Friday, December 29, 2017

முடியும்.... விடியும்....

முடியும்.... விடியும்....
முடியாது என்றசொல்
முடியும்
விடியாத இரவுகள்
விடியும்
உழைத்திடு மனிதா!
சாட்சியாய் விடிக்கிறது
மின்விளக்கு
உழைப்பே 
உன்வாழ்வின் ஒளிவிளக்கு

பட்டங்கள் வாங்கிய இளைஞனுக்கு
நட்டங்கள்
சான்றிதழின் நகல்கள்
வேலை தேடுவதே
ஒரு வேலையாக
"தம்பி என்ன வேல பாக்குற"-என்று
கேட்டு மகிழ்வதே
சுற்றாரின் வேலை
கலங்காதே! கரையாதே!
முயற்சிகளே
உன் விடியலுக்கு சேவல்கள்

இயந்திரம் ஒன்று
மாலையில் மனிதனாகிறது
தன் குழந்தையோடு
குழந்தையாகிறது
வேலைக்குச்செல்லும்
தந்தையின் விடியல்கள்
காலையல்ல
மகவோடு விளையாடும்
மாலை

பகல்முடிய
ஆடவரின் வீராப்பும் முடியும்
தலையணை மந்திரத்தில்
மனைவியின்
சொற்களனைத்தும் விடியும்
நகைப்புக்குச் சொல்லும்
இந்த நகைச்சுவையும் முடியும்
பெண்ணின்
அன்பிலும் அர்ப்பணிப்பிலும்
குடும்பமே கட்டுப்படும்
நாளும் விடியும்

மஞ்சுவிரட்டை
விடிய வைத்த இளைஞரே!
மாநிலத்தையும்
விடித்திட முடியும்
மாணவருக்குப்பயந்து
மூடப்பட்ட மெரீனாவும்
திறவும்

ஏமாற்றப்படும் மக்களே!
வாங்கும் ஆயிரம்
ஒருநாள் மட்டும் 
விடியல் தரும்
விலையில்லா வாக்குகள்
நிச்சயம்
ஒவ்வொரு நாளும்
விடியல் தரும்

பகலொன்று முடிந்தால்தான்
மின்மினிகள் திரியும்,
இரவுகள் விடியும்;
நிலவொன்றும் தெரியும்
எதையும்
முடிந்ததென்று வருந்தாதே
அனுபவமாய் அது விடியும்

முயற்சியதை விட்டுவிட்டால்
எல்லாமே முடியும்
முயற்சியதை தொடரவிட்டால்
முடியாததும் முடியும்;
விடியாததும் விடியும்
முயன்றிடு தோழா!
உன்னால் முடியும்;
உன்னால் விடியும்
நம்மால் முடியும்;
நம்மால் விடியும்

- சரவணபெருமாள்

Friday, December 22, 2017

மாயக்கண்ணா

மாயக்கண்ணா



உயிர்துறந்த புல்லுடலில் மூச்சிறக்கி
உயிர்மயங்கும் இசையமுது ஊட்டினாய்
மயில் உதிர்த்த இறகிரண்டு
நிலத்தில் காலூன்றி எழுந்தாடுதே

உன்னருகே பெண்போலே ஒன்றுள்ளதே
கற்சிலை சுற்றி வாசிக்கிறாயோ
கானத்தில் மயங்கிப்பெண் ஆடுகிறாளோ
ஆடியமாது மயங்கியே சிலையானாளோ

விடிக்க விழித்த ஞாயிறு
விசயம் மறந்து நின்றது
விடிகாலை விடியட்டும் கண்ணா
வித்தைக்குழல் ஊதல் நிறுத்திடு

கடற்கரையில் மாதொன்று நடக்க
காலருகே வந்த அலை
கடல்பரவிய குழலோசை மயங்கி
வந்தவரை வந்து திரும்பாதது

பூவொன்றை ஏந்தி பூந்தளிர்கரம்
நீளுது உன்னருகே கண்ணா
புல்லிசை நிறுத்தி விட்டாயோ
இசைமயக்கம் காதல் மயக்கம்

மாயக்கண்ணா கருமைநிற நிழலோ
கண்பசி ஆறிட சுயவடிகாட்டு
நிழலது காட்டி மயக்கி
நித்தமும் என்னை ஏமாற்றாதே

- சரவணபெருமாள்

Thursday, December 21, 2017

பேருந்தில் ஒருநாள்

பேருந்தில் ஒருநாள்

கைநீட்ட நின்ற நகரப்பேருந்து
          நடுவழியில் நகர மறுத்தது
நகராப்பேருந்து நாலைவர் நகர்த்த
          சமாதானம் நகர ஆரம்பித்தது
ஏதோ உடைந்து விழுந்ததுபோல்
          அடிக்கடி தடதடதட சத்தம்
நிறுத்தும் இடம் எல்லாம்
          கீஇச்சென்ற சத்தம் ஒலிமாசு

இடம்தேடி கண்கள் சுழல
          கடைசி முன்னிருக்கை காணவில்லை
வேறொரு இடம் கிடைத்து
          அமரஅது ஆட்டம்போட ஆரம்பித்தது
இருக்கைகளின் பின்புறம் எல்லாம்
          சாதிய வசனம் ஒருவரிக்கவி
நடிகர் பட்டங்கள் திட்டல்களென
          விளம்பர மேடைகள் இருக்கைகள்

மிதமான தூரல் தூவ
          சன்னல் கண்ணாடி இறக்கினேன்
வலுகொண்டு அமுக்கிப் பார்த்தேன்
          பல்கடித்து இழுத்துப் பார்த்தேன்
இறுதியில் கண்ணாடியே வென்றது
          சட்டை குளித்து முடித்தது
மழையது நின்று போக
          மறுபடியும் பேருந்து நோய்வாய்ப்பட்டது

பத்துப்பேர் இருந்தோம் பயணிகள்
          அருகில் இடமெனசிலர் நடந்தனர்
சற்றேபோக ஒருபேருந்து நிறுத்தம்
          எப்போது விழுமோ நிழற்குடை
நிறுத்தப்பெயர் குடையில் தேட
          அரசியல் திருவிழா சுவரொட்டிகள்
வாளேந்திய மன்னர்கள் நடிகர்கள்
          முகம்பொறித்த இல்லவிழா வரவேற்புகள்

அடுத்துவந்த பேருந்தில் ஏறினேன்
          கடைசிவரை தெரியவில்லை நிறுத்தப்பெயர்

- சரவணபெருமாள்

ஏய்! கிளியே!

ஏய்! கிளியே!
கன்னியவள் கண்கள்
பார்த்திடும் போதே
காதலென்னும் பெயரில்
கவிதைகள் நூறே!

வானில் உள்ள
மேகம் குழம்பிடும்!
நிலவே!
எது நிலவே?

வானம் கூட
இறங்கி வந்திடும்
நிலவே!
உன் அருகே!

குளத்தில்
நிலவும் நீயும்
ரெட்டை நிலவு பிம்பமே!
ரெண்டின் ஒளியில் குளமே!
கார்த்திகை மாதமே!

அடடா!
மீன்கள்
உம்மை பார்த்து மயங்குமே!

தொங்குகின்ற கூந்தல்
பூக்களின் ஊஞ்சல்!
வந்துமோதும் தென்றல்
ஆட்டிவிடும் கைகள்!

ஆண்களுக்கு
நீயே வேடிக்கை!
தேரே!
தெரு வருதே!

பெண்களுக்கு
கோபம் வாடிக்கை!
தேவதையே!
உன் வரவே!

நடந்து போகும் பாதை
பனிக்காற்று வீசுமே!
கடந்து போன பின்னே
வெயில் அடிக்க தொடங்குமே!

ஏய்! கிளியே!
சொல்லேன்!
சொன்ன காதலை திரும்பவே!

- சரவணபெருமாள்

Tuesday, December 19, 2017

கடைவீதி போகும் வழியில்

கடைவீதி போகும் வழியில்
 
காலை முழித்து கடைவீதிக்கு நடந்தேன்
மூலை முடுக்கும் பார்த்துக்கொண்டே கண்கள்
ஊரையே பனிப்புகை போர்த்தி மூடிவிட
உடலைப்போர்த்த ஏதுமின்றி நடுக்கத்தில் முதியவர்

தள்ளாடி தத்தித்தத்தி வந்துநின்ற முதியவர்
இன்னும் சோறாக்கலய்யா என்ற அந்தம்மா
விறுவிறுவென்று மொட்டைமாடி சென்று சோறுவைத்து
காகாவென்று காக்காயை விருந்துக்கு அழைக்கிறார்

மண்டையோடு வடிவங்காட்டும் ஒட்டிய தோல்கள்
மூங்கில்கணு இடுப்பில் கண்ணீருடன் பாப்பா
பால்வாங்க பத்துகேட்டவளை விரட்டிய கடைக்காரர்
செல்லநாய்க்கு கிண்ணத்தில் பாலூற்றி கொஞ்சுகிறார்

இலட்சப்பண மகிழுந்துவிட்டு இறங்கிய செல்வர்
கையகல கைபேசியில் கதைத்தபடி சந்தைநுழைய
இணைய வர்த்தகத்தில் உடைவாங்கல் பற்றிபேச்சு
காய்கறிக்கடை மூதாட்டியிடம் தக்காளிக்கு பேரம்பேசுகிறார்

சங்கிலியில் பிணைத்த நாயுடன் நடைபயிற்சி
தெருவோரம் படுத்திருந்த நாயொன்று அருகில்வர
தெருநாயென்று கால்லால் அடித்து விரட்டுகிறார்
நாயிலும் வீட்டுநாய்தெருநாய் இனம்பிரித்த மனிதர்

அவசரஊர்தி ஓட்டுநரிடம் பையை திறந்துகாட்டி
கலங்கியபடி கர்ப்பிணி கடுகடுவென ஓட்டுநர்
திரும்பிவந்த கர்ப்பிணி ஆட்டோவில் ஏறிச்சென்றார்
ஆட்டோவின் பின்னால் பிரசவத்திற்கு இலவசம்

- சரவணபெருமாள்

வாடாதே பூவே

வாடாதே பூவே
அழகான காட்சி
அழுகையுடன் தெரிகிறது

யாருக்காக இதழ் விரித்து
காத்துக்கிடக்கின்றன
இந்த இதழ்கள்

கடல் புயலில்
காணாமல் போன
தன்னினத்தை
தேடிப்பார்த்து கொண்டிருக்கின்றனவோ

கால்கள் முளைத்த
மாந்தரே
கடல்தேடி போகவியலோம்
தரையில் புதைந்துபோன
நீ எப்படி தேடப்போகிறாய்

நான் தேடிப்போனால்
சடலங்கள் மிதக்கும் கடலில்
உன் சந்ததி கண்டால்
மீட்டு வருகிறேன்
வருத்தம் கொள்ளாதே
வாட்டம் கொள்ளாதே பூவே

ஓரிரு நாட்கள் தான் வாழ்வு
அதுவும்
ஒன்றி வாழ முடியவில்லை என்று
ஏங்கிப்போகாதே
வாடிப்போகாதே
உன் இணை 
இறைவன் சேர்ந்திருக்கலாம்
உன்னையும் 
இறைவனிடம் சேர்க்கிறேன்
பூஜைக்கு தயாராகு பூவே

-  சரவணபெருமாள்

என்று தீரும் மீனவர் துயரம்?

என்று தீரும் மீனவர் துயரம்
எல்லை 
வரைந்து வைத்தது மாதிரி
கடல் தாண்டி வந்தால்
கைது செய்யுங்கள் என்று 
அயல்நாட்டவனுக்கு
தூதாய் திரியும்
எச்சங்களும்


ஆயிரக்கணக்கில் காணாமல் போக
அறுபத்தைந்து என்று
கணக்கு சொல்லும்
கணிதத்தில் தோல்வியடைந்த
முட்டாள்களும்


எத்தனையோ பேர் மிதக்க
எகத்தாளமாய்
தேர்தல் களத்தில் நடனமாடும்
கூத்தாடிகளும்
குரங்குகளும்


சுட்டுப்போட்டாலும்
தட்டிக்கேளாமல்
உள்நாட்டில் அழைத்து
விருந்தளிக்கும்
வீணர்களும்


காப்பாற்றச்சொல்லி
போராடிய அழுகுரல்கள் மீது
அனுமதியில்லா போராட்டம் என்று
வழக்குப்போர் தொடுத்த
கைவினைஞர்களும்


கண்டவர்களும்
கண்டு
கொள்ளாதவர்களும்
கட்டளையிடும் இடத்தில்
காட்சிப்பொருளாய் இருக்க
என்று தீரும் மீனவர் துயரம்?

- சரவணபெருமாள்

Monday, December 18, 2017

காலைநேர நடைபயணம்

காலைநேர நடைபயணம்
காலைநேரத்தில்
வீல்வீலென்ற சத்தம்
எதிர்வீட்டுக்குழந்தை கையில்
பரிதாபமாய் ஒரு நாய்க்குட்டி
தன்குழந்தை விளையாட
கடத்தி வரப்பட்ட குழந்தை
அந்த குட்டி நாய்க்குட்டி

ஆதரவாய் தடவி
தண்ணீர் காட்ட
பாசமென்றெண்ணி
அவரை
உரசிக்கொண்டே குடிக்கிறது கிடா
பொங்கல் வருவதை அறியாமல்

மாட்டுத்தொழுவத்தில்
பின்னால் நிற்கும்
கன்றுக்குட்டி
பசியாறுவதாய் எண்ணி
பால்ச்சட்டியை
நிரப்பிக்கொண்டிருக்கிறது பசு

முதலாளியை நம்பி
முட்டை வைத்துச்செல்கிறது
கோழி
அவித்து தின்னும்
ஆவலை அறியாமல்

வாசலில்
எறும்பு புற்றைச்சுற்றி
வெண்ணிற விசக்கோடுகள்
ஐந்து மனித உயிர்
கடிபடாதிருக்க
நூறு எறும்புயிர்கள்
கொல்லப்பட்டிருந்தன

கேட்பதற்கு ஆளில்லை
பூவிற்குள்
ஆள்துளை போடுகிறது வண்டு
தேனுறிஞ்ச

வரத்து வாய்க்கால் தொலைய
தாகத்தில் தரைபிளந்து
வறண்டு கிடக்கிறது
கண்மாய்

ஒவ்வொன்றாய் கண்டு
யோசித்தபடியே நடந்துவர
காலை நடைபயணம்
முடிந்து போனது

- சரவணபெருமாள்

எழுதி முடியாத அழகு அவள்

எழுதி முடியாத அழகு அவள்

அடடா அவள் அழகி
ஆளை மயக்கும் குழலி
எத்தனை கவி எழுதியும்
எழுதி முடியாத அழகு அவள்

அருவி வீழ்ச்சி சரிந்த கூந்தல்
அதில் குளிக்கும் ஆசையில் என்முகம்
கட்டிவைத்த குப்பி அவிழ்க்க
மூழ்கிப்போனது முடியுள் என்முகம்

நெற்றி நெடுநாள் பிரார்த்தனை
உதடுகள் உட்கார விரும்பும் பூங்காவனம்
நெற்றி வேர்வை சுனைநீர்
உதடுகள் குளித்தெழ ஊற்றெடுக்கும்

நெற்றி மேல் விழுந்த பொட்டு
மூக்கின் மேல் சிதறுவது உலகவழக்கம்
ஒருதுகளும் உதிரவில்லை ஆச்சர்யம்
காரணம் பொட்டின் சிறப்பல்ல நெற்றியின் வனப்பு

ஊசியிலைக்காடு புருவம் ரெண்டும்
சட்டென பார்த்து திரும்பினாலும்
துளைபோடுகிறது மனதில்
நிலைததும்புது நிஜவாழ்க்கை கனவாகிறது

வழுக்கும் இடத்தில் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி
உட்கார்ந்த இடத்திலேயே எழும்பாமல்
படபடவென சிறகடித்து தோற்றும் அழகுபோல
வலிக்காமல் கண்களை அடிக்கும் இமைகள்

கண்ணது கதிரியக்கச்சாதனமோ
எதேச்சையாய் அவள் பார்த்தால்கூட
நேராய் ஊடுருவி நெஞ்சைப்பிளக்கிறது
மின்னியக்கம் போல துள்ளவிடுகிறது

கருவானில் ஒரு வெண்ணிலா உள்ளது
வெண்வானில் ஒரு கருநிலா அவள் கருவிழி
வானிலவை மூட வெண்மேகம் போர்வை
விழிநிலவை போர்த்தும் மேகம் கண்ணிமை

மூக்கு முந்திவந்து முகமுரசும்
எந்தநேரமும் முழித்திருக்கும் பாகமது
உதடுகளின் முத்த உரசலில்
முற்றிலும் இலவசம் மூக்கின் உரசல்

காதுமடல் கவிமடலின் ஆரம்பம்
காதலின் உச்சத்தில் உதடுகளின் தஞ்சம்
தொங்கிக்கொண்டிருக்கும் கம்மல்கள்
தூக்கணாங்குருவி கூடுகள் முத்துக்கள் குருவிகள்

கன்னங்கள் நெருக்கங்கள் நீளும் இடங்கள்
காயமின்றி கடிபடும் அப்பாவிகள்
பற்கள் படாமல் தொடாமல்
உதடுகள் கடிக்கும் காயங்கள் மாயங்கள்

உதடுகள் இரட்டைக்கிளவி இலக்கணம்
பிரிந்திருந்தாலும் அர்த்தம்தரும் இலக்கணப்பிழை
உடல்முழுதும் முத்தங்கள் போட்டாலும்
இங்கொன்று இல்லையென்றால் முழுமைப்பாடாது முத்தம்

கழுத்து உதடுகள் வழுக்கி விளையாடுமிடம்
வேண்டுமென்றே வழுக்கி நழுவி விழுமிடம்
மூச்சுக்காற்றின் சூடுகள் சுடும் இடம்
சுட்டாலும் எட்டிப்போகாமல் உதடுகள் கூடுமிடம்

- சரவணபெருமாள்

நாளிதழே

நாளிதழே
நாளிதழே நாற்புறமும் பரவியதே
காலைத்தேநீர் கசந்துவிடும் நீயின்றியே
பகுதிநேர வேலையளித்தாய் சிறுவனுக்கு
பரவாயில்லை கட்டிடுவான் தேர்வுக்கட்டணம்

நாச்சுவர்நடப்பு நாற்றிசை பறைவாய்
நாற்றிசைகாட்டி நாச்சுவற்றுள் நுழைவாய்
நானும் பக்கமெல்லாம் புரட்டுகிறேன்
நாளிதழே நற்செய்தி கிடைக்கவில்லையோ

நடிகையின் பிரசவம் வண்ணப்படம்
காணவில்லை அறிவிப்பு கருப்புவெள்ளை
திரைப்படச்சேதி இலவச பிரசுரம்
குழந்தைத்தேடல் காசுக்கு விளம்பரம்

பிரபலத்தின் பேச்சு தலைப்புச்செய்தி
முதுகெலும்பின் போராட்டம் மூலைச்செய்தி
மாணவன் கண்டுபிடிப்பு குறுஞ்செய்தி
மக்கள் பிரச்சனைபல வாராச்செய்தி

மதுவிலக்கு மாணவிப்போர் மூலைப்பக்கம்
ஆடைச்சுதந்திர அமைப்புப்போர் முதற்பக்கம்
திரைப்பட விளம்பரம் தனிப்பக்கம்
இளைஞர் சாதனை ஏதோ ஒருபக்கம்

தற்பெருமை ஆளுங்கட்சி நாளிதழ்
முன்னாட்சி ஊழலை ஊழலாய் உரைக்கும்குரல்
தன்திட்டமெனும் எதிர்கட்சி நாளிதழ்
அளவைத்தாண்டி புழுகிடும் அதன்குரல்

அரசியல் செய்திகளானது போனது
செய்திகளில் அரசியல் ஆனது
டெங்குக்காய்ச்சல் மரணமும் மாறிப்போனது
மர்மக்காய்ச்சல் பலியென்று மாற்றமானது

தவறாய் அச்சிட்டு தமிழைக்கொல்லாதே
மனைஇலவசம் மனைவிஇலவசம் ஆக்காதே
ஓரெழுத்தும் ஒருபொருள்தரும் தமிழல்லவோ
ஓரெழுத்துமாற பொருளனைத்தும் மாறுமல்லவோ

நாளிதழே நயஞ்சுட்டல் வல்லதே
கணவனுக்கு ஆப்பு காட்டிக்கொடுத்த சூப்பு
இளைஞர் கொலை நண்பருக்கு வலை
அடடா அடடா என்னமாய் சுட்டுகிறாய்

நன்றாய்க்கேள் நாளிதழேநீ மாறுவாய்
நல்லநல்ல சேதியோடுநீ வருவாய்
தனித்தமிழில் பிழையின்றிநீ வருவாய்
வருங்கால சந்ததிநீ பேணுவாய்

சமுதா கூட்டங்கள் சேதிவேண்டாமே
சமூகஒற்றுமை கட்டுரை போடு
சாதிச்சாய மாலைஅணிவிப்பு சேதிவேண்டாமே
சாதிஒழித்தலைவர் உரையை தொடராய் போடு

- சரவணபெருமாள்

Sunday, December 17, 2017

கன்னம்

கன்னம்
கன்னங்கள்
அழகுசாதனம் தேவைப்படாத
கலைச்சின்னங்கள்!

தொட்டால்தான் தெரியுமா
மென்மை?
பாப்பாத்தி பட்டுப்புழுத்தேகம்
கன்னம்!

ஒளியின் குறியெல்லாம்
கன்னம்தானோ?
கன்னத்தின் உச்சிகள்
கூடுதலாய் மின்னுகின்றன
புகைப்படத்தில்!

உன்னையே சுற்றித்திரியும்
என் கண்கள்
கன்னத்தில் மட்டும்
கூடுதலாய் தங்கிக்கொள்கின்றன!

என்நகை வாழ்வது
உன் புன்னகையில்!
அந்நேரம் வாழ்கிறது
ஒரு குழி
உன் கன்னத்தில்!

அந்த கன்னக்குழி
என் புதைகுழி!
முத்த முயற்சியில்
என்னை
புதைக்காமல் விட்டால் சரி!

கன்னம்
கலிக்கிண்ணமோ?
கண்டவுடன் ஆசை
கடித்திட அல்ல;
கிள்ளிடவும் உரசிடவும்
கிட்டாதோ வாய்ப்பு
என்றுதான்!

கன்னம்
மெல்லிய இசைக்கருவி!
விரல்கள் பட
சிணுங்கல் ஓசை!
மெல்லிசை!

மஞ்சளின் மருத்துவம்
நான் அறியேன்!
மங்கையின் கன்னத்தில்
குழைந்தது அழகு!
அட்டகாசமான அழகுசாதனம்!
மஞ்சள்!

காதோரம் வழிந்த முடி
கன்னத்தை கண்டதும்
குறைகொண்டன,
கருப்பாய் பிறந்தனவாம்!

கன்னம்
உறைந்து நின்ற மேகம்!
உதட்டின் எண்ணம் எல்லாம்
அங்கு தான்!
முத்தம்

நாக்கைத்துழாவ
வெளிக்குவியும் கன்னம்
அட்டக்கத்தி மந்திரம்!
வெட்டவில்லை!
ஆனால் காயம்!

கன்னம்
இமாச்சலப்பிரதேசம்!
ஆப்பிள் விளைச்சல்
அமோகம்!

ஆப்பிள்
அதிகம் சாப்பிடச்சொல்லி
எனக்கு
மருத்துவர் உபதேசம்!
என்ன விலை?
சொல், தருகிறேன்...

- சரவணபெருமாள்

Saturday, December 16, 2017

ஓகி மீனவன்

ஓகி மீனவன்
 


ஆறேழு நாட்கள் ஆகிப்போனது
ஆவி என்உடல் உகுத்து
காத்திருப்பதில் பலன் இல்லை
இனியும் உடல்சேர வாய்ப்பில்லை
விர்ரென்று புறப்பட்டேன் கரைக்கு
வீட்டினர் நலமறியும் ஆவலில்

கரையில் இறங்கிவிட்டேன்
கண்ணுக்கெட்டியவரை மக்கள் கூட்டம்
அங்கெழுந்த அழுகுரல் சத்தம்
அலையோசையை அடக்கிப்போட்டிருந்தது
மணல்வீடுதான் கரைந்து போகுமென்றால்
மனிதர் வாழும்வீடுகளும் கரைந்திருந்தன

மெல்லநடந்தேன் கரையை பார்த்துக்கொண்டே
என்அழுகை யார்காதும் சேரவில்லை
நீச்சல் கற்றனவோ படகுகள்
குப்புற கவிழ்ந்தும்
நீந்தி கரை சேர்ந்துவிட்டன;
எங்களை காக்காமல் சுயநலமாய்

ஆ..! அய்யோ..! அதோ என்குடும்பம்!
என்கால் உதைத்த வயிற்றில்
தானே அடித்துக்கொள்கிறாள் என்தாய்!
மீண்டு வந்த மீனவர்கூட்டத்தில்
என்முகம் தேடியலைகிறார் என்தந்தை!
"எம்புள்ளைய பாத்தீங்களாய்யா??" என்றே விம்முகிறார்

நெஞ்சில் அடித்தழுகிறாள் என்மனைவி
ஏனென்றே அறியாமல் அழுகிறாள் என்குழந்தை
ஓடிச்சென்று அள்ளி அணைத்தேன்
அய்யோ..! கைசேரவிள்ளையே என்தங்கம்!
ஆயிரம் முத்தங்கள் இட்டேன்
ஒன்றும் கன்னத்தில் ஒட்டவில்லையே!

" டேய்..! பாப்பு..! டேய்..! செல்லம்..!
   பாப்பா..! அப்பா தெரியுறனாடா..!
   அய்யய்யோ..! அப்பா செத்தத நெனச்சு
   இப்பத்தான்டா அழுகுறேன்..! என் அம்மு..!
   தங்கமே..! பட்டே..! புதுவருசத்துக்கு
   புதுட்ரெஸ் வாங்க நெனச்சென்னே..! அய்யோ..!"

மீட்கச்சென்ற படகு கரைசேர
கைபேசியில் படமொன்று காட்ட
ஆடித்தான் போய்விட்டது அந்த ஆழிக்கரை
ஆம்..! அதுதான்..! அதேதான்..!
என் உடல்தான் மிதக்கிறது!
கடலலையில் ஏறிஇறங்கி மிதக்கிறது!

நான் குடித்த உப்புநீரில்
உப்பிப்போயிருந்தது என் உடல்
கடல் ஏன் உப்பானது தெரியுமா?
கலக்கும் ஆற்று நீரைவிட
கரையோர மக்களின்
கண்ணீர் அதிகமாய் கலப்பதுதான்!

மின்னல் வேகத்தில் கிளம்பினேன்
"கடவுளே! விதிய பொரட்டிப்போட்டுறுப்பா!
  என்புள்ள முகம் வாடிப்போயிரும்!
  எனக்கும் அவமுகம்பாத்து வாழணும்!
  உடம்புல என்ன சேத்துவிட்டுறுப்பா..! அய்யோ.!"
கத்திக்கொண்டே உடலில் முட்டிக்கொண்டிருக்கிறேன்

- சரவணபெருமாள்

Thursday, December 14, 2017

ஏய் பெண்ணே!

ஏய் பெண்ணே!
ஏய் பெண்ணே!
உச்சந்தலையில் என்ன சண்டை?
உச்சிவகிடு எடுத்து
ரெண்டாய் பிரித்தாய்
கூந்தலை!

ரெட்டைச்சடை
ஒற்றைச்சடை ஆகியுள்ளது!
சமாதான பேச்சுவார்த்தை
தொடங்கியதோ?
வரவேற்கிறேன்!

சமாதானத்தின் நுழைவு வாயில்
ராக்கடிதான் போல!
கூந்தலை இணைத்து
பிடித்த பிடியை
விடவில்லை!
விடவே இல்லை!

சமாதானம் விரும்பாத
சில முடிகள்,
நெற்றியிலும்
காதோரத்திலும்
வீராப்பாய் படர்ந்துள்ளன!
முத்தமிட வரும்நேரம்
மூச்சுக்காற்றில்
ஆயுதம் ஏந்திட,
ப்பூவென ஒதுங்கிவிடும்
சின்னஞ்சிறு முடிகள்!

ஒருமுள் குத்த
வலிக்கும்!
இருமுள் குத்த
இன்னும் வலிக்கும்!
இது நியதி!
பெண்ணே! - உன்
இருவிழிப்பார்வை தாக்க
இதயம் தப்பித்தது;
ஒருகண் மூடி
மறுகண் திறந்தாய்!
கண்ணடித்தாய்!
இதயம் நொறுங்கிப்போனது!

என்னைப்பார்க்கும் போது
புருவத்தை உயர்த்தி பார்ப்பது
பட்டாம்பூச்சி அசைவதற்கு
உதாரணம் சொல்கிறது!

நெற்றிக்கு நேற்றிக்கடன்
செலுத்த தவறவில்லை!
குங்குமும் விபூதியும்
தினமும் நெற்றியில்
விழுந்து வணங்குகின்றன!

நடுவில் ஒரு பொட்டு
நட்சத்திர வடிவம்!
முகமதி முழுமதி!
நட்சத்திரகிரகணம்!

நெற்றியின் வெற்றிடம்
என் முத்தங்களின்
விளைநிலம்!

கன்னங்கள்
என் உதடுகள்
உலாவரும் ரதவீதி!
கண்களை மூடியே
உலாப்போகும்!

மூக்கு
என் மூக்கின் காதலி!
உரசிக்கொள்ளும் அளவிற்கு!

காதுகளில்
கம்மல் அழகாய் இருக்கிறதா?
கண்ணாடி முன்னாடி
நீ நிற்க
கண்ணாடி உன்னை
அங்கங்கே பார்ப்பது
தெரியவில்லையா?

கம்மல் உனக்கழகா என்று
எத்தனை முறை சோதனை போடுவாய்?
உன் காதில் சேர்ந்த பின்
அழகானது தெரியாமலே!

- சரவணபெருமாள்

Friday, December 8, 2017

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்



இலட்சியமே என்கனவே முழித்திடு வாயே
      இராக்கனவே வீணேதாம் துரத்திடு நீயே
கட்டில்லை காவலிலை பயணப் பட்டே
      கனவேமெய்ப் படுவாயே வானந் தொட்டே
உலகைப்பெயர் உள்ளங்கை நடுவே நட்டு
      உலகைச்சுழல் உன்னிப்பாய் உளதைக் காட்டு
தாய்மொழியெதோ தழுவினரோ தேச மெங்கும்
      தமிழ்மொழியதோ பாரேறி ஊதுஞ் சங்கும்

தமிழறிந்தான் தமிழ்மட்டு மறிந்தான் யாரும்
      தரணிமுழுஞ் சுற்றுங்கனா மெய்யாய் வாரும்
மூன்றாமக வையாங்கில மோகம் வீழ்க
      முத்தமிழே மழலைச்சொல் முத்துக் குளிக
நாடுபல உண்டிங்கே நூற்பல உண்டே
      தமிழற்ற நூலகமிலை மெய்க்கனா கண்டே
எம்மையா ளுந்தமிழே நும்மை யாளும்
      எம்கனவே மெய்யோடி உலகை ஆளும்

ஏழைக்கொரு எடுத்துக்காட் டின்றி போக
      எந்நாட்டில் எல்லோரும் மன்ன ராக
எத்தனையோ கோடிகளே கொண்டான் கூட
      ஏர்பிடித்துழ துயிலெழுந்தே வயலுக் கோட
சேறுமுழுகிச் சேர்ந்தானைக் கண்ட கையும்
      மறுநொடியே கூப்புவதே அனிச்சை யாயும்
ஆட்காட்டி விரலாடி சுட்டுந் திசை
      ஆளுஞ்சேவகன் ஓடுங்கனா மெய்யாய் இசை

மூடிக்கிடக் கட்டுமிங்கே முதியோ ரில்லம்
      நாடியடங் கட்டுமந்த அனாதைச் சொல்லும்
ஆதரவே அற்றுப்போ அனாதை இல்லம்
      ஆருமில்லை உன்வீட்டில் எங்கனா வெல்லும்
தாய்ப்பறவை குஞ்சைத்தெரு விட்ட சேதி
      தாய்ப்பசுவை கன்றுமுட்டி விரட்டுஞ் சேதி
களவாங்கி காசுக்காய் குளவி விற்றும்
      கறிவளர்ப்பார் கதையில்லை கனவு முற்றும்

காந்திகனா கண்டேனே கனவாய் நானும்
      கழுத்துநகை போட்டபெண்ணே நடவாய் நீயும்
துணையின்றி பயமின்றி வீரநடை போடு
      அணைந்தவொளி இருட்டிலும் தனிநடை போடு
யாரதுவழி மறிப்பாருனை முறுக்கு கைகள்
      வாரதென்ன முறுக்குமீசை உன்னால் உடையும்
காமத்தோடு நீளுங்கை வெட்டு பெண்ணே
      கண்டகனா மெய்யாக்கி நிமிர்த்து பெண்ணே

எல்லையெதும் இல்லையடி பெண்ணே கல்நீ
      எவனேதும் வகுத்தாலதை யழித்தே வெல்நீ
விண்ணேறிய பெண்மைத்திறங் கொண்ட நீயோ
      மண்ணாண்ட வீரமேநீ வளைந்திடு வாயோ
அடுப்பூதும் பெண்ணெண்றே இழிக்கும் மூடா
      அவள்கல்வி அறியாமை அழிக்கா வீடா
மெழுகானது போதுமடி பெண்ணே போதும்
      எரியாதே புல்லரையே எரித்தே மீளும்

கற்றோரே சான்றோரே தேர்தல் காணும்
      கனவேகனி அரசியலே சுத்தம் பேணும்
வாக்குக்கே வாங்கோமே யாரும் ஏதும்
      வாக்காரே யோசிக்க நன்றுந் தீதும்
நல்லோரை நாற்காலி ஏற்றி வைப்போம்
      அல்லோரை மீவழைக்கும் விதிகள் கேட்போம்
வென்றோனே தலைவனன்றே வேலைக் காரன்
      என்கனவே மெய்ப்படுநீ தண்டல் காரன்

ஓட்டைகளே இல்லாப்பே ருந்து வேண்டும்
      ஓட்டுக்களே ஒழுங்காயிட சாத்திய மாகும்
சட்டங்குடை பெருச்சாளி சாக வேண்டும்
      நாயொன்றைக் கொன்றாலும் நீதி வேண்டும்
தாமதாமாய் வரும்நீதி அநீதி ஆகும்
      தர்மங்கேட் டான்சாக எதற்கு ஆகும்
வேலியதே பயிர்மேயும் மொழிமெய் வேண்டாம்
      காவலரே நலிந்தாரைத் தாக்க வேண்டாம்

பாறைமேல் போட்டவிதை முளைக்க வேண்டும்
      கொடுத்துக்கெடா கொடாமற்கெடா வருணன் வேண்டும்
விதைத்தவனே விளைந்தனவிலை விதிக்க வேண்டும்
      விவசாயுமே முதலாளி யாக வேண்டும்
மதியாது மச்சுக்குள் இருந்தான் சோறு
      கதியேதும் இல்லாமலே வயிற்றுக் கூறு
வரும்காலம் வருங்காலம் வந்தாற் சிற்றே
      வந்ததுமே தண்டனையே பசிதீர்த் துற்றே

பிணிசெய்து குணமாக்கோன் மனித னல்ல
      பணம்பார்க்க மருத்துவமே தொழிலே அல்ல
இரத்தஞ்சொட் டியொருத்தன் வரவே ஆங்கே
      படிவங்கே ளாமருத்துவ சாலை யெங்கே
மருத்துவக்கனா கண்டசிறுமி மாண்டா ளிங்கே
      இலட்சியக்கனா சிதையாத கல்வி யெங்கே
வரிகேட்டு நரியமர்ந்த ஆட்சி வீழும்
      மதுவூட்டி உயிரழிக்கும் மந்தை மாளும்

ஊழலாளி கொலையாளி வெளியே சுற்ற
      அழகுக்கிளி அதேகுற்றம் சிறையே உற்ற
சாதனையோ தேசப்பெயர் சுமந்தே போக
      சாவுகளோ ஏனோவோ தமிழ னாக
தாம்பிடித்த முயலுக்கு மூன்றே காலே
      வம்பாக வதைத்திட்டம் பலவே வேலே
குத்துதேயது குடையுதேயது கனவே நீயே
      சித்தம்போ லழித்தேநீ மெய்ப்பிப் பாயே

குடிசையில் லாநாட்டில் நானே வாழ
      துடிப்போடு கனவேநீ செயலை யாற்று
குளமேரி கண்மாய்க்கால் வாயும் மீள
      நடிப்போடு போலிதந்த தகவல் சாற்று
புதையுண்ட நீர்நிலையே உயிர்த்தெ ழேநீ
      வதையுண்ட விளைநிலமே வந்தெ ழேநீ
நன்னீரைக் கடல்சேர்க்கும் ஆறே கைது
      நடுவேயணை போடேயொரு சிறையே செய்து

யாசகமே கேளாத மாந்தர் வேண்டும்
      யாவருமே கேளீரே உணரர் வேண்டும்
கொலைக்கொள்ளை சேதியற்ற நாளிதழ் வேண்டும்
      பத்திரிக்கை பசிதேடா நிலையே வேண்டும்
சாதியொழித் தலைவர்மேல் சாதி வேண்டாம்
      சதியேசிலை செய்துசாதிச் சாயம் வேண்டாம்
வீதிக்கொரு சாதிக்கட் சிவேண்டவே வேண்டாம்
      நாதியற்றே செத்துப்போ வாநிலை வேண்டாம்

அவசரஊர் தியின்றித்தோள் சுமந்தான் பிணமே
      அவமானமே இன்றியுள்ளார் பணமே பணமே
குழந்தைபல கொத்தாகச் சாகத் தினவாய்
      சொன்னானே காற்றுக்கிலை பணமே பணமே
சோதனைபல விட்டானே அவனே தினமே
      அவன்கட்சி தப்புவதே பணமே பணமே
இதற்கெல்லாங் காரணமே ஓட்டுப் பணமே
      இதுவில்லாக் கனவேமெய்ப் படுவே விரைவே

வைகைகாக் கமலக்கிய மெத்து வைத்தார்
      கடற்சேர்ந்த எண்ணெய்எட வாளி கொண்டார்
டெங்குவையே தடுத்திடவே சாணி யென்றார்
      உறுப்பினரை ஓடாவிடாப் பேணிக் கொண்டார்
அணிமாறி அணிமாறி போயே வந்தார்
      அரையோடு டெல்லிபோன விதையார் விட்டார்
அறைகூவல் விடுத்தோய தெரியா தென்றார்
      அவர்காதே செவிடாகுங் கனவே மெய்யேற்

குடித்திடவே விளைத்திடவே தண்ணீ ரில்லை
      குளிர்பானத் தொழிற்செய்யத் தடையே யில்லை
தொழிற்பெருக்கி நிதிபெருக்கத் துப்பே யில்லை
      யாமுழைக்க வரிபிடிக்க கூச்ச மில்லை
தொலைக்காட்சி அலைபேசி திட்ட முண்டு
      யாம்படிக்கும் மேற்படிப்பில் துட்டு முண்டு
இப்படியே ஆண்டாரை இனமே கண்டு
      இனிமேலே வாராக்கன வேமெய்ப் பூண்டு

கனவேநீ மெய்ப்படூஉ வாயே வந்து
      நனவைத்திரி உலகமழியு முன்னே முந்து
மதமேயது இல்லாத உலகே வேண்டும்
      மனிதச்சா தியொன்றேதான் வாழ வேண்டும்
நாம்பெரிதோ நீப்பெரிதோ சண்டை கொல்லே
      நாடேதும் ஊற்களையு மன்பே வெல்லே
வெள்ளைப்புறா வினமேநீ உலகைச் சுற்று
      ஆயுதமழிக் குமாயுதமா யுன்னை மாற்று

வெள்ளங்கள் வரும்முன்னே சைகை போடு
      கடலூரே நுழையத்தடை வலிதாய் போடு
வெந்தழலில் வேகாத சக்தி ஈயேன்
      வெய்யோனைக் கட்டுவிக்கும் வித்தை தாயேன்
வாவெனவர நில்லெனநில மாரி தாயேன்
      கண்ணில்நீர் மூலமேநீ ஓடிப் போயேன்
பூப்போல மலர்ந்தன முகமே மாந்தர்
      பூலோகம் முழுதுமே புன்னகை வேந்தர்

அழிக்குமறி வியலேநீ முழுதாய் வீழ்க
      ஆக்குமறி வியலாய்நீ சிறப்பாய் வாழ்க
வெண்ணிலவே பார்த்துச்சோ றுண்டோம் போதும்
      வெண்ணிலவில் சிற்றுண்டி காலம் வாரும்
நட்சத்திர அப்பளங்கள் தின்றோம் போதும்
      நாட்டுவோமே நட்சத்திர வீடு நாமும்
விளையாட்டுப் பிள்ளைகா ணோமென் றேநாம்
      விண்வெளியிற் தேடும்விந் தையும் வாரும்

இன்பச்சுற் றுலாபூமியில் சலித்தோ மென்று
      விண்ணுக்கொரு ஏற்பாடு வானவில் செல்வோம்
வந்ததுதான் வந்தோமே செவ்வாய் சென்று
      என்னதுதான் இருக்கிறது அதையும் பார்ப்போம்
போனவழி வந்தவழி வசிப்போர் பார்த்தால்
      நம்கிரகம் அழைத்தவரை உபச ரிப்போம்
செந்தமிழைச் செப்புவித்து கிரகந் தாண்டி
      அங்கேயொரு தமிழ்ச்சங்கம் திறந்தே வைப்போம்

இப்படியாக
கனவே பல்லாயிரம் உண்டு
இவற்றிற்கே
அதில் முதலிடம் உண்டு

நான் விரும்பும் நேரமே வரும்
      நிறுத்தும் நேரமே நிலும்
என்கண் கேட்டது மட்டுமே காட்டும்
      திருப்பும் திசையெல்லாம் திரியும்

என் கனவே
மனதில் ஓடியது போதும்
வெளியே தாவு
விரைந்தே மெய்ப்படு
விடியட்டும்
நல்லதொரு விடியல்
-    
        -  சரவணபெருமாள்




மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...