Saturday, April 28, 2018

கனவுக்குள் ஒரு பூகம்பம்

கனவுக்குள் ஒரு பூகம்பம்


உடற்விழி திறந்த உயிரெனவே - நான்
      உளவிழி திறவ பள்ளி சென்றேன்!
உலகுக்கே விளம்பரம் இலவசக் கல்வி
      உண்மையில் அதுவொரு வியாபாரமே!

தாயவள் மடியிலே நித்தமும் உறங்கி
      தடையில்லாத் தூக்கமும் நானுங் கண்டேன்!
தவறித்தான் போனதே தாயவள் அன்பு
      தட்டிப் பறித்தது விதிச்சதியே!

வாழ்வினைக் கடத்திட வேலைக்குச் சென்றிட
      வந்து போனேன் நான் கல்லூரிக்கு!
பட்டமும் வந்தது! சான்றிதழ் வந்தது!
      எப்போது வேலை வருமெனக்கு?

கனவிலே பூகம்பம் தாங்கிய படியே
      கால்களும் நகர்ந்தன நிலவழியே! - அங்கே
வானையே நம்பியே வயக்காடு வீற்ற
      விவசாயி வாழ்வு பேரழிவே!

- சரவணபெருமாள்

பயிர் செய்ய விரும்பு

பயிர் செய்ய விரும்பு


 
மாட்டோடு அதிகாலை பயிர்க்காடு!
    காட்டூடே மரமெங்கும் புள்கூடு!
கட்டிடங்கள் நாட்டிடவே நரமாடு
    வெட்டமரம் காடெல்லாம் சுடுகாடு!
நீரின்றி வாடாப்பயிர் அந்நாளே!
     நீரின்றி நிலவெடிப்பு இந்நாளே!
பறந்தன நடந்தன கண்டதெல்லாம்
    இருப்பது திரைப்படம்தான் இந்நாளே! 

அனைவருமே அலுவலகம் சென்றாலே
    அறுவடைக்கு உழவோட்ட ஆரங்கே?
மனைநிரம்ப பணமெல்லாம் கிடைத்தாலும்
    உனைமாற்றி உழுதிடவே துணிவாயோ?
முனையாது போனாலும் போயேண்டா!
    மழைமுடக்கும் மரமறுக்கும் பணியேனோ?
மனையருகே மரமொன்று நடுபோதும்!
    மிச்சமுள்ள உழவனுக்கு மழைவரட்டும்!

காடழித்த வீடழிக்குமா நின்பசியை?
    நாடோடிய பணமழிக்குமா நாருசியை?
எண்களையே கொண்டதுவும் வெறுந்தாளே!
    நதிவறண்டு பஞ்சம்வரும் அந்நாளே!
உழுவதிலே மலைப்பென்ன? குறைவென்ன?
    உயிர்காப்பவன் உயிர்காப்பான் உழவனன்றோ?
போதுமடா! ஏடெடுத்து நிழலாடியது!
    உழுதிடுவோம்! பயிர்செய்து உயிர்காப்போம்! 

-    சரவணபெருமாள்

Thursday, April 26, 2018

விளையாட்டாய்ப் பசியென்றேன் அம்மா!

விளையாட்டாய்ப் பசியென்றேன் அம்மா!

குருதி வெளுத்து ஊட்டினாயே!
        குறைக ளின்றித் தேற்றினாயே!
விதிகள் சதிகள் செய்திடவே
        வீதி வந்து நாமமர்ந்தோம்!
சேலைக் குடையே வெயில்மழைக்கு!
        சோலைக் குயில்நீ நானுறங்குதற்கு!

கொஞ்சங் கிடைத்த சோற்றையுமே
        கொஞ்சி ஊட்டியுன் பசிமறப்பாய்!
இன்று ஏதும் இல்லையென்றால்
        ஒன்றும் இல்லை தாய்ப்பசுவே!
கலங்காதே! விளையாட்டாய்ப் பசியென்றேன்!
        உன்முகத்தைப் பார்த்தேநான் பசிமறப்பேன்!

- சரவணபெருமாள்

சிறுமொட்டும் பெருநெருப்பும்

சிறுமொட்டும் பெருநெருப்பும்


பாரதி பிறந்த பூமியிலே - யாமும்
பிறந்திட்டோ மென்றோம் கர்வத்திலே! - அதை
பாதகர் காமுகர் காமத்திலே கூடி
பாருக்கு முன்னே உடைத்தனரே!

நேற்றுதான் பெய்த மழையினிலே - இங்கு
அரும்பிய மொட்டுகள் செடியினிலே! - ஐயோ
பூத்து மணங்கூட பரப்பவில்லை - வண்டு
மொட்டினைக் குடைந்து கசக்கிடுதே!

பால்மணம் வீசும் பவளக்கொடி மேலே
காமத்துப் பாலினைத் தேடுதம்மா! - ஐயோ
மொட்டிதழ் படிந்த பனித்துளியில் - பல
முதலைகள் குளித்திடத் துடிக்குதம்மா!

பிஞ்சவள் முகங்கண்ட ஐந்தறிவு நாயும்
கொஞ்சிடும்! ஆபத்தில் குரைத்திடுமே! - இந்த
ஆறறிவு மனித மிருகங்கள் செயல்
வேலியே பயிரை மேய்ந்தகதை!

புனிதமே கெட்டுப் போய்விடும் என்றே
அடைத்திட்டார் பெண்ணுக்கு ஆலயத்தை! - இங்கு
கருப்பை வளரா பனிப்பூவிதழ் - ஐயோ
பொசுங்கிய தீட்டுக்கு யார்பொறுப்பு?

- சரவணபெருமாள்

Wednesday, April 25, 2018

என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்

என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்

வெய்யோனே! வேளை தவறாதோனே!
           வெளிநாடு போனவனைப் பார்த்தாயோ?
நிலவோனே! நித்திரை ரசிப்போனே!
           நிதமுணவு உண்பானோ? அறிவாயோ?
மழைமகளே! மகனவனைக் கண்டாயோ?
           மழைசேராதே! தீண்டாது விடுவாயோ?
வளியோனே! விழிப்பார்வை மறைந்தோனே!
           வந்தமாசு வடித்தேயவன் மூச்சாவாயோ?

காடுகரை காலிறக்கி காசாக்கி
           கடல்தாண்டி அனுப்பினேனே ராசாத்தி!
கைபேசி ஒன்றனுப்பி அவன்பேச
           கண்ணீர்தான் வந்ததடி, நாவடக்கம்!
கன்னத்தில் கைவைத்து பகலெல்லாம்
           கண்ணிமையாது கைபேசி பார்த்தேனே!
நள்ளிரவில் அடித்தமணி அடங்கிடவே
           நுன்மகனிடம் அதைக்காட்ட நிறுவனமாம்!

வீடுண்டு! காடுண்டு! அன்புத்தோழியே!
           உடலுண்டு! உயிருண்டு! அவனில்லையே!
வெளிநாடு அனுப்பிய வீராப்பெனக்கு
           அந்திமாலை வந்ததுமே அடங்கிப்போனதே!
அய்யய்யய்யா! அம்மம்மம்மா! அப்பப்பப்பா!
           என்மகன் வெளிநாட்டில் இருக்கிறான்!
வந்திடுவான்! கண்டிப்பாக வந்திடுவான்!
           வாடா!தங்கமே! வருவான்! அவன்வருவான்!

- சரவணபெருமாள்

மலர்களைக் காப்போம்

மலர்களைக் காப்போம்


மலர் காக்க மன்றம் வைத்தால்
மதம் பிடித்த மிருகக் கூட்டம்
மலரும் முன்னே மொட்டு பிய்த்து
மணம் நுகர மதிகெட்டுத் திரிகிறதே!

வலியாது தேனுறிஞ்சும் வண்டு கூட
வழிவிடா மலரிதழைத் தீண்ட லாகாது!
வலுவோடு வஞ்சிதழை வாழ் வழிக்க
வந்திட்டால் வழிமறித்து வேலெனவே தாக்கிடுவோம்!

- சரவணபெருமாள்

மனிதம் மறந்தார்

மனிதம் மறந்தார்
ஏனென்று தெரியாது!
கள்ளங்கள் அறியாது!
கண்சிமிட்டு போதும்;
கன்னக்குழி சிரிப்பு பரிசாகும்!

காதலென்று தெரியாது!
காமமென்று அறியாது!
சுமக்கின்ற முத்தங்கள்
கபடமென்று அறியாது!
கயமைத்தனம் புரியாது!

பிஞ்சுமுகம் நோக்கியவர் 
பித்தாய்த்தான் போனதுண்டு!
கலிகாலம்!
நஞ்சுமுகம் உடுத்தவரே
பஞ்சணைக்குப் பிஞ்சழைத்தார்!

பால்முகத்தை காமப்பாலாக்கி
பலியாக்கி
மனிதம் மறந்தார்!

- சரவணபெருமாள்

Sunday, April 22, 2018

பனிப்பூக்கள்

பனிப்பூக்கள்


பள்ளம் நோக்கிப் பாயும் நீர்,
நுனிப்புல்லின் உச்சியிலும்
பனிப்பூவிதழ் மேல்தட்டிலும்
அமர்ந்து
இறங்க மறுப்பதேன்?

வடிவமற்ற நீர்மம்
சிறு உருண்டைகளாய்
பூ மடல்களின் மேல்
வடிவம் பெற்றது எப்படி?

தூசியின் பாரமும்
தாங்காத புல் நுனி,
விண்பொருள் பனியை
தாங்கிப்பிடித்தும்
தலை நிமிர்ந்து நிற்பதன்
இரகசியம் தான் என்ன?

வேரில் உறிஞ்சிய நீரா?
வானம் எறிந்த பனியா?
பூக்களின் நடுவில்
தேனாறு!
அந்தப் பூக்களைச்சுற்றி
வண்டுகள் ஒரு நூறு!

தேன் மட்டுமே
களவாடிச் செல்லும் வண்டுகள்
பூவைக் காயப்படுத்தியதில்லை!
உன் கூந்தலின் மணத்திற்கு
பூவையே களவாடும் கன்னியே!
மணம் மட்டும் களவாடி
பூவை விட்டுவைக்கும் வித்தை
உன்னிடம் இல்லையோ?

பெண்ணைப் பூ என்பார்!
தினம் ஒரு பூ ஒடித்து
தன்னினத்தையே
அழித்தொழிக்கும்
பூவரக்கியடி நீ!

அதென்ன?
கல்லின் மனதிற்குள்
திடீரென
இத்தனைக் கேள்விகள்!
இத்தனை ரசனைகள்!
கேள்விக்கணை தொடுக்காதே?

ஆம்!
இரும்பு இதயம்
கரும்பாய் மாறிவிட்டது!
காதல் வயப்பட்டது!
பெண்ணே!
ரசனையே அற்ற என் விழிகள்
ஒவ்வொரு அசைவினையும்
ரசிக்கத் தொடங்கி விட்டது!
பனித்துளியிலிருந்து
பனிப்பூவிலிருந்து
பனிமலை வரையிலும்!
பார் வியக்கும்
வான்தொலைவு தாண்டியும்!

இன்னும் என்ன சொல்ல?
நீ பூ!
நான் பனி!
விழுந்திட்டேன்!
ஆதலால்,
நாம் பனிப்பூ!

- சரவணபெருமாள்

வாழ்க நம் நட்பு!

வாழ்க நம் நட்பு!

ஓடும் மேகம்
ஓரிரு நொடி நின்று
நம்மை வேடிக்கை பார்க்கும்;
நேசம் நிறைந்த நட்பு வாழும்
இவ்விடம்
மழை பொழிவோமென!

வருவதற்கு
வாகனம் இருந்திருந்தால்
வானத்துச்சந்திரன்
நட்சத்திர நட்பை முறித்து
நம்மிடம் வந்திருப்பான்!

எதிர் வந்த எமன் கூட
உண்மையான நண்பர்கள்
வாழட்டுமென
ஆயுட்காலம் நீட்டிச்செல்வான்!

