒரு பூ ஒடித்து
தன்னினத்தையே
அழித்தொழிக்கும்
பூவரக்கியடி நீ!

அதென்ன?
கல்லின் மனதிற்குள்
திடீரென
இத்தனைக் கேள்விகள்!
இத்தனை ரசனைகள்!
கேள்விக்கணை தொடுக்காதே?

ஆம்!
இரும்பு இதயம்
கரும்பாய் மாறிவிட்டது!
காதல் வயப்பட்டது!
பெண்ணே!
ரசனையே அற்ற என் விழிகள்
ஒவ்வொரு அசைவினையும்
ரசிக்கத் தொடங்கி விட்டது!
பனித்துளியிலிருந்து
பனிப்பூவிலிருந்து
பனிமலை வரையிலும்!
பார் வியக்கும்
வான்தொலைவு தாண்டியும்!

இன்னும் என்ன சொல்ல?
நீ பூ!
நான் பனி!
விழுந்திட்டேன்!
ஆதலால்,
நாம் பனிப்பூ!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...