Saturday, March 17, 2018

சொல் விதைக்க ஆசை மச்சான்

சொல் விதைக்க ஆசை மச்சான் - கிராமியக்கவிதை
செந்தூரம் கெடைக்குமா
என்நெத்தி செவக்குமா
ஏரோட்டி நீ வடிச்ச வேர்வைய
கூந்தலில தொடைச்சிவிட வரட்டுமா

பாத்திகட்டும் மச்சானே
தாலிகட்ட எப்ப வாற
நாத்துநட நான் வந்த நேரத்துல
நெஞ்சுக்குள்ள நாத்துநடும் சோலி பாத்த

தலை நெறையா மல்லி வச்சேன் - உன்
மூச்சுப் படாம வாடிப்போச்சு
காலச் சுத்தி கொலுசு போட்டேன் - உன்
காது தொடமா அடங்கிப்போச்சு

கைவளையல் ஒடைக்க நீ வரலியே - உன்
ஏக்கத்துல உடல் இளைச்சு நழுவியாச்சு
ஆத்தங்கர ஆலமரத்த ஆக்கிரமிச்சோம் - போயே
ரொம்ப நாளாச்சு கிளிப்பேச்சும் ஏளனமாச்சு

ஒன்ன நெனச்சு தூங்காம நாங்கெடக்க
துணைக்கு நிலா முழிச்சு கெடந்துச்சு
சோறுதண்ணி பல்லுபடாம பட்டினி கெடக்க
சாப்புட்டமிச்சம் கெடைக்காம என்வூட்டுநாய் பட்டினியாச்சு

ஆசவச்ச மச்சானே பொண்ணுகேட்டு வரலியே
ஒண்ணுவிட்ட மாமங்காரன் வாயத்தொறந்து வந்துட்டான்
நெல்லுநாத்த சாட்சிவச்சு சொல்லெல்லாம் வெதச்சுட்டேன்
மச்சான்மடி சேராதாவணிய மண்ணெண்ணெய் எரிக்குமய்யா

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...