மஞ்சக் கயிறு போதும் - கிராமியக்கவிதை
அன்பாகவே வம்பிழுக்கும்
ஆசை மச்சானே! - ஒரு
பூஞ்சோலையே பூக்கூடையை
சுமப்பதைப் பாரு!
ஆசை மச்சானே! - ஒரு
பூஞ்சோலையே பூக்கூடையை
சுமப்பதைப் பாரு!
சுருட்டி மடித்து
கட்டிவைத்த காகிதப்பூவும் - என்
இடுப்பில் இறக்கி வைத்ததனால்
மணப்பதைப் பாரு!
கட்டிவைத்த காகிதப்பூவும் - என்
இடுப்பில் இறக்கி வைத்ததனால்
மணப்பதைப் பாரு!
உன்வீட்டுத் தெருவில்
பூவைவிற்று முடித்திட்டபோதும் - என்
காலில் வேர்கள் முளைத்ததுபோல்
நிற்பதைப் பாரு!
பூவைவிற்று முடித்திட்டபோதும் - என்
காலில் வேர்கள் முளைத்ததுபோல்
நிற்பதைப் பாரு!
பெரியவீட்டு முதலாளியும்
பெண்கேட்ட போதும் - என்
மனசு இறங்கிப் போகலியே
காரணம் யாரு?
பெண்கேட்ட போதும் - என்
மனசு இறங்கிப் போகலியே
காரணம் யாரு?
மனசுக்குள்ளே உன்னைக்கட்டி
வாழுறேன் நானும் - அங்கே
வேறு யாரும் நுழையப் பார்த்தால்
சாவேனே நானும்!
வாழுறேன் நானும் - அங்கே
வேறு யாரும் நுழையப் பார்த்தால்
சாவேனே நானும்!
காடுவேணாம் கரையும்வேணாம்
நகை நட்டு வேணாம் - நீ
கட்டிக் கிறேன்னு ஒரு வார்த்தை
சொல்லிடு போதும்!
நகை நட்டு வேணாம் - நீ
கட்டிக் கிறேன்னு ஒரு வார்த்தை
சொல்லிடு போதும்!
பெரிய வேலை வேணுமுன்னு
கேட்கலை நானும் - மாமா
காட்டு வேலை பார்த்து சோறு
பொங்குவேன் நானும்!
கேட்கலை நானும் - மாமா
காட்டு வேலை பார்த்து சோறு
பொங்குவேன் நானும்!
தங்கத்திலே தாலிகட்டி
போட்டிட வேணாம் - ஒரு
நூலை மஞ்சளின் நனைத்துப் போடு
போதுமே மாமா!
போட்டிட வேணாம் - ஒரு
நூலை மஞ்சளின் நனைத்துப் போடு
போதுமே மாமா!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment