Monday, October 30, 2017

நிதமொரு ஏமாற்றம்

நிதமொரு ஏமாற்றம்

வானைப்பார்த்து படுத்திருக்கிறேன்!
நிலவை 
மேகம் மறைக்க முயல
என் இமைகள்
எல்லாவற்றையும் மறைக்கும்
முயற்சியில் உள்ளன!

மூடிய பின்பும்
கண்களுக்கு உயிர் கொடுக்க
கனவுகள் காத்திருக்கின்றன!

கனவை சாக்குச்சொல்லி
நெருங்கும் முயற்சியில்
நீ உள்ளாய்!

நிஜமென நம்பி நான் முழிக்க
நிதமொரு ஏமாற்றமே எனக்கு!

- சரவணபெருமாள்

Sunday, October 29, 2017

தலையணை முத்தம்

தலையணை முத்தம்



உன்னில்
இதழ் பதிப்பதாய் நினைத்தேன்
முத்தங்களை
தலையணை வாங்கிக்கொண்டது


- சரவணபெருமாள்

Saturday, October 28, 2017

முதிர்கன்னி

முதிர்கன்னி


பூத்த திரு தினத்தில்
பூஜை போகும் பூ
போகாமலே
பூச்செடியில் தங்கினேன்

வழக்கம் மாறி
வண்டுகள் வந்து மொய்க்க
வழக்கத்தோடு வரும் வண்டுக்காக
செடியுள் மறைந்தேன்

தேநிறைந்த மலரைக் காக்க
மதுவுண்ட தந்தையம்மா
தாயென்ற செடியிலும்
நோயொன்று தாக்க
நானென்றானதம்மா

என்னோடு இருமொட்டு
உரமின்றி போக
உணவுக்காக நானுழைக்க
பூஜைக்கு அழைத்தே
வழக்கத்தோடு வந்த நாரை
வரவேற்கவில்லை

என் பின்
அரும்பிய மொட்டுக்கள்
மலராயின
மாலைக்கு நாருறித்தேன்
மாலை தொடுத்த நேரம்
அபசகுணம் என்றே
ஒதுக்கப்பட்டேன்

கையாலாகா தந்தை
கைதாங்கலாய் தாய்
சூழல் கண்டு
சுற்றிச்சுற்றி மீசை வர
தாழிட்டேன் வீட்டை
தள்ளிவிட்டே வாழ்கிறேன்

ஊடல் காற்றும்
உடலைத்தொட்டுச் சோதிக்க
உணர்வை அடக்கி
உள்ளத்தில் தாழ் போட்டேன்

இனி அவ்வளவுதான்
எண்பதிலும் கன்னியென்றெ
வெட்கம் கொள்வேன்
முதிர்கன்னியென்றே
முதிர்பூவாய் உதிர்வேன்

என் மகரந்தம்
மாலையின்றி
மலடானதே என் துயரம்

-    சரவணபெருமாள்

சுமையானாயே! (முதுமைக்காதல்)

சுமையானாயே! (முதுமைக்காதல்)




எதையும் இழக்கவில்லை
என்றுதான் நினைத்தேன்;
ஏமாந்தேனடி

உன் அருகாமையை இழந்தேன்;
என் ஆளுமையை இழந்தேன்  
உன் அரவணைப்பை இழந்தேன்;
என் ஆழ்மனம் இழந்தேன்  
உன் இம்சைகளை இழந்தேன்;
என் இன்பங்களை இழந்தேன்  
உன் முகக்காட்சி இழந்தேன்;
என் முகமலர்ச்சி இழந்தேன்
உன் கொஞ்சுதலை இழந்தேன்;
என் மிஞ்சுதலை இழந்தேன்  
உன் ஆறுதலை இழந்தேன்;
என் தேறுதலை இழந்தேன்

நான் உன்னை இழந்தேன்;
நான் என்னை இழந்தேன்

மலர்த்தொடுத்து மஞ்சம் வந்தவளே!
மலர்த்தூவி விடை கொடுத்தேனே!

கைவிரல் பிடித்தவளே!
கைவிட்டுப் போனாயே!
பாதியில் வந்தவளே!
மீதியும் வைத்தாயே!
என்னையும் அழைத்திடம்மா!

தூரம் சுகமென்றாயே!
பெண்ணே! சுமையானாயே!
அருகே அழைத்திடம்மா!

                                         -
சரவணபெருமாள்

Sunday, October 22, 2017

யார் பிச்சைக்காரன்

யார் பிச்சைக்காரன்


புண்ணியந்தேட பிச்சை போடும்
          எண்ணமோடும் எவரும் கேளும்
பிச்சைபோட நீட்டிய கையில்
          பிச்சை போட்டான் புண்ணியத்தை
பிச்சைக்கார னென்றே சொல்லி
          பிச்சை யெடுக்க வந்தாய்நீ
சோறுகொண்டான் பிச்சைய னென்றால்
          புண்ணியங் கொண்டான் பெயரென்ன
பசியென புசியென விட்டவனே
           புனித னென்றே யாமுரைப்போம்
புசியென விட்ட சோறள்ளி
          ருசியென நாய்க்கிட்ட னிறைவனே

                                        - சரவணபெருமாள்
         

Monday, October 16, 2017

உள்ளங்கால் முத்தம்

உள்ளங்கால் முத்தம்



முத்தங்கள் போட
உதடுகள் தேவையில்லை
உள்ளங்காலும் 
முத்தங்கள் போடுதடி
என் நெஞ்சில்

மகளே
நடந்தொரு முத்தம் போடு
பாவமடி பாதை
ஏங்கிப்போகிறது 


                   - சரவணபெருமாள்

தானாய்ச்சாவது மனிதம்

தானாய்ச்சாவது மனிதம்  




ஓரறி மரமது காய்ந்து

          ஒருநூ றுயிர்சுமக்குது ஊர்ந்து
ஈரறி நத்தையூ றின்றிபோக
          ஈரறிச் சங்குமுழங்குது இசையாக
மூவறி யெறும்புகரையான் கூட்டாக
          மூச்சோடிப் போகும்வரைசுறு சுறுப்பாக
நாலறி வண்டுபறக்குது இரைதேடி
          நாப்புறங் கூவியழைக்குது காக்காய்
ஐந்தறி கொண்டவுயிரது பாரடி
          ஐயோ டொருசேர்ந்தது கணக்காய்
ஆறறி மனிதமோசித்தது ஐயோடி
          மற்றறி வுயிரழித்தது தனக்காய்

கையிலவே கட்டுதுபுள் கூடு

          குச்சிகளை சுமக்கவல் லலகு
தூரம்போய் எடுக்கநல் சிறகு
          வேறிலவே ஆத்திரமுள் ளொருவீடு
கையுளதே துணைநரன் தேடுது
          காடழித்தே கட்டும்தன் ஊரது
காட்டுயி ரழித்தது நிலது
          தன்னின மழித்துமது வாழுது

றெக்கை முளைத்த புள்ளில்

          கிளியுண்டு கழுகுண்டு காக்காயுமுண்டு
மயிலுண்டு குயிலுண்டு குருவியுமுண்டு
          சிட்டுண்டு வாத்துண்டு புறாவுமுண்டு
காலில் நாலுள்ள வினத்தில்
          நரியுண்டு பரியுண்டு நாயுமுண்டு
புலியுண்டு எலியுண்டு பூனையுமுண்டு
          மாடுண்டு குரங்குண்டு கரடியுமுண்டு
இன்னு மின்னு மெத்தனையோ 
          இனத்தி லெத்தனையோ வுண்டு
அத்தனையு மினத்தி லெத்தனையோ
          பகை மூண்டு மியற்கையுமுண்டு
இரண்டே காலினத்தே மனிதமுண்டு
          இவ்வகையே இவ்வினமே ஒன்றேயுண்டு
புல்லழித்து புள்ளழித்து விலங்கழித்து
          தரையழித்து தன்னழித்து தானாய்ச்சாவது 

                                                  - சரவணபெருமாள்

          
          

வழுவா? வழுவமைதியா?

வழுவா? வழுவமைதியா?



வழுவென் றுரைப்பதா வழு

          வமைதி யுடுப்பதா தாவர
முயிரா யிருப்பதா யிருக்க
          சைவரென் றிருப்பரா சொல்க
பிணமேற் செடிமுளைப்பதும் அசைவ
          பிராணி யல்லவா ஆகும்
அதையுண் டிருப்பதும் ஊன்
          உண்ணி யல்லவா கூறும்
ஆசையற் றிருப்பரே விதியோ
         துறவென் றுரைப்பரே தவறோ
இறையாசை விடுத்தரே எவரோ
         இலயென் றுரைப்பரே உளரோ

                                   
-
சரவணபெருமாள்


        

Saturday, October 14, 2017

தாய்

தாய்



பிறந்தவுடனே அழுதோம்
வாய் பேசியிருந்தால்
வலி என்ன என்று கேட்டு
அதையும் நிறுத்தியிருப்பாள்
தாய்

                               - சரவணபெருமாள்

Friday, October 6, 2017

தோற்றுப்போன வெங்காயம்

தோற்றுப்போன வெங்காயம்



கண்களை 
கலங்க வைப்பதில்
வெங்காயத்தொலி
உன்னிடம்
தோற்றுப்போனதடி

                            - Written By
                              சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...