முதிர்கன்னி
பூத்த திரு தினத்தில்
பூஜை போகும் பூ
போகாமலே
பூச்செடியில் தங்கினேன்
வழக்கம் மாறி
வண்டுகள் வந்து மொய்க்க
வழக்கத்தோடு வரும் வண்டுக்காக
செடியுள் மறைந்தேன்
தேநிறைந்த மலரைக் காக்க
மதுவுண்ட தந்தையம்மா
தாயென்ற செடியிலும்
நோயொன்று தாக்க
நானென்றானதம்மா
என்னோடு இருமொட்டு
உரமின்றி போக
உணவுக்காக நானுழைக்க
பூஜைக்கு அழைத்தே
வழக்கத்தோடு வந்த நாரை
வரவேற்கவில்லை
என் பின்
அரும்பிய மொட்டுக்கள்
மலராயின
மாலைக்கு நாருறித்தேன்
மாலை தொடுத்த நேரம்
அபசகுணம் என்றே
ஒதுக்கப்பட்டேன்
கையாலாகா தந்தை
கைதாங்கலாய் தாய்
சூழல் கண்டு
சுற்றிச்சுற்றி மீசை வர
தாழிட்டேன் வீட்டை
தள்ளிவிட்டே வாழ்கிறேன்
ஊடல் காற்றும்
உடலைத்தொட்டுச் சோதிக்க
உணர்வை அடக்கி
உள்ளத்தில் தாழ் போட்டேன்
இனி அவ்வளவுதான்
எண்பதிலும் கன்னியென்றெ
வெட்கம் கொள்வேன்
முதிர்கன்னியென்றே
முதிர்பூவாய் உதிர்வேன்
என் மகரந்தம்
மாலையின்றி
மலடானதே என் துயரம்
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment