பூமித்தாய்
அதிசயம்
உலக அதிசயம்
அல்ல
உலகமே ஒரு அதிசயம்
உலக உயிரெல்லாம் தத்தெடுத்துவிட்ட
பூமித்தாய் ஒரு அதிசயம்
யாம் வேர்வைத்துளியால்
வயலை நனைக்கும்போது
நெல்மணிகளால்
எம் வயிற்றை
நிரப்புகிறாள்
எம் தாகம்
தீர்க்கும் தண்ணீர்
எல்லாம்
நிலத்தடி மார்பில்
சுரக்கிறாள்
விதைகளை கருவாய் சுமக்கிறாள்
விவசாயி பிரசவம்
பார்க்க,
செடிகளாய் பிரசவிக்கிறாள்
பெண்களின் கூந்தலுக்கேதடா மணம்
அவள் பிரசவித்த
பூச்செடிகளின் பூவாசம்தான் அது
நிலக்கரி தங்க
வளமெல்லாம்
அவளது
நிலத்தடி வங்கிக்கணக்கில்
சேமித்து வைத்தவர்
எவரோ
பகலில் சூரியன்
அவளது வாக்கை
சேகரிக்க
மின் தேவையற்ற
மின்விளக்கை
இலவசமாய் வழங்கிய
அரசாங்கம் எதுவோ
இரவில் விளக்கேற்ற
நிலவை
மருமகளாய் அழைத்து வந்தபோது
அழைப்பிதழ் வழங்காதது
சற்றே மனவருத்தம்
தினமும் கார்த்திகைப் பண்டிகைதானா
இரவில்
வானவெளியில் ஏற்றி
வைத்த
நட்சத்திர தீபங்கள் எத்தனையோ
எம் பாதங்கள்
மெல்ல நடந்து
முத்தமிட்டாலும்,
ஓடும்போது எட்டி
உதைத்தாலும்
எம்மை வீழ்த்திவிடவில்லை
கண்ணீர் என்றாலே
உப்புச் சுவைதான்
அவள் சிந்தும்
ஆனந்த (மழை) கண்ணீரைத்தவிர
அது விவசாயத்தின் உயிர்த்துளியாய்
அவளில் ஆனந்த
தாண்டவம்
ஆயுள்காலத்தின்
அழகான அனுபவம்
நடக்கப்பழகிய போது
தடுமாறிட
தரையில் தாங்கினாலே
தரணிவிட்டு
தள்ளிடவில்லை
அரவணைத்த அவள்
சினம் கொண்டால்
தணிக்கத்திடப் பழகிடவில்லை
சற்றே அசைய
உருக்குலைந்து போகிறது உலகம்
சுனாமியால் சுருட்டிவிடுகிறாள்
நிலநடுக்கத்தால் நசுக்கி
விடுகிறாள்
வறட்சியால் பட்டினி
போடுகிறாள்
புயலால் புரட்டிப் போடுகிறாள்
ஆனாலும் எம் பூமித்தாய்
அடித்தாலும் அணைத்துக்கொள்கிறாள்
-
Written By
சரவணபெருமாள்
No comments:
Post a Comment