Sunday, March 25, 2018

புரிந்துகொள்ளுமா? புலமும் புலம்பெயர் தேசமும்

புரிந்துகொள்ளுமா? புலமும் புலம்பெயர் தேசமும்


புலமாண்ட புகற்றமிழ் யுகந்தாவ
        புற்றீசல் புல்லரின் அகந்நோவ
புற்றுக்குள் புகும்பாம்பு ஈழம்புக
        புலிப்படை எனத்தமிழ் வேழம்புக
புத்தன்பேர் சொல்லிப்புற முதுகுப்போர்
        எத்தனைபேர் குத்தப்பட்டனர் எண்ணிப்பார்

மெல்லிய பூக்கள் இறுகுமோ
        மென்மைத் தமிழச்சி முறுக்கினாள்
புலியென புருசன் ஒருபுறம்
        அரளியாய் அவளே மறுபுறம்
வெலத்தது சிங்களம் மொத்தமும்
        புகுந்தது விதிமீறல் யுத்தமும்

பாடசாலை வைத்தியசாலை தமிழெதோ
        வீடுவாசலும் ஊரும்பேரும் தமிழெதோ
நின்றதுபோரென கூட்டம் கூட்டி
        குண்டுகள் விதைத்தான் கோத்தி
கோழியும் குஞ்சும் சேவற்பேதம்
        அறியாக்குண்டு வெடிக்க அய்யோச்சத்தம்

மாண்டாள் தாயென அறியாப்பிஞ்சு
        மார்பைக் கடித்ததே பாலுக்கு
சிக்கிய தமிழன் சிங்களன்முன்னே
        அம்மணம் ஆனான் சாவுக்கு
ஈழக் குயிலாம் இசைப்பிரியா
        இரையாய் ஆனாள் இச்சைக்கு

மிச்சம்வாழ புலங்கள் பெயர்ந்து
        கடலைநம்பி படகை விட்டது
கடலில்பாதி தரையில்மீதி விழவே
        அகதியேகதி அடைக்கப் பட்டது
புலமிச்சம் இராணுவக் காப்பில்
        பாலுக்கு காவல் பூனையாம்

இனியுமில்லை இழந்திடவே
இருப்பதெல்லாம் உயிரதுவே
அங்கம்மேயும் ஆண்மகனே
தாயதுநகலே எனக்கும்
புரிந்துகொள்ளுமா?
புலமும் புலம்பெயர் தேசமும்...

- சரவணபெருமாள்

பாரதியும் பெரும்கனவும்

பாரதியும் பெரும்கனவும்

சாதிச்சான்றிதழ் வாங்கிவிட்டு சாதிகளில்லை பாப்பாபாட்டு
கொட்டியமுரசே ஒன்றென்று கொல்லுதுமதமே சிரியாப்பிஞ்சு
செந்தமிழ்நாட்டு வீதியிலே ஆங்கிலம்பேசி திரியுதுவே
நனவுமாவது சிரமந்தானோ பாரதியாரின் பெருங்கனவே

- சரவணபெருமாள்

வஞ்சியவள் நெஞ்சில்

வஞ்சியவள் நெஞ்சில்

வஞ்சமென்ன வஞ்சியே மிஞ்சலென்ன கெஞ்சினால்
கொஞ்சுவதில் பஞ்சமோ அஞ்சலேதும் கொஞ்சமோ
பஞ்சணையில் தஞ்சம்புக மஞ்சள்நாண் லஞ்சமோ
வஞ்சியவள் நெஞ்சினும் மஞ்சமோ தஞ்சம்

- சரவணபெருமாள்


நிலுவை வாழ்க்கை

நிலுவை வாழ்க்கை


சோறுபோட்ட உழவனுக்கு மானியம் நிலுவை
நித்தமோடி உழைத்தவனின் ஊதியம் நிலுவை
காசுயில்லா நோயாளிக்கு வைத்தியம் நிலுவை
காசுவுள்ள கொலையாளிக்கு தண்டனை நிலுவை

கல்விக்கட்டணம் கட்டும்வரை கற்றலும் நிலுவை
கையூட்டுக்கள் கொடுக்கும்வரை சான்றிதழ் நிலுவை
பட்டப்படிப்பு முடித்தபின்னே பணியும் நிலுவை
ஏழைகளின் வயிற்றுப்பசி நிலுவையிலும் நிலுவை

- சரவணபெருமாள்

விழிகளின் வெளிச்சம்

விழிகளின் வெளிச்சம்


விழியொளி விரித்தும் தேவையா விளக்கொளி?
சுழியென என்விழி! மிகையொளி உன்விழி!
கழிவென ஆனதென் முந்தையக் காட்சி!
வழியொன்று போட்டது உன்விழி ஆட்சி!