நாலாபுறம் சிதறும் குண்டுகள்
நட்பிருந்தால்
நலிந்து போயிருக்கும்;
அவர்கள்
நம்மைப்பார்த்து
கற்றுக்கொள்ளட்டும்!

வா நண்பா!
வாழ வேண்டும் நூறு ஆண்டு!
நீ மட்டுமல்ல;
நம் நட்பும்!
வாழ்க பல்லாண்டு!

- சரவணபெருமாள்

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

தமிழே எங்கள் உயிர்மூச்சு!

கரையைத் தாண்டும் கடல்நீரும்
          கட்டுண்டு கிடந்திடும் நாள்பல!
கடலைத் தாண்டிக் கண்டந்தாவும்
          கன்னித்தமிழ் கட்டிட யார்உல?
குகைகளில் நுழைந்து பாரும்;
          மலையெங்கும் எந்தாய்த் தமிழே!
தரையைக் குடைந்து பாரும்;
          மட்காத எந்தமிழ்ச் சுவடிகளே!

மரத்தில் பிறந்த பிராணம்
          இன்றியும் வாழ்வோம் ஓரிருநொடி!
உயிருள் உறைந்த தமிழும்
          இல்லையேல் முடிந்திருக்கும் மரணம்!
ஊமையாய்ப் பிறந்தும் இருந்தால்
          உயிரை என்றோ மாய்த்திருப்போம்!
உன்னதத் தமிழை உச்சரியா
          உயிரும் இருந்து என்னபயன்?

ஊமையாய்ப் பிறப்பது விதியேயென்றால்
          மாடாய்ப் பிறந்து அம்மாவென்போம்!
மரமாய்ப் பிறப்பது உறுதியென்றால்
          தமிழ்க்கவி புரளும் காகிதமாவோம்!
சொர்க்கத்தில் தமிழ்மொழி இல்லையென்றால்
          முக்தியும் வேண்டுடாமென்றே பிறப்போம்!
மறுபடி பிறப்பு தமிழில்லையென்றால்
          மறுநொடிமாண்டு தமிழனாய்ப் பிறந்திடுவோம்!

- சரவணபெருமாள்

Saturday, April 21, 2018

கைகளுக்குள் கை

கைகளுக்குள் கை

பெற்றார் கரத்துள் கைகள் புதைத்தால்
சுற்றும் நோக்கோம்! ஏதும் கேட்கோம்!
கடலும் மிதிப்போம்; படகென அவர்கை!
நெருப்பும் உடுப்போம்; நனைக்கும் அன்புமழை!

கற்றல் நேரம் கரங்கள் பிடித்து
தேற்றல் அவரே கற்றேன் எழுத்து
சிற்றாய் நடக்க பற்றிய கரங்கள்
முற்றிய போதும் கைதியாய் அடைக்கும்!

தாயுந் தந்தை தங்கை தனயன்
நோயுந் தீரும் ஒன்றிட அன்பில்
யாரும் அடிக்க புகாரும் அளிப்போம்!
தாயிடம் தந்தை தாய்க்குத் தலைகீழ்!

- சரவணபெருமாள்

விளக்கம்:

பெற்றோருடைய கைகளுக்குள் எங்கள் கைகள் புதைந்து இருந்தால் (அவர்கள் எம் கைகளைப் பிடித்திருந்தால்), சுற்றி நடப்பது என்னவென்று பார்க்க மாட்டோம்; ஏன் எதற்கு என்று கேட்க மாட்டோம்.  கடலையும் மிதித்து உள்ளே நடப்போம். படகென அவர்கள் கை இருக்கும் தைரியமே! நெருப்பையும் ஆடைபோல் உடுப்போம், அவர்களின் அன்பு மழை நனைத்துவிடும்! (அன்பு கொண்ட அவர்கள் எப்படியும் அணைத்துவிடுவர் என்ற தைரியமே!)

