Monday, February 26, 2018

அன்புள்ள மான் விழியே

அன்புள்ள மான் விழியே


அன்புள்ள மான் விழியே - ஒரு
ஆசைமொழி பேசு கிளியே
இமைவிட்டு தாவும் பார்வையே - என்மேல்
குதித்தால் காதல் போர்வையே


அழகென்று முழி நோக்க - அதில்
வேலின்றி வினை உள்ளதே
மான்விழியென சொன்னது தவறு
மான்கொம்பென நெஞ்சில் சொருகுதே


பட்டாம் பூச்சி என - உன்
இமை ரெண்டும் பறக்கிறதோ
பலமுறை அசைந்தும் நகரவில்லை
பறப்பதெல்லாம் மாமன் மனமே


கண் அடித்தாய் சத்தமில்லை - நான்
வலி உணர்ந்தேன் காயமில்லை
காளை எனக்கு எதிர்ப்புமில்லை - ஆனால்
உன்னெதிர் நிற்க துணிவுமில்லை


நோவு தந்த நஞ்செதுவும்
மருந்தென ஆனதுண்டா - உன்
முழிதந்த மூச்சுத்திணறல் போக
முழுத்தீர்வு நீயடி மான்விழியே


- சரவணபெருமாள்

மரணித்தால் மறக்கலாம்

மரணித்தால் மறக்கலாம் 


நிலவோட்டில் நீ என்று
விழியுரைத்த பொய்களால்
மூட மறுத்த இமைகள்
தூக்கத்தின் விதிமுடிந்த கதைகள்
முடித்து வைக்கப்பட்டன

தலையணை சாய்ந்த தலைக்குள்
மங்கையின் மடியென்ற தலைக்கனம்
எழ மறுத்த விடியல்கள்
எழாமல் நடித்த காலைகள்
மாலைகள் சுமந்து கொண்டன

ஆரந்தொடுக்க
நான் பறித்த நட்சத்திரங்கள்
கனவுக்கன்னி கழுத்தில் இல்லை
என் காதல் அஞ்சலி
ஊர்வலத்தில் சிதறப்பட்டன

வலியச்செல்லா என்மனம்
வலிந்து வந்த பெண்மனம்
நலிந்தது மெலிந்தது
உயிரும் உடல்விட்டது
உளமும் களம்விட்டது

மாமன் என்ற சொல்
வேரை விட்டது
போறேன் என்ற சொல்
ஆணி அறுத்தது
கிளைவிட்ட சுமைகள்
ஆலம் தலை சாய்ந்தது

வரைந்த ஓவியம்
காதல் காவியமானது
கருகிப்போனது
கண்ணீரில் சாம்பல் கரைந்தது
பொட்டும் மாலையும்
என் காதல் ஓவியத்தில்

என் காதல்
கரை தட்டும் கப்பலாய் கூட
ஆகாமல்
காகிதக்கப்பல் ஆகிப்போனது
கரைதட்டியிருந்தால்
கவனிக்கப்பட்டிருக்கும்
 
தழைவிட்ட காதல்
தலையறுக்கப்பட்டது
மறந்திடு என்ற
சராசரி அறிவுரையுடன்
மறக்கலாம்;
மரணித்தால் மறக்கலாம்

- சரவணபெருமாள்

Sunday, February 25, 2018

குற்றார் – வீற்றேன்

குற்றார் – வீற்றேன் 


பெற்றவள் போக பெற்றவன் குடிக்க
கற்றதைத் தொடர பெற்றேன் செருப்பை
உற்றவன் பேசக் கற்றான் பேரம்
முற்றல் நாளே வற்றல் நானே

கற்றல் இலவச மெனினுஞ் செலவே
வீற்றேன் பலரச மெனது வாழ்வே
பெற்றார் சாகக்குடிய அரசுங் கடவுளும்
ஏற்றகூலி தாராவிழப்பு சமூகவரசுக் குற்றமே

- சரவணபெருமாள்

தமிழ் சிதைந்தால், தமிழினம் சிதையும்

தமிழ் சிதைந்தால், தமிழினம் சிதையும்

வந்தமொழி சென்றமொழி எத்தனையோ நாட்டிலே
வந்ததேதி யாரறிவார் எந்தமிழை ஏட்டிலே
கல்வெட்டைத் தாண்டியது கணினிக்குள்ளும் நுழைந்தது
மரபுவழி வந்ததமிழன் வாய்க்குள்ளே பிறழ்ந்தது

மம்மியென்றே அழைக்கச்சொல்லி எத்தனைத்தாய் முறைக்கிறாள்
மம்மியென்றால் பிணம்பொருள் எத்தனைத்தாய் அறிகிறாள்
கொஞ்சும்போதும் கெஞ்சும்போதும் எந்தமிழே சிறந்தது
திட்டும்போதும் தமிழில்திட்டி னால்மட்டுஎம் மனசாறுது

பள்ளியிலே தமிழ்பேச பத்தாயிரம் தண்டனை
விதித்தவனை நாவறுத்து கொடுக்கவேண்டும் தண்டனை
இந்தியெதிர்த்து நாளிதழில் பேச்சுக்களை வீசியே
பேரப்பிள்ளை அத்தனையும் இந்திகற்க அனுப்புவார்

தமிழன் தமிழனென்றே கூட்டஞ் சேர்த்தால்
தமிழ் வளராதடா தமிழனே தமிழனே
தமிழே பிறழும் பள்ளிகளை மூடிப்போடு
தமிழ்வழியாய் பாடம்பயில பொறியைநீ கொளுத்திப்போடு

இமயம்முதல் குமரிவரை நீண்டதமிழ் இனமிது
தமிழ்சுருங்க இனஞ்சுருங்கி தென்னடியில் வீழ்ந்தது
இன்னுங்கூட முழிக்கவில்லை என்றுசொன்னால் தமிழனே
தென்கோடியும் கடலுக்குள்ளே மூழ்கிப்போகும் தமிழனே

(ஐந்தாம் கவியரங்கம்)
- சரவணபெருமாள்

அரசியல் தலைவருக்கு சமூகத்தொண்டன் எழுதும் மடல்

அரசியல் தலைவருக்கு சமூகத்தொண்டன் எழுதும் மடல்



வெண்மேகம் விழுந்ததுவோ வெள்ளாடைக் கூட்டம்
வெண்பனிதான் தெருவருதோ குளிர்விக்கும் பேச்சும்
பண்ணோடும் காற்றினிலே கட்சிக்கொடி ஆட்டம்
பண்பாடும் பிறழ்ந்ததுவோ இளங்காலில் கையும்

தெருத்தெருவாய் சுற்றிவந்து மயக்கினாயே தலைவனே
கருப்பொருளாய் விவசாயம் பேசினாயே விழுந்தனே
வாக்குதந்து வாக்குகேட்டு வழிந்தாயே இழிந்தனே
நாக்குநம்பி காதலாகி வாக்களித்து வந்தனே

வெற்றிச்செய்தி வெளிவரவே வெளிவரவில்லை நீயுமே
வெற்றுவாக்கை நம்பிநம்பி நடுத்தெருவில் நின்றனே
நதியெல்லாம் இணைத்திடுவேன் இறுமாப்பாய் சொன்னயே
நதியின்றி நாதியின்றி விவசாயம் செத்ததே

தமிழ்ப்பெருமை பீற்றியே வாக்குகேட்டு வந்தயே
வங்கியெல்லாம் தமிழழிக்கும் சாதனை புரிந்தயே
ஈழமது மீட்டிடவே வாக்களிப்பீர் என்றயே
ஈகையனாய் ஆயுதங்கள் ஈழமழிக்க தந்தயே

பேருந்தின்று ஆனதே பணக்கார ஊர்தியே 
ஓகியது போகியென மீனவக்குடி எரித்ததே
வேலையில்லை சாலையில்லை சோறுமில்லை நீருமில்லை
இருப்பதெல்லாம் இல்லாமையே பழிதீர்க்க வரும்தேர்தலே

- சரவணபெருமாள்

எங்கும் தமிழென முழங்குவோம்

எங்கும் தமிழென முழங்குவோம்

ஆதியிலே முளைத்த மொழி
ஆதியாய் முளைத்த மொழி
ஆங்கிலத்தில் மோகம் வர
பாங்கினிலே மாறுவாயோ

கால்கடுக்க நின்றிருந்து
காவுவாங்கும் முயற்சியடா
ஆங்கில வழிக்கல்வி
குரல் இனிதே குழந்தையடா
மம்மி எனில் கசக்குதடா
ஆங்கில வழிக்கல்வியடா

எந்தமொழி எந்தவழி
எந்நாட்டில் வந்தாலும்
எங்கும் தமிழென முழங்குவோம்

வெள்ளம் வர கரையாத்தமிழ் - நில
நடுக்கம் வர புதையாத்தமிழ்
தீப்பிடித்தும் எரியாத்தமிழ்
காற்றடித்தும் பறவாத்தமிழ்

இன்று - நீ
வங்கியிலே அழித்தாலும்
இந்தியையே திணித்தாலும்
வீழ்ந்திடுமோ எம்தமிழ்

ஊமைவாயில் அம்மாவை அழிப்பாயோ
ஆடுமாட்டில் அம்மாச்சத்தம் அறுப்பாயோ

அழிக்கும் இடமெல்லாம்
பொறிப்போமே பொன்தமிழை
கடலே மறித்தாலும்
தாண்டித்தமிழ் வளர்ப்போமே