உன்விழி மிகைப்பில் நிலவொளி திகைக்கும்
மின்மினி மோகம் குருவிக்குக் கொடுக்கும்
என்மன இருளில் மின்னலொளி சொடுக்கும்
உன்முக வானம் காதல்துளி தெளிக்கும்

- சரவணபெருமாள்

மனிதமே நிலைபெறு

மனிதமே நிலைபெறு


வெள்ளைக்கொடி பறவாதோ வெடிச்சத்தம் விலகாதோ
பிள்ளைக்கனி முகமெல்லாம் வெள்ளைப்பல் தெரியாதோ
தாயணைக்கும் பருவத்தே தாய்காக்கத் தவிக்கிறதே
நோயுளத்தே மெய்யிலவே மனிதமே நிலைபெறு

- சரவணபெருமாள்

Tuesday, March 20, 2018

நீயும் நானும்-10(1)

நீயும் நானும்-10(1)

கடைசி வரியைப் பூர்த்தி செய்யும் வகையில்,
நான்கு வரிக்கவிதை

கொடுக்கப்பட்ட நான்காவது வரி:

மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

கவிதை

புனிதமான புதுமலர்கள் பூத்ததுமே நிலையில்லை
இனிமையான முகங்கண்டும் எரிகுண்டா? அறமில்லை
மனிதமோட்டும் மதத்தவர்கள் மானுடராய் பெயரில்லை
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

- சரவணபெருமாள்

( சிரியாவை மையப்படுத்தியது)

கன்னங் கருப்பழகி வெள்ளச்சிரிப்பழகி

கன்னங் கருப்பழகி வெள்ளச்சிரிப்பழகி - கிராமியக்கவிதை

கூத்துப் பாக்க வந்து நின்னவுக
அத்த மக ஒண்ணு வாச்சதுண்டா
மாமென் மக சேதி சொல்லப்போறேன்
மயங்கி நீங்க அங்க வந்திடவேண்டா

அங்க அடையாள மச்சமும் தேடி
எங்கு இருக்குணு கண்டு புடி
ஆடி அம்மாவாச வருசத்துக் கொண்ணு
அவளக் கட்டிக்கிட்டா நித்தமும் ஒண்ணு

எந்த நெறத்துல பொறந்த மனுசனும்
நெஞ்சுக் குழியில இருட்டான வானம்
கருப்பு நெறத்துக்கு அவளே சொந்தம்
வெள்ள மனசுக்கு அவளே பந்தம்

கன்னந் தோண்டுன கருப்புக் குழியில
வேர்வச் சொட்டுவொண்ணு விழுந்து மின்னுது
அன்ன நடவொண்ணு போட்டு போகையில
வெள்ளிக் கொலுசுதான் துள்ளிக் குதிக்குது

ராத்திரி நான் பாத்த நட்சத்திரம்
எங்க போயிருச்சு காலேல காணொம்
அத்த மகபாத்து கண்ணு அடிச்சேன்
சிரிச்சுப் புட்டா வாயில் நட்சத்திரம்

வெள்ளப் பல்லஅவ காட்டிக் காட்டி
உள்ளக் கதவயவ வெட்டிப் போட்டா
மெல்ல நெளிஞ்சு என்கிட்ட வந்து
கட்டி கிரியானு உசுப்பிப் புட்டா

- சரவணபெருமாள்

Saturday, March 17, 2018

பொன்னு விளையுற பூமி இது

பொன்னு விளையுற பூமி இது - கிராமியக்கவிதை
 
பொன்னு விளையுற பூமியில - அம்மா
வெளஞ்ச மனுசங்க சரியா யில்ல
மொதலாளியா நாங்க இருந்தகாலம் போயி
ஓட்டாண்டியா இங்க ஆனோ மம்மா

அஞ்சு மணியான கண்ணையும் மூடல
வயக்காடு கெளம்பிட்டேன் கஞ்சி குடிக்கல
நஞ்சையும் புஞ்சையும் எதையும் விடல
உழுது அலுத்தேனு எம்மாடு சொல்லல