பாடங்கள் கற்க ஆரம்பித்த காலம், எம் கரங்களைப்பிடித்து, எழுதக்கற்றுக் கொடுத்து தேற்றியவர் அவர்களே! அவர்களால் தான் எழுத்துக்களை எழுத எளிமையாய்க்கற்றோம். சிறுகுழந்தையாய் இருக்கும் போது, நடைபழக என்னைப்பற்றிய கரங்கள், முற்றியவன் போல் ஆன போதிலும், விட்டுவிடவில்லை. கைதி போல் கரங்களுக்குள்ளே வைத்திருக்கிறார்கள்.

தாய், தந்தை, தங்கை, தனயன் என எல்லோரும் ஒன்றாய் அன்பில் கலந்து மகிழ்ச்சியாய் இருந்தால், நோயெல்லாம் தீரும். எம்மை யாராவது அடிக்க வந்தால், உடனே புகார் அளிப்போம். எப்படியென்றால், தந்தை அடித்தால் தாயிடமும், தாய் அடித்தால் அதையே தலைகீழாய் தந்தையிடமும் சென்று புகார் அளிப்போம்

Friday, April 20, 2018

தனிமையின்றி வந்துவிடு!

தனிமையின்றி வந்துவிடு!


தனிமையில் இனிமை கனியுமா பெண்ணே?
நிலவின் தனிமை அழகென்னும் உலகம்,
நிலவின் சோகம் அறிந்தது இல்லை!
நீயில்லா என்சோகம் நீயேயறிவாய் வந்துவிடு!
 
- சரவணபெருமாள்

தாய் மண்ணே வணக்கம்-தமிழ் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்-தமிழ் மண்ணே வணக்கம் 


தாய் மண்ணே வணக்கம்
         தேய் வில்லை உனக்கும்
சேய் கோடி இருக்கோம்
         நாய் போலே இருப்போம்
வாய் சொல்லும் உன்சொல்
         மெய் வீழும் உன்கால்
மாய் வுண்டு எமக்கே
         சாய் வில்லைத் தமிழே

ஓர் எழுத்தும் ஒருபொருளே
         ஈர் அடிகள் இவ்வுலகே
ஊர் வந்த மேநாட்டார்
         பேர் மாற்றித் தமிழானார்
பார் மருண்ட பரங்கியர்
         நேர் நில்லார் பாரதிக்கு
ஏர் ஓட்டோன் நாவிலும்
         தேர்ந் தெழுமே நாட்டுப்புறம்

குமிழ் போலே வெடியாது
         சிமிழ் போலே குறுகாது
உமிழ்த் தேனே அஃதேயது
         அமிழ் செயும் அதேயது
அமிழ் தம்தான் உண்டீரோ
         தமிழ் மாந்தர் உண்டவரே
அமிழ்ந் தோமே உன்னுள்
         தமிழ் மண்ணே வணக்கம்

- சரவணபெருமாள்

சோறு கொண்டு போற புள்ள 2- கிராமியக்கவிதை

சோறு கொண்டு போற புள்ள 2 - கிராமியக்கவிதை

மஞ்சள பூசிட்டு மச்சான தேடிட்டு
         மத்தியானச் சோறு கொண்டு போற
நெஞ்சுல ஒன்னத்தான் தூக்கிச் சொமக்குற
         மச்சான் இங்கருக்கேன் தாண்டிப் போற

கண்டாங்கிச் சேலைல புத்தி கெட்டுப்போச்சு
         முந்தாங்கில விட்டேன் கத்திக் கப்பல்
வீட்டுல விட்டது காட்டுல சிக்குது
         கட்டி யணைச்சா முத்தச் சொக்கல்

அலுத்துப் போயி மச்சான் ஒக்காந்துபுட்டேன்
         சோறு அள்ளிக் கொஞ்சம் ஊட்டுபுள்ள
அச்சச்சோ ஊட்டேல கைய கடிச்சுப்புட்டேன்
         முத்தம் மருந்தாத் தாரேன் புள்ள

வெஞ்சனம் என்னடி கொண்டு வந்த - அது
         ஒன்னத் தொட்டுக்கிறது போல இல்ல
கஞ்சத்தனம் ஏதும் மாமங்கிட்ட வேணாம்
         கன்னத்தக் கொண்டாடி கடிச்சிக் கிற

ஆலமரத்தோட ஆணி வேரு போல
         ஆச வெச்சுப்புட்டேன் ஒம்மேல தான்
பாயிமேல வெச்ச ஆச இல்ல
         ஒன்நெஞ்சுக் குழியில தங்கிடத் தான்

- சரவணபெருமாள்

விழி!

விழி!

விழி!
குழிக்குள் கிடந்தாலும்,
தாவித்தான்
உலகைக் காண வேண்டுமென்ற
அவசியமில்லை!

விழி!
விண்ணைக் குடைய
வழி தேடும் வண்டு!
சில நேரம்
நெஞ்சைக் குடையும்
பெண் வண்டு!

விழி!
அதுவே காதலின் வழி!
இமை மூடி
தூக்கம் தந்தாலும்
கனவிற்கு விடும் வழி!

விழி!
குரல் இல்லாத மொழி!
அசைவில்
அனுப்பிடும்
குறுந்தகவல் மொழி!

விழி!
எப்போதும் தன்னைப் பார்த்ததில்லை;
எதிர் பிம்பம் சுமக்கும்
சுமை தாங்கி!

விழி!
வழுக்குப்பாறை!
கொஞ்சம் ஏமாந்த ஆண்கள்
விழுவது உறுதி!

விழி!
உப்பு நீர் ஏரி!
சிரித்தாலும் ஊற்றெடுக்கும்!
அழுதாலும் ஊற்றெடுக்கும்!
அழுகை
மனைவிமார் சாமர்த்தியம்!

விழி!
விளக்கம் கேட்டும்
தான் பாராமல் நம்பாத
சந்தேகப் பேர்வழி!

விழி!
மாமன் மகளை
மயக்கி ஆட்டும்
ஆண்களின் மந்திரக்கோல்!

விழி!
உலகின்
முதல் நேரலை தொலைக்காட்சி!

விழி!
ஆசையைத் தூண்டும்
முதல் குற்றவாளி!

விழி!
கண்ணாடி முன் சென்றால்
அகலாத
பெண் தோழி!

விழி!
காதலியின் வரவின்றி
வழி நகலாத
ஆண் புலி!

விழி!
கூடுவிட்டு கூடு பாயும்
வித்தை அறிந்தது!
புரியவில்லையா?
கண் தானம் செய்யுங்கள்!
உங்கள் கூடு விட்டு
இன்னொரு கூட்டில் குடியேறும்!
ஒளியேற்றும்!

- சரவணபெருமாள்

ஏதோ நினைத்து...!

ஏதோ நினைத்து...!


தனிமையே!
உன்னைத்தழுவுதா மன்னவா?
ஏதோ நீ நினைத்து
ஏனடா அமர்ந்தாய் தனியாய்?
சோகம் விட்டு வா!

தேன் துளி மேகம் நான்!
உன் மேல் துளி ஊற்றவா?

பால் விழும் நிலவு நான்!
உன் தாகத்தில் நுழையவா?

காதலின் வாயிலில் நின்று
பன்னீரைத் தெளித்தழை வாரேன்!

பூக்களில் கம்பளம் விரித்து
கைவிரல் கோர்த்தழை வாரேன்!

சாரலும் வெய்யலும்
பூமியின் மத்தியில்
ஒன்றாய் கலப்பதும் உண்டு!

முதலும் முடிவும்
வார்த்தையில் உண்டு!
இன்பத்தில் நமக்கது இல்லை!

பனிப்புகை மல்லி நான்!
உன் வாசனைத் திரவியம்!

கசந்திடும் வேம்பில் நான்
நீ சுவைத்திடும் தேன் கனி!

மயில்களின் தோகைகள் கோர்த்து
சாமரம் வீசு நான் வாரேன்!

குயில்களின் குரலொலி பழகி
தலையணை உதட்டினில் தாரேன்!

மைவிழி சாயத்தில்
கருமைகள் குறைந்தால்
காக்கையின் சிறகுகள் போதும்!

நெற்றியின் இடைவெளி
குங்குமம் நீ இட
காத்துக்கிடப்பதும் போதும்!

- சரவணபெருமாள்

மனசுக்குள் எப்படி வந்தாய்? - கிராமியக்கவிதை

மனசுக்குள் எப்படி வந்தாய்? - கிராமியக்கவிதை



சந்தைக்கு நான் போகும்போது
         சடைய புடிச்சு இழுத்தவனே    (சந்தை..)
கடையோரம் நானும் வந்தா
         கண் ணடிச்சு கவுப்பவனே
இன்னொருத்தி கூட வந்தா
         அவளயுந் தான் புடிப்பவனே

கொஞ்ச நஞ்ச சேட்டையா - நீ
         செஞ்சுக் கிட்டு கெடக்க
எதுவும் எனக்கு புடிக்கல - பின்ன
         எப்படி வந்த மனசுக்குள்ள


சடங்குக்கு குச்சு கட்டி
         கெடங்கு போட்ட நெஞ்சுக்குள்ள    (சடங்கு..)
தடங்கலும் ஏதும் இல்ல
         மாமென் மகென் நீயும்வர
என்னயத்தான் பாக்க வந்து
         தங்கச்சிக்கும் தூதும் விட்ட
                              
                                (கொஞ்ச நஞ்ச..)


குளிக்கத்தான் நான் போக
         ஒளிஞ்சிருந்து எட்டிப் பாத்த  (குளிக்க..)
துணியோட நான் குளிக்க
         மச்சான் நீயே ஏமாந்த
வந்தவர ஏன் விடணும்
         மஞ்சவாசம் மோந்து போன
                              
                                (கொஞ்ச நஞ்ச..)


தண்ணி எடுக்கப் போகும்போது
         கொடந் தூக்க வாரேங்குற   (தண்ணி..)
கொடந்தூக்கி தர்ற சாக்குல
         இடுப்புல தானே கிள்ளிப்புற
தடுமாற புடிக்கும் சாக்குல
         இறுக்கித் தானே கட்டிக்கிற
                              
                                (கொஞ்ச நஞ்ச..)


- சரவணபெருமாள்

மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

 மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை



புனிதமான புதுமலர்கள் பூத்ததுமே நிலையில்லை
இனிமையான முகங்கண்டும் எரிகுண்டா? அறமில்லை
மனிதமோட்டும் மதத்தவர்கள் மானுடராய் பெயரில்லை
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

- சரவணபெருமாள்

( சிரியாவை மையப்படுத்தியது)

Thursday, April 19, 2018

அழகுப்பதுமைகள்

அழகுப்பதுமைகள்



பதுமையுடன் பவனிக்கும் பட்டழகு குழவியது
புதுமையுடன் பதம்பாடி பித்தாக்கும் குரலுமது
விதங்கேட்ட கவிவாயும் விளிக்கின்ற பொய்யுமது
எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதையிது

- சரவணபெருமாள்

பதுமை              - பொம்மை
பவனி                - ஊர்வலம், உலா போன்று; தேர் பவனி வருகிறதென்று உரைப்போம் அல்லவா!
பட்டழகு             - பட்டுப்புழு போல் அழகு
குழவி                 - குழந்தை
பதம்பாடி           - பாடல் பாடி (சொற்பதம், பொருட்பதம் போன்று)
பித்தனாக்கும்  - பைத்தியமாக்கும்
விதங்கேட்ட    - முந்தைய அடியின் இறுதி அடியுடன் தொடர்பு படுத்திக்கொள்க; குரலதன் விதங்கள் கேட்ட
கவிவாயும்       - கவிஞர்கள் வாயும்
விளிக்கின்ற    - சொல்கின்ற; இயம்புகின்ற

பொம்மையுடன் பவனிவரும் பட்டுப்புழு போன்ற அழகான குழந்தையின், பதம்போல் பாடலாய் தோன்றும்,நம்மை பித்தனாக்கும் புத்தம் புது குரலொலியின் விதங்கள் கேட்ட கவிஞர்கள் வாய்கூட பொய்யுரைக்க தயாராகும்; அந்த குரல் "எதுகையுடன் மோனையையும் எடுத்தியம்பும் கவிதை இது" என்று.

நான் ஐநா சபைத் தலைவரானால்

நான் ஐநா சபைத் தலைவரானால்


ஆசனம் அழைத் தெம்மை
         அங்கே யமர்த் திட்டால்
அன்பே ஐநாக் குறியாய்
         ஆகுங் காலம் விடியும்
ஈழம் உடனே யமையும்
         நீதி அன்றே விடியும்
தமிழரை யழித்த கைகள்
         மக்கள் முன்னே ஒடியும்

சிரியாக் குழந்தை மரணம்
         தந்தவர் தலைகள் உருளும்
மதங்கள் நுழையும் இடத்தின்
         வாசற் கதவுக ளடையும்
தீவிர வாதக் கோட்டை
         பேச்சு வார்த்தையில் தகரும்
வெள்ளைக் கொடிகள் எல்லாம்
         ஓய்வாய் உறங்கச் செல்லும்

அகதிகள் என்றொரு வார்த்தை
         அடுத்த தலைமுறை மறக்கும்
யாரும் எந்த நாடும்
         சென்றே வாழ முடியும்
கடவுச் சீட்டு வேண்டாம்
         நாடுகள் கடக்க முடியும்
வன்முறை யொழிந்த உலகில்
         ஆவண மிங்கே யெதற்கு?

உலக மொழிகள் பிழைக்கும்
         தமிழ்த்தாய் மொழியாய் நிலைக்கும்
ஆதித் தமிழர் முறைகள்
         மீண்டும் உலகை நடத்தும்
உலகே பசுமை ஆக
         உன்னதத் திட்டம் பிறக்கும்
விலங்கு பறவை எல்லாம்
         வீட்டு உறுப்பின ராகும்

- சரவணபெருமாள்

கண்ணாடி இதயம்

கண்ணாடி இதயம்


கடவுள் வடித்த கண்ணாடி
அம்மா!
கொஞ்சம் சிரித்துப்பார்!
உதட்டின் மத்தியில்
நட்சத்திரங்கள் காட்டும்!
அதிநவீனம் ஆதலால்,
சிரிப்பின்
அதிகபட்ச எதிரொளித்தரம்!

குருதி
கொஞ்சம் சிந்திப்பார்!
உன் வலிக்கு துடிப்பதில்
கண்ணாடியிடம்
நீயே தோற்று நிற்பாய்!
அதிநவீனம் ஆதலால்,
துடிப்பின்
அதிகபட்ச எதிரொளித்தரம்!
நொறுங்கலாம்!

கண்ணாடியில் காட்சிப்பிழை!
நீ சாப்பிட்ட பின்பும்
சாப்பிட்டு பிரதிபலிக்காது
ஏழை வீட்டுக்கண்ணாடி!
நீ பசியாற
தான் பட்டினியாகும்
உணவுத்தட்டுப்பாட்டில்
ஏழைக்கண்ணாடி இதயம் அது!

- சரவணபெருமாள்

பெண்மையைப்போற்றுவோம்

பெண்மையைப்போற்றுவோம்


அரசு விடுமுறை அவளுக் கில்லை!
       துணிகள் துவைக்கச் சம்பள மில்லை!
புகையும் பிடிக்கிறாள் அடுப்படி உள்ளே!
       இருமல் கண்ணீர் நகர்த்திட வில்லை!
மெழுகென வுரைத்தோம் சிலையா யில்லை!
       எரிந்தொளி தந்தவளில் விடிய லில்லை!

குடிப்பவன் வாய்க்க குடும்பம் காக்கிறாள்!
       குடும்பத்திற் காக இலட்சியம் துறக்கிறாள்!
வானிலு மேறுவாள்! நாட்டையு மாளுவாள்!
       உடன்பிறந்தார்க் குழைத்து முதிர்க்கன்னி யானதேனோ?
தேய்ந்ததும் வளர்பிறை ஆகிறதிங்கே! - தேய்ந்திட்ட
       நிலவெனும்பெண் வளராள்! தியாகப்பெண்மை போற்றுவோம்!

- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...