நடை போடு!
நடை போடு!
பாதைகள் அடைந்தாலும்
திசைகள் திறந்தே இருக்கும்
நடை போடு!
கல் எது? முள் எது?
பார்த்து நடை போடு!
முள்ளை
முறித்துப்போடத் தேவையில்லை
ஓரமாய் எடுத்துப்போட்டு
நடை போடு!
கால்கள் நடக்கும் முன்னே
கண்களை நடக்க விட்டு
நடை போடு!
தாண்ட வேண்டிய இடமும்
நீந்த வேண்டிய இடமும்
கண்ணே வழிகாட்டும்
நடை போடு!
பகல் மங்கி
இருள் சூழ்ந்த பாதையிலும்
பயமின்றி நடை போடு!
கல்லைத்தட்டிய தீப்பொறியால்
கண்டெடுத்த குச்சியில்
விளக்கேற்றி நடைபோடு!
நடந்தால் தாமதம் என்று
சலிக்காமல் நடைபோடு!
ஓடும் முயலை
நடக்கும் ஆமை
வென்றதுண்டு!
நீரின் வேகம் குறைய
நடக்கப்பழகிய
நதியும் உண்டு!
நடை போடு!
கைகளை வீசி நடை போடு!
வெறுங்கை வீசாது
விதைகள் சில அள்ளி
வீசிக்கொண்டே நடை போடு! - உன்
வெற்றிப்பாதை
வெயில் பாதை
நிழல் பாதை ஆகட்டும்
நடை போடு!
ஏசும் பேச்சு
செவியைத்தாக்கும்!
கவலையில்லை!
வீசும் கைகள்
முதுகைத்தாக்கும்!
கவனமாய் நடை போடு!
களைப்படைந்தால்
இளைப்பாறி
நடை போடு!
முயற்சியும் உழைப்பும்
இளைப்பாற விடாமல்
நடை போடு!
பார்த்துக்கொண்டே நடை போடு !
நடைகண்டு சிரித்த முகமெல்லாம்
பார்த்துக்கொண்டே நடை போடு!
வெற்றியுடன் திரும்பி
சிரித்த முகறைக்கட்டையெல்லாம்
தலைகவிழ வேண்டுமென்று
நினைத்துக்கொண்டே நடை போடு!
இலக்கை அடையும் முன்
தாழ்வாய் நினைக்காமல்
நடை போடு!
வென்ற பின்னும்
பெருமைகள் பேசாமல்
இருந்து விடு!
நடைபோட்டு நடைபோட்டு
வந்த பாதை
மறவாமல் நினைத்திருந்து
அசை போடு!
பாதைதேடி வந்தோரையெல்லாம்
சலிக்காமல்
கை நீட்டித் தூக்கி விடு!
- Written by
சரவணபெருமாள்
No comments:
Post a Comment