Tuesday, September 11, 2018

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்



நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே!
நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே!
நாற்றுநட தாயவளும் போகையிலே
நானும்போக அழுததெல்லாம் கண்ணுக்குள்ளே!
சேற்றுக்குள்ளே நானிறங்கிப் போகையிலே
தவளையிடம் தாவக்கற்றேன் விரைவினிலே!





கிணற்றருகே எட்டிச்சென்று பார்க்கையிலே
என்முதுகு புண்ணானது தாயினாலே!

சாலையிலே நான்நடந்து போகையிலே 
இருபுறமும் குடைபிடிக்கும் மரங்கள்தானே!
இன்றெல்லாம் பறவையெல்லாம் புத்தகத்தில்!
நான்பார்த்தேன் நேரினிலே கானகத்தில்!
நீச்சலுக்குப் பயிற்சிப்பள்ளி போனதில்லை!
நீந்தக்கற்றேன் மாமாவால் கண்மாயிலே!
தவில்காரர் வாசிக்க அருகேசென்று
அதுவெனக்கு வேண்டுமென்று அழுதேன்நானே!


என்முத்தம் வாங்கினார்கள் நிறையபெண்கள்!
இன்றதனைத் திரும்பக்கேட்டால் என்னவாகும்?
உறவுகளும் நட்புகளும் கூடிவாழ்ந்த
அந்தக்கால நினைவுகளும் சுகமே!சுகமே!


- சரவணபெருமாள்

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!

கல்லறை வாசலிலும் காத்திருப்பேன்!


கண்ணுக்குத் தெரியாத
தென்றலின் சேட்டையால்
கண்ணில் தெரிந்த
தென்றல் கூந்தல்!
ஒற்றைக் கோட்டில்
ஆடவன் தடுமாறினால்
ஒய்யாரமாய் நெளியும்
புருவத்தின் சேட்டையாம்!


சிலையென நின்று
நிலையினை மறந்தால்
ஏழாம் அறிவு
விழிகளின் மந்திரம்!
தங்கச் சில்லறையின்
சிதறல் ஒலி
தவிடு பொடியானால்
உனது சிரிப்பொலி!


உன் புன்னகை
சிந்தும் வழியில்
வரிசையாய் நிற்கிறது
வாலிபர் கூட்டம்
ஏறெடுத்துப் பாராத
எட்டாக்கனி முகம்
எனையேனோ பார்த்து
எடுத்துக்கொள் என்றது


நிலவின் விடுமுறையில்
நிறைந்த ஒளிப்பேழை
நிலத்தில் விழுந்தாற்போல்
இதயத்தில் நீ!
உலகைச் சுருட்டி
ஒட்டுமொத்த மகிழ்வும்
உன்னால் வந்தது!
எனக்கு என்னானது?


மனம்போன ஒத்தையடியில்
கைகோர்க்க வந்தவளே!
இனியென்ன தயக்கம்?
பெற்றோரின் விருப்பம்!
வரவெனில் கல்யாணப்
பந்தலில் காத்திருப்பேன்!
பிரிவெனில் கல்லறை
வாசலில் காத்திருப்பேன்!


- சரவணபெருமாள்

என் விழியில் உன் பார்வை

என் விழியில் உன் பார்வை




மயக்குவாள் இன்றி திரிந்த விழிக்கு
உடைவாள் ஆனது உன் விழியே!
என்னைப் பார்த்ததோ?
இல்லை எதார்த்தமோ?
மண்ணைக் கவ்வியது என் விழிகள்!


தானியங்கு சேமிப்பகமாய்
என் மூளையில்
தவறுதலாய்ப் பதிவான காட்சி
உன் பார்வை!
தொலைக்காட்சியின்
முக்கியச்செய்தி போல்
தொடர்ந்து
என் நினைவில் ஒளிபரப்பாகிறது!


மறுபடி அந்தக் காட்சிக்காய் ஏங்குவேன்!
அதுபுரியும் ஆட்சியில் தான் வாழுவேன்!
வறட்சியில் குளத்தினில்
பாய்ந்திட்ட மழைவெள்ளமே!
மிரட்சியில் உடைந்திட்ட கரை
என் உள்ளமே!
இலக்கற்ற தென்றலாய்
பாய்ந்தேன் நானடி!
இலக்கினி நீயடி!
படர்வேன் கண்மணி!
உரசலாய் கொஞ்சம்!
மெர்சலாய் கொஞ்சம்!
சிரிசினில் ஊதி;
மூச்சினில் பாதி!
நான் இருப்பேன்!


விழிசெய்யும் நிகழ்ச்சியே
காதலின் புரட்சியே!
விரைந்துனை அடைவதே
இதயத்தின் குளிர்ச்சியே!
இதற்குமேல் எதற்கு,
உதாரணம் நமக்கு?
இணைந்தினி வாழ்வோம்;
இதயமே வாயடி!


- சரவணபெருமாள்

தாவணிக்காலக் கனவுகள்

தாவணிக்காலக் கனவுகள்



வெட்கத்த பூட்டத்தான் வழியேதும் இருக்கா?
வந்து சொல்லடி சிநேகியே
அந்தக்காலக் கதை சொல்லி அறுக்குற
கெழவியக் கூட்டிட்டுப் போ வெளியே


ஓலை அனுப்புன அடுத்த வண்டியில
மாமன் வந்துட்டான் குச்சுக்கட்ட - என்
மாமன் வயசுக்கு வந்ததேதி கேளு
நான் போறேன் அவனுக்கு குச்சுக்கட்ட


மூஞ்சிய மூடுன தாவணிக் குள்ளேயும்
நூலிடுக்குல குட்டிச்சன்னல் - அந்த
சன்னல என்கண்ணு தாவிக்குதிக்குது - அது
மாமன்மேல நான் வச்சகாதல்


தாவணி மிச்சமா விட்ட இடுப்புல
சந்தைக்கு வந்த மாமங்கையி
கண்ணுல கையில காமம் ஏதுமில்ல
அதனால தப்பிச்சான் பொடிப்பையன்


தாவணி எப்பத்தான் சேலையா மாறும்
காத்துக் கெடக்கேன் என்மாமனுக்கு
தாலியக் கட்டுன அப்புறம் நான்புருசன்
பொஞ்சாதி எனக்கு மாமங்காரன்


- சரவணபெருமாள்

காதலாகிய கவிதை!

காதலாகிய கவிதை!
 
வந்தோம்; உண்டோம்!
எனும் வண்டினம்,
இதோ!
பூவனம் சுற்றி
பூவெழில் கிறங்கி
மதுகொண்ட மலர்முன்னே
மதுவுண்ணாது மயங்கிடுதே!
பாடத்திலக்கியம் பயின்ற
இளவல்கள்
பட்டம்பெற்ற பின்னரே,
இதோ!
உண்மையான இலக்கியத்தேடல்!


தற்கொலை வேண்டாமென
தாவிப்பிடிக்கிறது,
பனித்துளியைப் புல்நுனி!


கண்ணில் மண்தூவாது
களவாடும் கதிரிடம்
கத்தியின்றி ரத்தமின்றி
நீர்மீட்ட குளிர்காற்று!


பூச்சிகளின்
கால்களில் ஒட்டிச்சென்று
களவுமணம் புரியும்
மகரந்தங்கள்,
மணம்வீசும் மலர்களாய்!


சுற்றலென்பாரைப் பொய்யாக்கி
நிலையாய் பூமியும்
விழுந்தெழும் வெய்யோனும்
மந்திரவாதிகள்!


கயிறின்றி
கடலைக் கட்டியிழுக்கும் காற்று,
ஏதுமறியாததாய்
உடல்நுழைகிறது அப்பாவியாய்!


அடடா!
இன்னும் எத்தனை காட்சிகள்?
இந்தக் கவிதைகளில்!


இதக்காற்றின் இச்சையில்
இதழ்விரித்த மயில்தோகையென
கவியிச்சையில்
விரிகிறதே இமைத்தோகை!


காதலியிருப்பவனுக்கு
ஒற்றைக்காதலி!
காட்சிகளை ரசிக்கப்பழகியதால்,
ஒவ்வொரு கவிநூலும்
என்காதலி!
கவிதையில் காதலாகிப்போன
காதல் மன்னன் நான்!


- சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...