செவியழகு
காணாது போல் நடித்தே
கண்கள் எங்கோ போக
காதுகள் ரெண்டும்
ரகசியமாய்
என் வாய்வரை நீளுதே!
மடிந்த ரோசாப்பூ இதழ்
மங்கை உதடென்பரோ?
மெலிதாய் மடிந்த செவி
மடங்கிப் பூத்த
ரோசாவன்றோ?
கம்மலை தொங்கவிட்டதே
கன்னியவள் கைகள்தான்!
பின்ஏனோ
சிலுசிலுவென கத்தி
இருப்பைக் காட்டுகின்றன!
தவறிழைத்தனவோ தொங்கட்டான்கள்?
கோர்த்து தொங்கவிட்டாய்!
மன்னிப்பு கேட்கும்
அதன் மொழியோ?
சல்சல்லெனும் மெல்லிய ஓசை!
காதுகுத்தும் சாக்கில்
துளைபோட்ட ஊசி
பெருமை பேசித் திரிகிறதே!
நிலவில் முதற்கால் பதித்தது போல!
தலையைச் சுற்றி
காதைத் தொட்ட
ஒன்றாம் வகுப்பு விளையாட்டு!
ரெட்டைச் சடை ரெண்டும்
நேரேத் தொடுதே செவியை!
பருவ வருகை விளையாட்டோ?
கூந்தல் வாரிட வந்த சீப்பு
காதருகே வாரும்போது
செவியில் இடித்தே
சில்மிசம் செய்யுதே!
பிரம்மனின்
தேவையற்ற மெனக்கெடலோ
புனல்போல் விரிந்தசெவி!
நீர்மமா ஒலிச்சிதறி வழிய?
இல்லை
பொற்கொல்லன் கையூட்டோ பிரம்மம்?
காது ஓரம் உரசி
வாழ விரும்பும் செல்பேசி
அழைப்புகளை எதிர்பார்த்து
காத்துக்கிடக்கிறதே!
செவியே!
கவியாக்கி கைசேர்த்து
வாய்படிப்பது சுகமோ?
வடித்தவன் வாயுரைக்க
செவிமடுக்கும் வரம் சுகமோ?
செவியே!
நீ அழகு!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment