Monday, August 28, 2017

கவிதை பேசுகிறது!

கவிதை பேசுகிறது!



கவிதை பேசுகிறது!
கவிதை மட்டுமா பேசுகிறது?!
கவிதை எழுத
கருத்துக்கள் தேடி ஓடிய
கவிஞனின் தேடலும் தான்
கவிதை பேசுகிறது!

கற்பனை மட்டுமா
கவிதை பேசுகிறது?!
கனவிலும் கடந்துபோகாத
நினைவுகளும் தான்
கவிதை பேசுகிறது!

கையெழுத்து மட்டுமா
கவிதை பேசுகிறது?!
பேனா பிடிக்கத்தெரியா கண்மணி
காகிதத்தில் கிறுக்கிய
கோடுகளும்தான்
கவிதை பேசுகிறது!

கவிஞன் பாடிய
கவி மட்டுமா
கவிதை பேசுகிறது?!
"ம்மா! ம்மா! ண்ணீ! ண்ணீ!" என்றே
தண்ணீர் கேட்கும்
மழலைச்சொல்லும்
கவிதை பேசுகிறது!

புலவன் பிடித்த
எழுத்தாணி மட்டுமா
கவிதை பேசுகிறது?!
காலடி பட்ட கல்லை
கருவறையில் விட்டவனின்
உளியும்
உளிச்சத்தமும்
கவிதை பேசுகிறது!

புலவன் முடித்த
ஓலைச்சுவடி மட்டுமா
கவிதை பேசுகிறது?!
பேசும் படம் வரையும்
தூரிகை நுனியும்
கவிதை பேசுகிறது!

பிரம்மன் படைத்த
பெண்ணின் அழகு மட்டுமா
கவிதை பேசுகிறது?!
தோல் சுருங்கியபோதும்
மனம் சுருங்கா
அன்புப்பெண்ணில்
கவிதை பேசுகிறது!

செவிமடல் நனைக்கும்
இன்னிசை மழை மட்டுமா
கவிதை பேசுகிறது?!
"கைவீசம்மா கைவீசு" பாடும்
மழலை மழையும் 
கவிதை பேசுகிறது!

கன்னிப்பெண்ணின்
கருவிழி மட்டுமா
கவிதை பேசுகிறது?!
காலம் கடந்த முதிர்கன்னியின்
சோகக்கதையும்
கவிதை பேசுகிறது!

காதலன் கொண்டு வந்த
ரோஜாப்பூ மட்டுமா
கவிதை பேசுகிறது?!
அவளிடம் கொடுப்பதற்குள்
ஆண்களுக்கே வரும் வெட்கமும்
நடுங்கும் கைகளின் தவிப்பும் கூட
கவிதை பேசுகிறது!

பிரிவின் வலியில்
பிரியா நினைவு மட்டுமா
கவிதை பேசுகிறது?!
தவிப்பில் திளைத்தவனை
தழுவிய தனிமையும் கூட
கவிதை பேசுகிறது!

பேசுகிறது! பேசுகிறது!
கவிதை பேசுகிறது!
சுமைதாங்கி கல்லும்
தோற்றே போனதென்று
கருசுமந்த பெண்மையின் முன்னே
கவிதை பேசுகிறது!

                                                     - Written By,
                                                       சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...