Thursday, November 30, 2017

அடைமழையில் ஒரு காலை

அடைமழையில் ஒரு காலை

ஆழ்ந்து உறங்குகிறதோ
சூரியன்
அடைமழை
தூவி எழுப்புதே வானம்

அலுத்துப்போய் தூங்க
இராவெல்லாம் தூங்காமல்
எங்கே கதிரறுக்கப்போனதோ

அடுத்த நாளுக்கு
நாட்காட்டியும்
கடிகாரமும் நகர
அறிவிக்காமல் இருக்கிறதே
சூரியன்

வெளியே எட்டிப்பார்த்தால்
இருட்டியவானம்
கடிகாரத்தின் மேலொரு சந்தேகம்
கைபேசியை சோதனையிட
நேரம்சரி

என்மீதா
சந்தேகப்பட்டாயென்றே
கோபம் கொண்ட கடிகாரம்
ஓடாமல் நின்று போனது;
மின்கலம் காலாவதி

அலறும் காலைக்கடிகாரமே
சேவல்
அதும்கூட நடுங்கிப்போய்
சத்தமில்லாமல்
சுவற்றோரம் ஒன்றிப்போனதே

கோழி குவித்து வைத்த
இறக்கையின் உள்ளே
கதகதப்பாய்
இரண்டே நாளான குஞ்சுகள்
ஒன்றுமட்டும் தலையைநீட்டி
கண்களை விரித்தே
சுற்றிச்சுற்றி நோக்குகிறதே

கண்களை கசக்கியபடி
வாசற்படி வந்த
பக்கத்து வீட்டு மழலை
"அம்மா! மேலருந்து யாரோ
  தண்ணிய வேஸ்டா கொட்ராங்க"
என்றே தன்னையறியாமல்
மழைநீர் சேகரிப்புக்கான
புரட்சி வரியொன்றைப்போட்டது

எதிர்வீட்டிலிருந்த சிறுவன்
"மழைக்கு பள்ளிக்கொடம் லீவுனு
  டிவில சொல்லிட்டாங்க"
என்றே கத்த
தந்தையின் அதட்டலில் நிசப்தம்

அப்பாடா
கண்முழித்ததுபோல
சூரியன்
மெல்ல மெல்ல
வானத்தை
சூடுபடுத்த ஆரம்பித்துவிட்டான்

சாரலாய்
சடசடவென வந்த மழை
சொட்டுச்சொட்டாய் குறுக
தெருவில்
அங்கேயும் இங்கேயும்
ஆள் நடமாட்டம் தெரிய
கடைக்கு கிளம்பினேன்;
சூடான தேநீருக்காக


- இனிய காலை வணக்கங்களுடன்
  சரவணபெருமாள்

Wednesday, November 29, 2017

கருவாச்சியுடன் காலை

கருவாச்சியுடன் காலை

கண்களை கசக்கியே முழித்து
கருவாச்சி முகத்தைத் தேடி
கைபேசி தொடுதிரை தடவ
கன்னத்தைத் தடவும் உணர்வு!

"என்னைச் சூடாமல் திரிகிறாள்!
கருவாச்சிக்கே இந்தத்திமிர் என்றால்
வெள்ளச்சிக்கு எம்புட்டு இருக்கும்?"
என்கிறது என்தோட்ட மல்லி!

மணம்புரியும் வரை காத்திருந்து
மணநாள் முழுதும் 
மணந்தாயே மல்லி!
கூந்தல் அலங்காரம் என்றேகூவி
கூந்தல் வாசம் நுகர்ந்தாய்!
போதாதோ?

கருவாச்சி கண் முழிக்க
கட்டியே
கன்னத்தில் முத்தம்போட்டு
தேநீர் அருந்தி மீதம் வைக்க
அதெடுத்து
அத்துளி பருகினேன்!

குளியலறை கூட்டிச்செல்ல
குழாய்த்தண்ணீர்
வாளியில் தாவிக்குதிக்கிறது!
அவள் மேனி
தொடப்போகும் ஆனந்தத்தமோ?
சலசலவென கூச்சலிட்டு
எச்சில்போல நுரை வடிக்கிறது!

அமர்த்தி
அவள்முகம் மஞ்சள்தடவி
குளிப்பாட்ட
கன்னத்தை விட்டுப்போக
கை மறுக்கிறது!
மஞ்சள் பூசும் சாக்கில்
மேனியெல்லாம் தொட்டுத்தொட்டு 
நான் உருக
நீர் உருகி
அவள் காலடியில் ஓடுகிறது!

