Friday, March 9, 2018

எங்கே செல்கிறது, என் தமிழினம்?

எங்கே செல்கிறது, என் தமிழினம்?
அய்யாமாரே அம்மாமாரே இங்கே வாருங்க - நான்
கூத்துக்கட்டி பாடப்போறேன் வந்து கேளுங்க
எங்கபோகுது இந்தசனம் நம்ம தமிழினம்
எடுத்துவிடுறேன் கேட்டுக்கிட்டு நீங்க குந்தனும்

                              
                                      (அய்யாமாரே)

வந்தசனம் போனசனம் பொழைக்க தெரிஞ்சது
பொறந்தசனம் வந்தவனின் பின்னால் திரிஞ்சது
ஓட்டுக்கேட்டு வந்தவனின் கொடிய பிடிச்சது
ஒண்ணுமில்லாம ஆனபின்னே புத்தி தெளிஞ்சது

                              
                                    (அய்யாமாரே)

கட்சிக்கூட்டம் போகத்தானே பேருந்து வருகுது - அட
நெல்லுமணி அரைக்கபொம்பள நடந்து போகுது
நிறுத்தமில்லா இடத்துலயும் பொண்ணுன்னா நிக்குது - அட
பல்லுப்போன பாட்டிக்குத்தான் எங்கே நிக்குது

                              
                                    (அய்யாமாரே)
 
வெக்கையின்னு குளிர்சாதனம் வண்டியில் மாட்டுறான் - நடை
மேடையில குளிருதுன்னு கெழவன் நடுங்குறான்
வீட்டவிட்டு தொரத்தப்பட்டு வந்த கெழவியும் - எம்
புள்ளைக்கு தொந்தரவில்லையினு சொல்லி நடிக்குறா

                              
                                    (அய்யாமாரே)

கோடிக்கணக்கில் பணம்வாங்கிட்டு ஓடிப் போகுறான்
கோடியில இருக்குறவன் கடனுக் கலையுறான்
ஏமாத்திட்டு போனவனின் எரிவாயு ரத்து
கந்துவட்டி ஏழைக்குத்தான் உயிரே ரத்து

                              
                                    (அய்யாமாரே)

கடலுக்குள்ள எல்லக்கோடு எங்க இருக்கு - நடுக்
கடலுக்குள்ள வரைஞ்சுவச்சா தேவல எனக்கு
எல்லக்கோடு தாண்டிப்போனா கைது பண்ணுறான்
தாண்டாமயே பலநேரம் சுட்டுக் கொல்லுறான்

                              
                                    (அய்யாமாரே)

ஏன்னுகேட்க நாதியில்ல எவன்தான் இருக்கான்
கேட்கவேண்டியவன் வெளிநாட்டுல போயே கெடக்கான்
தமிழ்ச்சொல்லுல இசையின்னு பேரு பொம்பள
டெல்லிக்குத்தான் பின்பாட்டு பாடும் பொம்பள

                              
                                    (அய்யாமாரே)

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து குறள படிக்கிறான் - இவன்
ஆங்கிலத்தை கௌரவமாய் குரல உயர்த்துறான்
வங்கியில தமிழழிச்சு இந்தி திணிக்கிறான் - சில
கூட்டத்துல தமிழ்பேசி பல்டி அடிக்குறான்

                              
                                    (அய்யாமாரே)

அமெரிக்கா எருமைவாயில் அம்மா வருது
தமிழ்நாட்டு குழந்தைவாயில் மம்மி வருது
ஏனடா மாறிச்சென்றாய் மரபுத் தமிழா
சமூகத்தையும் அரசியலையும் மாற்று தமிழா

                              
                                    (அய்யாமாரே)

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...