எங்கும் தமிழ் வளர்ப்போமே
எங்கும் தமிழென முழங்குவோமே

( நான்காம் கவியரங்கம்)
- சரவணபெருமாள்

Friday, February 2, 2018

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்


மை வைத்த விரல்
கை வைத்த இடம்
தவறானதால்
சொல்ல மட்டும்தான் நினைக்கிறேன்
சொன்னால் வழக்கு

நிதிச்சுமையாம்
நீண்டுவிட்டது கட்டணமும்
உறுப்பினரின் ஊதியமும்
சிங்கமில்லா காட்டிலே
சிறிநரி நாட்டாமைத்தனம்
இதை
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொன்னால் வழக்கு

கறுப்புப்பணம் ஒழிக்கவே
காகிதமானதாம் ஆயிரம்
கள்ளத்தனமாய் பலபேருக்கு
சிநேகிதமானதே ரெண்டாயிரம்
இதையெல்லாம்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொன்னால் வழக்கு

கடலை ஆராய
கணக்கற்ற செயற்கைக்கோள்
கண்டறிய முடியவில்லை
கடலோடு போ மீனவனை
இதையும்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லிப்போராடினால் விலங்கு

அரிவாளோடு வசூல்வேட்டை
அந்தக்காலம்
ஆள்பவரே வசூல்வேட்டை
இந்தக்காலம்
இதையும்கூட
சொல்லத்தான் நினைக்கிறேன்
வரிபற்றி பேசினால்தான்
மெர்சல் ஆகிவிடுகிறதே


மஞ்சுவிரட்டுக்கு மல்லுக்கட்டியவன் ஒருவன்
மாலைகட்டி மாட்டிக்கொள்பவன் ஒருவன்
ஆண்டாளை தூக்கி நிறுத்தியவன் புலவன்
மதமாக மாற்றுபவன் ரா ன்
இதையெல்லாம் சொல்லத்தான் நினைக்கிறேன்
சொன்னால்
நான் ஆண்ட்டி இண்டியன்

என் தமிழ்த்தாய் வாழ்த்தை
மதியாத
ஆன்மீகமும் தியானமும்
எனக்குத் தேவையே இல்லை -என்றும்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொன்னால்
நான் இந்து எதிர்ப்பாளன்

ஆக
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் நினைக்கிறேன் - என்று

சொல்லமட்டும்தான் நினைக்கிறேன்
தட்டிச்சொல்ல முடியவில்லை
காரணம்
ஒழுங்காய் ஓட்டுப்போடவில்லை

- சரவணபெருமாள்
(மூன்றாம் கவியரங்கம் 
நாள்/இடம்: 28.01.2018/திருச்சி தமிழ்ப்பட்டறை கிளை துவக்க விழா.
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாய் எழுதப்பட்டது.)


Thursday, February 1, 2018

சிந்தையில் ஓர் புரட்சி

சிந்தையில் ஓர் புரட்சி

உருவின்றி உருவாக்கும் சிந்தையே விந்தையே
உணர்வின்றி புரட்சியே புகுத்தியே வென்றையே
ஆதியிலே நாதியிலை சோறுதேடி அலைந்ததே
சிந்தையதே முளைத்தையே ஓரிடத்தில் விளைத்ததே

நள்ளிரவைப் பகலாக்கும் மின்விளக்கு கொடுத்தையே
கண்கையிற் சிக்காதே காற்றில்மின் எடுத்தையே
ஓலையிலே ஓட்டையிட்ட பழம்பெருமை தமிழதே
கணிப்பொறியின் முகத்திரையில் வண்ணத்தமிழ் மிளிருதே

மூலையிலே வேலையென வெளிநாடு போனவன்
முகம்வருதே கைக்குள்ளே கைபேசி திரையிலே
தூதுசொல தந்தியஞ்சல் சிந்தையே பழையதே
நொடிக்கொரு குறுந்தூது கொடுத்தையே புதியதே

ஏமாற்றும் நிலாச்சோறு தாயன்பும் சிந்தையே
விண்ணேறி நிலவிறங்கும் புரட்சியதும் சிந்தையே
சிறகின்றி பறக்கவே துடித்ததே மனிதமே
சிறகோடு வானூர்தி வடித்தையே பறக்கவே

சிந்தையதை வெளிச்சொல பகல்கனவு என்பரே
சந்தையில அவர்இடம் நம்சிந்தை கூவிட
மந்தையென மானுடம் திரியவே சிந்தையெழு
முந்தையன திரித்திடும் புரட்சியென புகுந்தெழு

- சரவணபெருமாள்

 ("நதியோர நாணல்கள்" முகநூல் குழுமத்தின் "சிந்தனையில் ஓர் புரட்சி" தலைப்பில் நடந்த புதுக்கவி தாங்கிய புரட்சிகவி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது)

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...