ஆண் மனதும் ஆழமடி
காயம்படுமோ பனித்துளி!
தாங்கிப்பிடிக்கிறது
புல் நுனி!
பனித்துளி நீயென்றே
புல் நுனி நான் ஆவேன்!
பூவில் ஒளிந்த
தேன்துளி நீயென்றே,
பூவோடு பூச்செடியின்
வேலியாய் முள் ஆவேன்!
சோகம் வேண்டாமடி
தனியாய் நீ நடந்தால்,
தூரத்து துணையாய்த் தொடரும்
நிலவாய் நான் ஆவேன்!
கரைபோட்டு நீ இருந்தால்
கரைசேராக் கடல் நீரல்ல;
கரை தழுவும் கடலலை
நான் ஆவேன்!
யாரும் இல்லையென்றே
ஒருபோதும் நினைக்காதே
உன்னருகேயும் உள்ளேயும்
சுற்றிவரும் காற்றாவேன்!
பெண்ணின் மனம் ஆழம் என்றவர்
ஆணின் மனம் அளந்தாரோ?
ஆயிரம் எண்ணங்கள் புதைந்துகிடக்கும்
ஆண் மனதும் ஆழமடி!
யார் வந்தால் என்ன?
போனால் என்ன?
உனக்காக நான் இருப்பேன்!
ஆழத்தில் வைத்தே காத்திருப்பேன்!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment