Monday, November 20, 2017

மூக்கழகு

மூக்கழகு
கன்னியவள் மூக்கு
காற்று மூழ்கியெழும் தடாகம்!
மூழ்குநீச்சல் கற்றதுவோ காற்று!
அடிநெஞ்சின் ஆழம் தொடுகிறது!

மின்னல் பார்வையின் அடியில்
மின்னும் நட்சத்திரம் மூக்குத்தி!
காற்று மின்உற்பத்தி நடக்கிறதோ?
மூச்சுக்காற்றில் வெளிச்சம்தரும் மூக்குத்தி!

மூக்கு முப்பரிமாண முக்கோணமடி!
முகத்தேசத்தில் மத்திய பிரதேசம்!
மூக்கு இரட்டைக்குழல் துப்பாக்கி!
வெளிவரும் காற்று சுடுகிறதே!

சூறாவளிபோல் சுழன்றடித்து
கடலையும் கவிழ்த்திடும் காற்று,
உன்னிடம் அப்பாவிபோல் நடிக்கிறதடி;
மூச்சாய் வந்துபோகும் சத்தமில்லாமல்!

மொத்தக்காற்றும் பறந்து
உன் மூச்சடைய வந்ததுவோ?
தலைநகரில் காற்றுமாசுபாடாம்!
மூச்சுத்திணறி தவிப்பதுவோ!

தலையில் மல்லிப்பூ வாடிப்போனதடி;
முகர்ந்து பாராமல் வைத்துக்கொண்டாயாம்!
கூந்தலை முன்னால் இழுத்துப்போடு!
மூச்சுக்காற்றில் மல்லி மணக்கட்டும்!

மணக்காத பூ உலகிலுண்டோ?
மங்கையவளே! விஜயம் கொள்!
மூச்சுக்காற்று வசியத்தில்
மணம்வீசி மலரட்டும்!

முழுமதியே! உன் மூச்சுக்காற்று
என்முகம் குளிர்காயும் இடம்!
மூக்கோடு மூக்குஉரச பற்றாத தீ
காதலாய் பற்றிக்கொள்ளுதே!

இதழோடு முத்தமிடப்போக
தடுப்பணை போடுகிறதே மூக்கு!
தனக்கொரு முத்தம் போடாத
ஏக்கமோ? பொறாமையோ?

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...