துண்டெடுத்து தலை துவட்ட
இதுபோதும்;
இப்படியே சாவேனென்று
கொடியில் விழுந்து
தற்கொலைக்கு துண்டு முயல
மறுநாள் துவட்டும் வரம் வாங்கி
உயர்த்தெழுந்தது!

மடியமர்த்தி 
சீப்பெடுத்து தலைவாரி
சடைபோட்டு சாலம்செய்து
காதோரம் கடித்து
கம்மலையும் மாட்டி
உச்சந்தலை மீது
உதடு பதித்தேன்!

புருவத்தில் மைவைத்து வசியம்செய்து
நெற்றியில் நச்சென்று இச்சுவைத்து
கீழேபார்க்க உதட்டில் செல்லக்கோபம்!
மீண்டும் ஒரு முத்தம்
சமாதானம்!

அழகாய் ஒரு சுடிதார் போட்டு
சுற்று வந்து நான் ரசிக்க
வெட்கத்தில் அவள் பூத்த புன்னகை
அதில்மயங்கி அணைத்தது காதல்!

நெஞ்சில் சாய்த்து தோசை ஊட்ட
முன்பல் விரல்கடித்து சேட்டை!
ஆவென்று விரலெடுக்க
வாயில்போட்டு
வலிதந்தவளே
வலிக்கு மருந்திடுகிறாள்!

- சரவணபெருமாள்

Tuesday, November 21, 2017

பாடல் கவிதை 3 - கண்ணா!

கண்ணா!
கல்லுக்குள் உணர் வுண்டு
என்றுநான் உனை நம்பி
உன்னடி சேர்ந்தேனடா!
கண்ணா! உன்நிழல் விரிப்பாயடா!
                                                                        (கல்லுக்குள்....)
விதிவெல்ல பலம் இல்லை
இனிஅழ கண்ணீ ரில்லை                  (விதிவெல்ல..)
ஆட்டங்கள் முடிப்பாயடா!
நானும் மைதானம் இல்லையேயடா!
நானும் மைதானம் இல்லையேயடா!
                                                                         (கல்லுக்குள்....)
வேண்டுதல் உடனேயே
கிடைப்பது அரிதாகும்                         (வேண்டுதல்...) 
காலங்கள் தாழ்த்தாதடா!
கண்ணா! முடிந்தபின் அதுஎதற்கடா!
கண்ணா! கருணைகூர் பார்வாயடா!
                                                                         (கல்லுக்குள்....)
விதியோடு திமிர்சூழ
பாவங்கள் பலசெய்து                          (விதியோடு.....)
பாவியாய் ஆனேனடா  !
கண்ணா! பாவங்கள் கழிப்பாயடா!
கண்ணா! மன்னித்து அருள்வாயடா!
                                                                          (கல்லுக்குள்....)
கண்டகனா நினைவோடு
இலட்சியங்கள் கனவோடு               (கண்டகனா....) 
நினைவுத்தூண் ஆனேனடா!
கண்ணா! கைதந்து காப்பாயடா!
கண்ணா! நிம்மதி தருவாயடா !          
                                                                          (கல்லுக்குள்....)

- கண்ணன் காலடியில்
   சரவணபெருமாள் 

ராகம்
படம்      : கர்ணன்
பாடல்  : உள்ளத்தில் நல்ல உள்ளம்

Monday, November 20, 2017

மூக்கழகு

மூக்கழகு
கன்னியவள் மூக்கு
காற்று மூழ்கியெழும் தடாகம்!
மூழ்குநீச்சல் கற்றதுவோ காற்று!
அடிநெஞ்சின் ஆழம் தொடுகிறது!

மின்னல் பார்வையின் அடியில்
மின்னும் நட்சத்திரம் மூக்குத்தி!
காற்று மின்உற்பத்தி நடக்கிறதோ?
மூச்சுக்காற்றில் வெளிச்சம்தரும் மூக்குத்தி!

மூக்கு முப்பரிமாண முக்கோணமடி!
முகத்தேசத்தில் மத்திய பிரதேசம்!
மூக்கு இரட்டைக்குழல் துப்பாக்கி!
வெளிவரும் காற்று சுடுகிறதே!

சூறாவளிபோல் சுழன்றடித்து
கடலையும் கவிழ்த்திடும் காற்று,
உன்னிடம் அப்பாவிபோல் நடிக்கிறதடி;
மூச்சாய் வந்துபோகும் சத்தமில்லாமல்!

மொத்தக்காற்றும் பறந்து
உன் மூச்சடைய வந்ததுவோ?
தலைநகரில் காற்றுமாசுபாடாம்!
மூச்சுத்திணறி தவிப்பதுவோ!

தலையில் மல்லிப்பூ வாடிப்போனதடி;
முகர்ந்து பாராமல் வைத்துக்கொண்டாயாம்!
கூந்தலை முன்னால் இழுத்துப்போடு!
மூச்சுக்காற்றில் மல்லி மணக்கட்டும்!

மணக்காத பூ உலகிலுண்டோ?
மங்கையவளே! விஜயம் கொள்!
மூச்சுக்காற்று வசியத்தில்
மணம்வீசி மலரட்டும்!

முழுமதியே! உன் மூச்சுக்காற்று
என்முகம் குளிர்காயும் இடம்!
மூக்கோடு மூக்குஉரச பற்றாத தீ
காதலாய் பற்றிக்கொள்ளுதே!

இதழோடு முத்தமிடப்போக
தடுப்பணை போடுகிறதே மூக்கு!
தனக்கொரு முத்தம் போடாத
ஏக்கமோ? பொறாமையோ?

- சரவணபெருமாள்

Sunday, November 19, 2017

நடைபாதை வீடு

நடைபாதை வீடு



சுவரில்லா கதவில்லா வீடு
கூரைகள் வேயாத வீடு
குடும்பங்கள் பல வாழும்வீடு
நடைபாதை வாழ்வுப்பாதை வீடு

விருந்தாளிபோல் மழைவரும் வீடு
விடிந்தவுடனே வெயில்நுழையும் வீடு
ஆடிக்காற்றில் பறக்கும்பொருள் வீடு
குளிர்காற்றில் நடுங்கவிடும் வீடு

சுவர்வேலிவர ஒற்றைச்சுவர் வீடு
சுவரெல்லாம் சுவரொட்டி வீடு
சிறுநீர் கழிக்காதே சொல்லும் வீடு
சொல்லின் கீழேயே கழிப்பறையான வீடு

பெருமைச்சித்திரம் வரைந்த வீடு
பேருந்து நிறுத்தங்கொண்ட வீடு
ஆள்குடியேறி வசிக்கும் வீடு
ஆளேயின்றி நிழற்குடை விரித்த வீடு

விழிப்புணர்வுகள் சுமந்த வீடு
விடியலை காணாதோர் வீடு
விளம்பரங்கள் விளையும் வீடு
நாற்காலியார் விழிபடா வீடு

எத்தனையோ தலைவர் பார்த்தவீடு 
எவராலும் மாறாத கம்பீரவீடு
தேர்தல் கணக்கில் தவறாதவீடு
தேவைமுடிய தெருவாய் ஆனவீடு

காவலர் கண்ணை உறுத்தும்வீடு
கண்டவிடத்தில் துப்புவாங்கிய வீடு
கூட்டுக்குடும்பத்தில் கொசுசேர்ந்த வீடு
பசிபடைத்தவன் திறமை வெளிப்படும்வீடு

கடைகள்நீள கேள்விவரா வீடு
டைமையிழந்தாரை வலியார் துரத்தும்வீடு
கழிவுநீர்க்குழாய் மூடாதிருக்கும் வீடு
ஊழலால் உடைந்தகுழாய் வீடு

ஆள்பாதி ஆடைபாதி வீடு
அன்பிற் சளைக்காத வீடு
சுகமேதும் தேடா வீடு
சோறே சொர்க்கமென்ற வீடு

ஒளிவு மறைவு இல்லாவீடு
எட்டிப்பார்க்க விரும்பா வீடு
பெண்மேல் பேடிஆண் பார்வைவீடு
பெட்டை பரிதாபம் வசமாக்கும்வீடு

இடித்திட இயந்திரங் கேளாவீடு
இயந்திர உலகில் இப்படியும்வீடு
தலைவர் வருகை தொலைக்கும்வீடு
வருகை வண்ணவிளக்கான வீடு

கூடாய் எளிதிற் களையும்வீடு
இக்களைய அங்கெழும்பும் வீடு
இரப்பார்க்கு இதுவேகடை வீடு
ஈவாரை கடவுளாக்கும் வீடு

குடித்தவர் பார்வை சாலைவீடு
குடும்பம்மேல் ஏறவிட்ட வீடு
எத்தனையோ குடித்தவரால் செத்தவர்வீடு
எதற்குமே எப்பதிலும் கிடைக்காவீடு

இது நடைபாதை வீடு

- சரவணபெருமாள்

Friday, November 17, 2017

செவியழகு



செவியழகு




காணாது போல் நடித்தே
கண்கள் எங்கோ போக
காதுகள் ரெண்டும்
ரகசியமாய்
என் வாய்வரை நீளுதே!

மடிந்த ரோசாப்பூ இதழ்
மங்கை உதடென்பரோ?
மெலிதாய் மடிந்த செவி
மடங்கிப் பூத்த
ரோசாவன்றோ?

கம்மலை தொங்கவிட்டதே
கன்னியவள் கைகள்தான்!
பின்ஏனோ
சிலுசிலுவென கத்தி
இருப்பைக் காட்டுகின்றன!

தவறிழைத்தனவோ தொங்கட்டான்கள்?
கோர்த்து தொங்கவிட்டாய்!
மன்னிப்பு கேட்கும்
அதன் மொழியோ?
சல்சல்லெனும் மெல்லிய ஓசை!

காதுகுத்தும் சாக்கில்
துளைபோட்ட ஊசி
பெருமை பேசித் திரிகிறதே!
நிலவில் முதற்கால் பதித்தது போல!

தலையைச் சுற்றி
காதைத் தொட்ட
ஒன்றாம் வகுப்பு விளையாட்டு!
ரெட்டைச் சடை ரெண்டும்
நேரேத் தொடுதே செவியை!
பருவ வருகை விளையாட்டோ?

கூந்தல் வாரிட வந்த சீப்பு
காதருகே வாரும்போது
செவியில் இடித்தே
சில்மிசம் செய்யுதே!

பிரம்மனின்
தேவையற்ற மெனக்கெடலோ
புனல்போல் விரிந்தசெவி!
நீர்மமா ஒலிச்சிதறி வழிய?
இல்லை
பொற்கொல்லன் கையூட்டோ பிரம்மம்?

காது ஓரம் உரசி
வாழ விரும்பும் செல்பேசி
அழைப்புகளை எதிர்பார்த்து
காத்துக்கிடக்கிறதே!
செவியே!

கவியாக்கி கைசேர்த்து
வாய்படிப்பது சுகமோ?
வடித்தவன் வாயுரைக்க
செவிமடுக்கும் வரம் சுகமோ?

செவியே!
நீ அழகு!

- சரவணபெருமாள்

Tuesday, November 14, 2017

கண்கள்

கண்கள்


கள்ளத்தனம் மிகுந்ததடி!
பாராது போல் நடித்து
பார் சுருட்டும்
வித்தகக்கண்கள்,
கள்ளத்தனம் மிகுந்ததடி!

கண்களுக்கு
கவரி வீசும்
கண்ணிமைகள்,
சம்பளமற்ற தொழிலாளிகள்!

காதுக்கெனவும்
மூக்குக்கெனவும்
அணிகலன் போட்டு,
கண்களுக்கு
கரு மையோடு விட்டது,
ஓர வஞ்சனை!

கண்களில் மையும் ஏனடி?
கண்களே வசியம் செய்யும்போது
கண்ட மைகள் தேவைதானா?

ஒருதுளி கண்ணீர் வந்தாலும்
குளம்போல் நீரென
பொய்க்கவி
புனையவிட்ட கண்கள்,
வசியக்காரிகள் தான்!

நிலவிருக்கும் இடம்
வானம்தான்!
அதற்காக இப்படியா?
அதிக பிரசங்கித்தனம் மின்னல்
பிறைநெற்றியின் அடியில்
புருவமாய் வளைந்து நீற்கிற்து!

மின்வெட்டைச் சமாளிக்க
மின்னல்தேடி வருவாரென்று
புருவத்தில்
மையிட்டு மறைக்கிறாய்!
புத்திசாலிப்பெண்ணே!

கண்ணாடி பிரதேசமடி கண்கள்!
முன்னே வந்தபோது
முன்னிலைப்பிம்பம்,
முகம்பார்க்கும் கண்ணாடி!
தொலைக்காட்சிகள்
குவித்திடும் விழிப்புள்ளி,
குவி ஆடி!

கண்கள்
கவிதைச்சுரங்கம்!
அள்ள வந்த
எந்தக்கவிஞனும்
இல்லையென்று ஏமாறவில்லை!

கண்கள்
கயிறுகள் இன்றி
ஆண்களைக் கட்டியிழுக்கும்
பெண்களின் விஞ்ஞானம்!

கண்திறந்தும்
கனவு வருதடி!
உன் விழி நோக்க
புறப்பட்டதொரு அம்பு
இதயம் துளைக்கிறது!
பிடுங்கி எறிய முனைந்தேன்!
கண்ணிலும் சிக்கவில்லை!
கையிலும் சிக்கவில்லை!
வலிகள் நிச்சயம்!
அது சுக வலி!

காந்தியவாதி கண்கள்!
ஆயுதம் ஏந்தாமலே
ஆண்களை அடிக்கும்
அகிம்சைப் பேர்வழியான
பெண்ணாயுதம்!

கண்ணடிக்காதடி கண்மணியே!
சுளீரென்று
என்னில் வலிக்கிறது!

இமையில் நீண்ட ரோமங்கள்
தொடாமலே
இதயத்தை வருடும்
இறகுகள்!

மூடித்திறக்கும் இமைகள்
சிறகுகள் என்றெண்ணி
சிக்கியதோ நம்மினம் என்று
புறாக்கூட்டம் ஒன்று
குழுமுதடி!

மீன்தொட்டி போன்ற பள்ளத்தில்
தாவிட முடியாத
மீன்களடி,
உன் விழிகள்!
மீனே தூண்டில் போட
மீண்டிட முடியாத
மீனவனடி நான்!

கண்மணியே!
மொத்தத்தில்
கண்கள் என்னும்
காவல்துறை அமைத்தாய்!
காதல் என்னும்
சிறையில் அடைத்தாய்!

- சரவணபெருமாள்

Monday, November 13, 2017

காலச்சூழ்நிலை

காலச்சூழ்நிலை

அவளை நேசித்துவிட்டு
இன்னொருவளை கைபிடிப்பது
அவளுக்கென்று எழுதிய கவிதைகள்
முகநூலில்
வேறொருவள் புகைப்படம்
சுமந்து வருவது போலானது 
என் காலச்சூழ்நிலை

- சரவணபெருமாள்

நெற்றி


நெற்றி


பிறைதிருடிய பிரம்மன்
நெற்றி செதுக்க
மிச்சப்பிறை பாதுகாத்தே
தலையில் சூடினான் பித்தன்!

நெற்றியில் படர்ந்த முடி
நெற்றி வியர்வை துடைக்கும்
தலைமுடியின் கைவிரல்கள்!

வடிவமற்றதே நீர்ம!ம்
நெற்றியில் வழிய
வடிவம் பெறுகிறது
சாந்திப்பொட்டு!

நெற்றி வனப்பு,
அரங்கேற்ற மேடை!
எத்தனை விதம்?
நிதமொரு பொட்டின் அரங்கேற்றம்!

புருவத்தை நீ உயர்த்த
நெளியும் நெற்றிக்கோடுகள்
மனதை நெளிக்கும்
கவிதை வரிகள்!

நெற்றித்தழும்பு,
வழுக்கும் தேசத்தில்
ஒரு பளிங்குத்தரை!

நெற்றிச்சுட்டி,
பிறை பிடித்த
தொங்கும் தோட்டம்!

முகம்பூசிய மஞ்சள்,
பிறை மூடும் உறை!

பக்கவாட்டு வளைவு,
குயவனின் கைவண்ணம்!

கயிறு காட்டும் முன்னே
முந்திக்கொள்கிறது,
நெற்றி உச்சிக்குங்குமம்!
திருமதியா?
திருவளர்ச்செல்வியா? எனக்காட்ட!

நெற்றி,
குங்குமம் சூடாத வரை
ஆடவர் மனம் சமாதானமே;
நமக்கொரு வாய்ப்புள்ளதென!

- சரவணபெருமாள்

Sunday, November 12, 2017

கூந்தல்



கூந்தல்

 
பூச்சூடியதாய் நீ நினைக்க
பூப்பல்லக்கு சுமப்பதாய்
பூ நினைத்துக்கொள்கிறது!
பூவாசம் தேடி 
பூ வைத்தால்
பூவின் நாட்டமெல்லாம்
உன் கூந்தல் வாசமடி!

சீப்பை மாற்றடி பெண்ணே!
சிக்குவது போல்
அடிக்கடி நடிக்கிறது!
கூந்தலை விட்டுவர
மனமில்லை போலும்!

கூந்தலில் இறுதிச்சுற்று
ஊஞ்சல் கயிறா?
உல்லாசமாய் ஆடுகிறது
ஊதாக்குப்பி!

முடியை விரித்துப்போட
காதல் கொண்ட காற்று
பறக்க கற்றுத்தருவதுபோல்
வழிகிறது கூந்தலிடம்!

எத்தனை புள்ளி வைத்தாலும்
பின்னிய கூந்தல் போலவே
நெளிகிறது கோலம்!

இடைக்கும் முடிக்கும்
என்னடி தனிநேசம்?
இடைதழுவதே! 
அடிமுடி அடிக்கடி!

காரிருட்டில் வருதே நிலவு!
கருங்கூந்தல் நடுவே
உன்
கட்டழகு முகமே நிலவு!

- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...