சேத்துக்குள்ள கால வெச்ச நேரத்துல
சோத்தயள்ளிப் போட மறந்து புட்டேன்
சேத்துப்புண்ணு கால தச்ச பின்னாடியும்
நாத்துநட நான் வந்து புட்டேன்

கோவணத்தக் கட்டி போட்ட அரிசிய
தின்னுக் கொளுத்தவென் கோட்டை யில
பஞ்சமாகிப் போச்சு மானியம் கொடுன்னு
டெல்லிக்குப் போனோம் கண்டுக் கல

ஊருக்கெல்லாம் சோறு போட்டுப்புட்டு - நாங்க
வரிசேல நிக்கிறோம் அரிசி வாங்க
உசுரோட இருந்தப்போ ஒண்ணுங் குடுக்கல
தற்கொல பண்ணிட்டா நிவா ரணம்

ஆளுறவன் தான் ஒதுக்கிட்டானு பாத்தா
வானமும் மேகமும் சதி பண்ணுதே
வந்து போயி ரொம்ப நாளுமாச்சே
எங்க கண்மாயும் கெணறும் வத்திப்போச்சே

- சரவணபெருமாள்

இந்தப்புன்னகை என்ன விலை?

இந்தப்புன்னகை என்ன விலை?
 
புதிதாய் பூத்தது புன்னகை!
புது மணப்பெண்ணே!
எங்கே ஒளித்தாய்?
இத்தனை நாளாய்!
என்ன விலையது தருவேன்
ஆயுளும் புன்னகை தருவாய்

முன்னால் பூத்த புன்னைகையால்
பின்னால் ஒளிகிறது,
மல்லி...!
புன்னகை விலையின் முன்னே
தன்னது விலை தவிடுபொடி
என்றே பயம்...!
என்னிடம் மட்டும் சொல் - இந்த
புன்னகை என்ன விலை?

புன்னகையில் மின்னிய
பற்களின் தயவில்
பொன்நகை ஒளிர்கிறது!
முத்துப்பல் ஒன்று
தன்னில் வந்து சேருமா என்று
கேள்விகள் கேட்கிறது..!
எனக்கு
அதெல்லாம் தேவையில்லை - இந்த
புன்னகை என்ன விலை?

வெட்கங்கள் தேங்கிய
முகத்தை தரையில் கவிழ்க்க,
வரிசையாய் நகர்ந்த எறும்புகள்
வட்டமாய் தேங்கி நின்றன;
புன்னகை சிந்திய
எச்சில் துளியில்..!
ஆம்..
அந்தப்புன்னகை
என்ன விலை?

உதட்டில் தாவும் முயற்சி
தொங்கும் தோடுகள் ஆட்டம்!
உம்மென்றுள்ள செவியைவிட
கலகலக்கும் புன்னகை இனிதாம்!
சொல்லிவிடு - அந்த
புன்னகை என்ன விலை?

சன்னலின் ஓரம்
புன்னகையில் நீ...!
சன்னல் காற்று உதட்டில் மோத
தனியாய் வந்து நின்றாய் பெண்ணே!
ரகசியமாய் வந்து தழுவ,
அந்த
தென்றலிடம் சொன்ன
விலைதான் என்ன?

பெண்ணவள் கேட்டு
ஆணவன் வந்தேன்
தேவதை முன்னே
மன்மதன் வர
சிந்திய புன்னகை இது!
அதன் விலை எது?

நான்தான் அது!
நான்தான் அது!
புன்னகை முன்னே சொல்லி நிற்க
இலவசமாய் இணைகிறது
இன்னும் பெரும் புன்னகை!

- சரவணபெருமாள்

உன்னோடு நான்

உன்னோடு நான்
 
விழியின் விரிப்பில் விழுந்து விட்டேன்
விலையென்ன உனக்கு அறிய வந்தேன்
வழியே நீயென வலிய வந்தேன்
எனையே உனக்கென கொடுக்க வந்தேன்

சிரிக்கின்றாய்
கன்னம் குழிக்கின்றாய்
அந்தக் குழிக்குள்
என்னையே புதைக்கின்றாய்

சுளிக்கின்றாய்
உதடு குவிக்கின்றாய்
குவியலின் உச்சியில்
குளிர்க்கின்றாய்

மெல்லக் கண் திறக்கின்றாய்
மேகக்கூந்தல் பரப்பி அசைக்கின்றாய்
பாதக்கொலுசொலி இசைக்கின்றாய்
பல்லழகுச் சிரிப்பில்
கொலுசை வெல்கின்றாய்

முன்னே நடக்கின்றாய்
பின்னே தொடர்கின்றேன்
கடைக்கண் கழல்கின்றாய்
மரப்பின் ஒளிகின்றேன்
அங்கே உன்னால்
தேடலின் கலைச்சங்கமம்
தேடல் ஒரு காதல் தத்துவம்

தேடாதே
கண்மணியே வாடாதே
கழுத்தின் கீழே உற்றுப்பார்
துடிதுடிப்பும் படபடப்பும்
நானடி நங்கையே
நானே உன் இதயமடி

உயிரும் உடலும் கலந்திருப்பேன்
ஆயுள் முழுதும் சேர்ந்திருப்பேன்

- சரவணபெருமாள்

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்
(இக்கவிதையை திரைப்படப்பாடலின் ராகத்திலும் பயணிக்க வைக்க முடியும்)


காலங்களில் அவள் வசந்தம்..!
ஞாலத்திலே புது காவியம்..!
வானத்திலே அவள் வெண்ணிலா..!
தரையினிலே அவள் தேர்உலா..!

பாடங்களில் அவள் தேன்தமிழ்..!
மாடங்களில் பாடும் பெண்குயில்..!
அழகினிலே அவள் தேவதை..!
அன்பினிலே அவள் காதல்மழை..!

கலைகளிலே அவள் ஆயக்கலை..!
சிலைகளிலே அவள் மெழுகுச்சிலை..!
குழல்களிலே அவள் புல்லாங்குழல்..!
மடல்களிலே அவள் ரோசாஇதழ்..!

வெண்பாவிலே அவள் இன்னிசை..!
பண்பாட்டிலே அவள் தமிழிசை..!
வனங்களிலே அவள் மான்வகை..!
சினங்களிலே அவள் தேள்வகை..!

ஆடலிலே அவள் ரம்பைக்குநேர்..!
தேடலிலே அவள் தாயுக்குநேர்..!
கூடலிலே அவள் பசைக்குநேர்..!
நாடலிலே அவள் குழந்தைக்குநேர்..!

கடிதங்களில் அவள் காதல்வரி..!
காதலுக்கு அவள் முகவரி..!
மேகத்திலே அவள் கார்முகில்..!
தேகத்திலே அவள் அழகுமயில்..!

மணங்களிலே அவள் மல்லிச்சரம்..!
கற்பனையில் அவள் கவிச்சரம்..!
திருவிழா வந்தால் தீபஒளி..!
தியாகத்திலே அவள் தீக்குச்சி..!

மலர்களிலே அவள் பொற்றாமரை..!
மலைகளிலே அவள் நீலகிரி..!
தொல்லையிலே அவள் காதல்தொல்லை..!
வெள்ளையிலே அவள் மனதேவெள்ளை..!

மொத்தத்திலே அவள் காதலி..!
கண்மணியே! என்னைக் காதலி. !

- சரவணபெருமாள்

முகமறியா நட்பு

முகமறியா நட்பு

முகமறிந்தவை இகழறிந்தவை அகஞ்சிறுத்தவை
முகநூலவை முகமறைத்தவை அகம்பெருத்தவை
கவிரசித்தவை மேடையுடுத்தவை குப்பையடைந்தவை
புகழளித்தவை முகந்திறந்துவை மனவிருப்பமவை

- சரவணபெருமாள்

விளக்கம்:

இகழறிந்தவை - இகழ்ந்து பேசப்பழகியவை
அகஞ்சிறுத்தவை - குறுகிய மனப்பான்மை உடையவை
முகநூலவை - முகநூல் அவை
அகம்பெருத்தவை - விரிந்த மனம் கொண்டவை
மேடையுடுத்தவை - மேடை கொடுத்தவை

முகமறிந்த மனிதர்கள், என்னை இகழ்ந்து பேசத்தெரிந்த குறுகிய மனப்பான்மை உடையவராகவே இருக்க, முகநூல் குழும அவைகளில், தம் முகம் காட்டாமல் விரிந்த மனப்பான்மை உடையவர்கள், என்னுடைய கவியை ரசித்து, குப்பையை அடைந்த என் கவிதைகளுக்கு, மேடையைக்கொடுத்தனர். அத்தகைய புகழை அளித்த அவர்களது முகம் திறந்த வடிவில் இருக்க, அதாவது, நேரில் நான் சந்திக்க வேண்டுமென்பதே என் மன விருப்பமாக அமைந்துள்ளது.

தனிமையும் தவிப்பும்

தனிமையும் தவிப்பும்
பெற்றவை விட்டன உற்றவன் செத்தனன்
முற்றமே கதியென மூதாட்டி வீற்றனள்
சோற்றுக்கு யாசிடும் நாக்கிலே கூசினள்
தேற்றிலன் உழைத்துண் சாக்கிலே ஏசினன்

மாரியுங் கதிரும் பலாத்காரத் தீண்டல்
குளிருங் காற்றும் அநியாயச் சீண்டல்
நடுங்கல் ஒடுங்கல் மாளல் - அநாதைப்பிணம்
இறந்தும் ஆத்மா தவிக்கிறது தகனத்திற்கு

- சரவணபெருமாள்

மருத நிலத்து மரிக்கொழுந்தே

மருத நிலத்து மரிக்கொழுந்தே - கிராமியக்கவிதை

வரப்பு மேல மரிக்கொழுந்தே! - நீ
சூதானமா நடந்து போடி
வழுக்கிவிட்டு தழுவும் குணத்தில்
வரப்பு உன்மச்சான் சாதி

நாத்து நடும் வேளையில - நீ
ஏத்தி கட்டுன சேலையடி
முட்டி ஒரசி நாத்து வளரும்
உரமும் போடத் தேவையில்ல

குருவி வெரட்ட வந்த குயிலே! - நீ
கத்தாம கூவுறியே
நெல்லு பொறுக்க வந்த மயிலே - மயங்கி
தோக விரிச்சு நின்னதே

எட்டிப்புடுங்க சிரமமுன்னு - அந்த
வாழைக்குலை சாயுதடி
எப்போ என்ன தின்னப்போற - அந்த
மாந்தோப்பு காயெல்லாம் ஏங்குதடி

காலடியில் ஒட்டுன சகதி - உன்
வீடு வரைக்கும் கூட்டிப்போற
கண்ணடியில் கவுந்த மச்சான் - ஏன்டி
என்ன விட்டுட்டு போற

மருத நெலத்து மரிக்கொழுந்தே! - நீ
என்ன வெல நானுந்தாரேன்
மாட்டேன்னு ங்கொப்பென் சொன்னா - ஒன்ன
தூக்கிட்டு போயி தாலிகட்டுறேன்

பத்து மாசம் ஆகட்டுமடி
முத்து ஒண்ணு கண்ணு முழிக்கும்
சொத்து வந்து சேந்ததுன்னு
மொத்தச்சொந்தம் பகை மறக்கும்

- சரவணபெருமாள்

சொல் விதைக்க ஆசை மச்சான்

சொல் விதைக்க ஆசை மச்சான் - கிராமியக்கவிதை
செந்தூரம் கெடைக்குமா
என்நெத்தி செவக்குமா
ஏரோட்டி நீ வடிச்ச வேர்வைய
கூந்தலில தொடைச்சிவிட வரட்டுமா

பாத்திகட்டும் மச்சானே
தாலிகட்ட எப்ப வாற
நாத்துநட நான் வந்த நேரத்துல
நெஞ்சுக்குள்ள நாத்துநடும் சோலி பாத்த

தலை நெறையா மல்லி வச்சேன் - உன்
மூச்சுப் படாம வாடிப்போச்சு
காலச் சுத்தி கொலுசு போட்டேன் - உன்
காது தொடமா அடங்கிப்போச்சு

கைவளையல் ஒடைக்க நீ வரலியே - உன்
ஏக்கத்துல உடல் இளைச்சு நழுவியாச்சு
ஆத்தங்கர ஆலமரத்த ஆக்கிரமிச்சோம் - போயே
ரொம்ப நாளாச்சு கிளிப்பேச்சும் ஏளனமாச்சு

ஒன்ன நெனச்சு தூங்காம நாங்கெடக்க
துணைக்கு நிலா முழிச்சு கெடந்துச்சு
சோறுதண்ணி பல்லுபடாம பட்டினி கெடக்க
சாப்புட்டமிச்சம் கெடைக்காம என்வூட்டுநாய் பட்டினியாச்சு

ஆசவச்ச மச்சானே பொண்ணுகேட்டு வரலியே
ஒண்ணுவிட்ட மாமங்காரன் வாயத்தொறந்து வந்துட்டான்
நெல்லுநாத்த சாட்சிவச்சு சொல்லெல்லாம் வெதச்சுட்டேன்
மச்சான்மடி சேராதாவணிய மண்ணெண்ணெய் எரிக்குமய்யா

- சரவணபெருமாள்

பூமியும் புலம்பலும்

பூமியும் புலம்பலும்

அடேய்! பாவிகளா! ஆருதந்த அதிகாரம்?
காடே காணவில்லை என்னவொரு துணிகரம்
மரத்தை யறுத்தீர் மழையைத் தொலைத்தீர்
மார்பது வற்ற ஆழ்துளை அமைத்தீர்

நெகிழிகள் புதைத்து நீர்த்தாகம் கொடுத்தீர்
மணலை அள்ளி ஆறுகள் கெடுத்தீர்
விளையும் பூமியில் வேதியியல் புகுத்தி
நெல்மணி பிறக்கும் கருப்பை அறுத்தீர்

- சரவணபெருமாள்

Monday, March 12, 2018

பொதுத்துறை வெற்றி

பொதுத்துறை வெற்றி - விருப்பக்கவிதைப்போட்டி

வெள்ளை யுடுத்திய நரிகள் - எங்கள்
           நாட்டில் திரிவதைப் பாரீர்
கட்சிக் கொடியே மாற்றம் - அவை
           ஆட்சி ஒரேக்குட்டை ஆகும்
வெள்ளை யனையன்று துரத்தி - இந்த
           கொள்ளைக் கூட்டங்களைப் புகுத்தி
எல்லாத் துறையிலும் ஊழல் - இங்கு
           ஏதும் விதிவிலக் கில்லை

காக்கிச் சட்டையை உடுத்தி
           காசுக்கு மக்களைத் துரத்தி
கர்ப்பிணிப் பெண்ணின் கொலையே
           காவல்துறை வெற்றி யாகும்
கோடிக் கணக்கிலே கொடுத்து
           வாங்க முடியாது தவித்து
கோவண மனிதன் அடித்து
           ஆயிரம் வசூல் வங்கிவெற்றி

சுகப் பிரசவம் தடுத்து
           பெண்ணின் வயிற்றைக் கிழித்து
பத்து நாளுக்கு வாடகை
           போட்டது மருத்துவ வெற்றி
கொலை செய்த எலிகள்
           வெளியே தாவத் துளைகள்
தேதி தள்ளி வைத்து
           செத்தபின் தூக்கு சட்டவெற்றி

- சரவணபெருமாள்

பாரதிப் பெண்ணே

பாரதிப்  பெண்ணே
வானிலேறு மண்ணைப்பிள
வரலாறாகு திடமாயிரு
வழியை மறித்தால்
வாளாய் மாறு
காமம் கொண்டவன்
கைகள் உடை
கேட்பவர் யாரடி
பாரதிப் பெண்ணே


- சரவணபெருமாள்

விதிமுறைகள்:

தலைப்பு : பாரதிப் பெண்ணே
* மொத்தம் எட்டு வரிகள்
*ஒவ்வொரு வரியிலும் இரண்டு சொற்கள்

Friday, March 9, 2018

எங்கே செல்கிறது, என் தமிழினம்?

எங்கே செல்கிறது, என் தமிழினம்?
அய்யாமாரே அம்மாமாரே இங்கே வாருங்க - நான்
கூத்துக்கட்டி பாடப்போறேன் வந்து கேளுங்க
எங்கபோகுது இந்தசனம் நம்ம தமிழினம்
எடுத்துவிடுறேன் கேட்டுக்கிட்டு நீங்க குந்தனும்

                              
                                      (அய்யாமாரே)

வந்தசனம் போனசனம் பொழைக்க தெரிஞ்சது
பொறந்தசனம் வந்தவனின் பின்னால் திரிஞ்சது
ஓட்டுக்கேட்டு வந்தவனின் கொடிய பிடிச்சது
ஒண்ணுமில்லாம ஆனபின்னே புத்தி தெளிஞ்சது

                              
                                    (அய்யாமாரே)

கட்சிக்கூட்டம் போகத்தானே பேருந்து வருகுது - அட
நெல்லுமணி அரைக்கபொம்பள நடந்து போகுது
நிறுத்தமில்லா இடத்துலயும் பொண்ணுன்னா நிக்குது - அட
பல்லுப்போன பாட்டிக்குத்தான் எங்கே நிக்குது

                              
                                    (அய்யாமாரே)
 
வெக்கையின்னு குளிர்சாதனம் வண்டியில் மாட்டுறான் - நடை
மேடையில குளிருதுன்னு கெழவன் நடுங்குறான்
வீட்டவிட்டு தொரத்தப்பட்டு வந்த கெழவியும் - எம்
புள்ளைக்கு தொந்தரவில்லையினு சொல்லி நடிக்குறா

                              
                                    (அய்யாமாரே)

கோடிக்கணக்கில் பணம்வாங்கிட்டு ஓடிப் போகுறான்
கோடியில இருக்குறவன் கடனுக் கலையுறான்
ஏமாத்திட்டு போனவனின் எரிவாயு ரத்து
கந்துவட்டி ஏழைக்குத்தான் உயிரே ரத்து

                              
                                    (அய்யாமாரே)

கடலுக்குள்ள எல்லக்கோடு எங்க இருக்கு - நடுக்
கடலுக்குள்ள வரைஞ்சுவச்சா தேவல எனக்கு
எல்லக்கோடு தாண்டிப்போனா கைது பண்ணுறான்
தாண்டாமயே பலநேரம் சுட்டுக் கொல்லுறான்

                              
                                    (அய்யாமாரே)

ஏன்னுகேட்க நாதியில்ல எவன்தான் இருக்கான்
கேட்கவேண்டியவன் வெளிநாட்டுல போயே கெடக்கான்
தமிழ்ச்சொல்லுல இசையின்னு பேரு பொம்பள
டெல்லிக்குத்தான் பின்பாட்டு பாடும் பொம்பள

                              
                                    (அய்யாமாரே)

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து குறள படிக்கிறான் - இவன்
ஆங்கிலத்தை கௌரவமாய் குரல உயர்த்துறான்
வங்கியில தமிழழிச்சு இந்தி திணிக்கிறான் - சில
கூட்டத்துல தமிழ்பேசி பல்டி அடிக்குறான்

                              
                                    (அய்யாமாரே)

அமெரிக்கா எருமைவாயில் அம்மா வருது
தமிழ்நாட்டு குழந்தைவாயில் மம்மி வருது
ஏனடா மாறிச்சென்றாய் மரபுத் தமிழா
சமூகத்தையும் அரசியலையும் மாற்று தமிழா

                              
                                    (அய்யாமாரே)

- சரவணபெருமாள்

சோறு கொண்டு போற புள்ள

சோறு கொண்டு போற புள்ள
நடையப்பாத்து காலுகொலுசு தாளம் போடுது - அட
வேலையப்போட்டுட்டு மாமன்கண்ணு ஒன்னத் தேடுது
சேலைலநூலா ஆகத்தானே பருத்தி ஏங்குது - உன்
மனசுலதங்கி வாழத்தானே நெஞ்சே விரும்புது

சோறுகொண்டு போறபுள்ள என்ன சோறுடி - உன்
மாமன்காரென் இங்கருக்கேன் இங்கிட்டு வாயடி
என்னவெஞ்சனம் கொண்டுவந்த எடுத்து வையடி - ஏதும்
இல்லையின்னா கடிச்சிக்கிட கன்னம் தானடி

கொழம்புலஏன்டி இம்புட்டுகாரம் ஒரைக்குது நாக்குடி - உன்
ஒதட்டுலஓடும் வெள்ளப்பாகு அள்ளித் தாயடி
சக்கரநோயி வந்துடப்போகுது முத்தம் போதும்டி - நான்
நித்திரபோட நெஞ்சப்பாயா விரிச்சுப் போடடி

கண்டாங்கில கண்டமுன்னு தெரியாமப் போச்சுடி - உன்
முந்தாங்கில முடிச்சுப்புட்ட வெளைச்சல் ஆச்சடி
இப்புடியே செத்தாக்கூட ஏதுங் கவலையில்ல - ஊர்க்கு
சோறுபோட புள்ளருக்கான் வெவசாயி வீட்டுப்புள்ள

- சரவணபெருமாள்

விகடகவி-1

விகடகவி-1
தேடாதே! தேமாதே! தேயாதே!
துவள்வது கலைக சீச்சீ!
மேளதாளமே, மாமா வினவி!

வினவி, மாமா மேளதாளமே!
சீச்சீ! கலைக துவள்வது
தேயாதே! தேமாதே! தேடாதே!

- சரவணபெருமாள்

(அனைத்து சீர்களும் விகடகவிச்சொற்களாய் இயற்றப்பட்டுள்ளன.)

கரு:
                 தலைவனைப்பிரிந்து தவிக்கும் தலைவியை, சமாதானப்படுத்தும் விதமாய், விரைந்து மேளதாளத்துடன் பெண்கேட்டு வருவதாகவும், அதுவரை துவளாமல், கவலையுறாமல் இருக்க வேண்டுமாய் உரைப்பது போல் இயற்றியுள்ளேன்.

முதல் பாடலின் பொருள்:

                  என்னைத்தேடாதே! தேன் மாதே! என்னையெண்ணித்தேயாதே!
துவள்வது வேண்டாம், கலைத்துவிடு; துவள்வது சீச்சீ எனத்தோன்றுகிறது.
விரைவில் மேளதாளமே, மாமனாகியா நான் உன்னைக்கேட்டு வரும் கருவியாக மாறும். 
                  (வினவி - வினவும் கருவி; கேட்கும் கருவி. கணித்தல் செயலை ஆற்றும் கருவி கணினி என்பது போல், வினவும் கருவியாக வினவி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

இரண்டாம் பாடல்:

                 உன்னைப்பெண்கேட்டு வரும் கருவி(வினவி), மாமா அழைத்து வரும் மேளதாளமே! சீச்சீ! துவள்வது ஏனோ? கலைத்துவிடு!
என்னையெண்ணியே தேயாதே! தேன் மாதே! தேடாதே!

தமிழரின் பொற்காலம்

தமிழரின் பொற்காலம்
 
கற்கால காட்டுநரன் திறவவாய் ஆவெனுமுயிர்
பிற்கால ஊமைவாயும் திறந்திடவே அஃதுமுயிர்
எக்காலும் எவ்வுயிரும் வாய்திறவ ஆவெனவே
எம்மொழி செம்மொழி ஆகயவர்வாய் ஆவெனத்திறவும்

எழுத்துச் சீரடிதொடை அணியென யாப்பிட
எளியரறி புதுக்கவிபிற புரட்சிகளாய் வெடித்திட
கல்லோலை கவிவிருந்து கணினித்திரை தொட்டிட
கற்காலமோ பிற்காலமோ பொற்காலமென சொல்லிட

- சரவணபெருமாள்

இரவல் இதயம்

இரவல் இதயம்
இல்லாரில் இருப்பதுவோ இரவல் இதயம்
இருப்பாரில் இல்லாதது ஈகை இதயம்
இரப்பாரின் கந்தைவழி அங்கம் தெரியும்
இவ்வங்கம் இரந்திடவே சிலகண் திரியும்

இரக்கும் பெண்ணவள் இரவல் கேட்க
இரந்து கேட்கவுளர் பெண் உடம்பை
இரக்கும் பெண்ணெனினும் ஈவாளோ உடம்பை
இரும்பிலவே வலுக்கொள இழந்தாள் உடலை

இல்லாரை மிரட்டி பிள்ளை இரந்து
இருப்பதை உடைத்து ஊனங்கள் உடுத்து
இறக்கியதே சாலையில் கூட்டம் பணமிரக்க
இடித்ததே எதிர்காலம் அவர்கரம் பணமிருக்க

இல்லையே உணவென இருப்பவர் பல
பெற்றார் பேரறியா குளவிகளும் உள
இல்லங்கள் இயக்கும் இதயத்தில் சில
புரவலர் புரக்கும் நிதிக்காய் உள

இருக்கும் போதும் இரக்கும் அவலம்
இறந்ததை வாங்கவும் இரக்கும் உலகம்
கயமையாற்ற இருப்பார் ஈகிறார் இங்கே
பசியையாற்ற இல்லார் முனைகிறார் கயமையே

ஐந்தாம் ஆண்டே அடுத்தது வரும்
ஐக்கியமே அந்தநொடி இரவல் கூட்டம்
காலைப் பிடிக்கும் கையைப் பிடிக்கும்
கோட்டை பிடிக்கும் ஈகைமறக்கும் மறுக்கும்

பிறப்பும் இரவல் மரத்திடம் மூச்சிரவல்
உண்டுடுப்பது இரவல் இருந்தீவதும் இரவல்
ஈகைநல்லாள் பூமியில் இரவலே இதயம்போலே
அனைத்துமிரவலே அதில்கொஞ்சம் ஈவாய் மனிதா

- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...