Tuesday, September 11, 2018

முகவரி தேடும் முழுமதி!

முகவரி தேடும் முழுமதி!
 

அடக் கடவுளே!
ஆண்களுக்கு
பாதுகாப்பே இல்லையா?
முன்னே சென்றாலும்
பின்னே சென்றாலும்
பின் தொடர்கிறது;
முழுமதி! - என்
முகவரி தேடி!


கண்ணடிக்கும்
வெண்ணிற மான்கள்
வானத்து மீன்கள்!
அவற்றை விடுத்து
கருப்பு நிலாவைக்
காதலிக்கிறதே,
வெண்ணிற நிலா!


காதலைச் சொல்ல
காலம் பார்த்தேன்!
அந்நேரம்
ஆலையின் நச்சால்
அசுத்தமாய் மரங்கள்!
நஞ்சேறி நரன்கள்!


மரமும் மாள
ஓசோன் சிதைய
ஓட்டையில் புகுந்த புகை
வெள்ளழகியை
புற்றாக்கலாம்!


சிந்திக்கும் போதே
சிறைபிடித்தது எம்மையும்
புற்றுநோய்!
விழித்தோம்!
வினந்தோம்!
ஆயுதம் இல்லை!
அடிகளும் இல்லை!

அந்தோ! எம்மை
ஆட்கொண்டது
கூரிய குண்டு!


சிவந்த வானமே!
பார்!
சிவந்தது மண்!
என் உதிரத்தால்!
என் முழுமதியிடம் சொல்!
அவள் புகுந்த நெஞ்சில்
புகுந்தது எச்சில்!


பணம் கேளோம்!
பதவி கேளோம்!
பாதிப்பின் நிவாரணம் கூட கேளோம்!
பதித்தனர் எம்மில்
பயங்கரக் குண்டுகளை!


முழுமதியே!
என் முகவரி தேடாதே!
உன்னையும் உடைக்கும்
பணம் விளைந்த பூமி இது!
நீயேனும்
நிம்மதி கொள்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...