Thursday, August 10, 2017

இப்படிக்கு நீதி தேவதை

இப்படிக்கு நீதி தேவதை







நானே நீதி தேவதை
நீதி வழங்க முடியா தேவதை
ஐம்பதில் பிறந்தை
அறுபத்தேழு வயதை
அதிகார மமதை
ஆட்டுகிறது எமதை

என்ன செய்திட முடியும்
எழுதப்பட்ட சட்டம்
ஏழையின் தவறிலே
கடமையை காப்பாற்றுகிறது
எஜமானன் தவறிலே
கைகட்டி கவிழ்கிறது

என் கண்களை
கட்டியது நியாயமா
தராசு முள்
சாயுந்திசை தெரிந்தில
பசிக்கு பன் திருடியனா
ருசிக்கு பணம் திருடியனா
ஆய்ந்திட விழியில

திருட்டுப்பிள்ளாய்
உனக்கோர் நற்செய்தி
வாய்ப்புக்கான ஜாமீன்
ஏய்ப்புக்காகிப்போனது
ஐம்பது திருடினால்
நீதி நிலைநாட்டப்படும்
கோடிகள் திருடினால்
ஜாமீன் வழங்கப்படும்
நீயே முடிவெடு
எதைத்திருடலாம் என்று

அதிபுத்திசாலிகள்
சட்ட நுணுக்கம் தெரிந்த
கொலையாளிகள்
தானே செய்தால் கொலைக்களம்
நாலோர் செய்தால் கலவரம்
தண்டனை நினைந்த பயமில
ஜாமீன் உள்ள தைரியமே

சட்டப்படி தவறிழை
தவறில்லையடா
அதிவேகம் ஆபத்துதான்
குடித்தால் விபத்துதான்
சில விபத்து கொலைதான்
நடந்தால் என்ன
உயிரிழந்தால் என்ன
பெரிதாய் பயமில்லை
அபராதம் போதுமடா

யாரம்மா நீ
விபத்து மரணமா
மகன் மாண்டானா
மன்னியுமம்மா
சற்றே சட்டச்சிக்கல்
இருபது ஆனால் என்ன
அறுபது ஆனால் என்ன
இழப்பீடு உண்டு
இறவாமல் நீ இருந்தால்

நீ யார்
விவசாயி போராட்டமா
சட்டப்படி அனுமதி வாங்காய்
சிறையடி வெகுமதி கொள்வாய்
தவறை தட்டிக்கேளாதே
சட்டம் கடமையைச்செய்து முடிக்கும்

முடியாட்சி ஒழித்து
குடியாட்சி பிறந்ததடா
மக்கள் பிரதிநிதி
மக்களாட்சி ஆனதடா
மாற்றமே மாறாதது
மானுடத்திற்கே உரித்தானது
மன்னராட்சி போலாகி
தன்னாட்சி நடக்குதடா
தன்முடிவே குடிமுடிவென
தன்னாட்சி நடக்குதடா

படிப்பொரு முதன்மை கொண்டு
எப்பணிக்கும் தகுதி உண்டு
அக்காலத்து முடிவு கொண்டு
இக்காலத்தும் அரசியல் விலக்குண்டு
படிப்பறிவு இருண்டு
அனுபவத்தும் சுருண்டு
வாக்குண்டு பதவிகண்டு
வாக்களிப்பில் தவறுண்டு
ஜனாதிபதி தேர்தலில்
செல்லாத ஓட்டுகள்

கண்மூடிய போதும்
கடமை தூங்கிரா
காக்கிச்சட்டையும் உண்டு
விதிமீறா போதும்
வழிமறிக்கும் 
வசூல்காக்கியும் உண்டு
ஆங்காங்கே உண்டு
ஒன்றிரண்டு இதுபோல
ஒரு சோற்றுப்பருக்கை
ஒரு பானைச்சோறையும்
குறைகொண்டது

சாதி இல்லை என
விளம்பரமும் செய்வார்
சாதி ஒதுக்கீடு கேட்டு 
விழித்தெழவும் செய்வார்
இரண்டும் 
சட்டப்படி சரிதான்
எதில் நான் துணை நிற்க
சந்தேகம் அதில்தான்

தவறிழைத்து தடம்பிரண்டார்க்கு
பணிநீக்கம் சரியா
இடமாற்றம் சரியா
இடமாற்றம் தண்டனையா
இடமாறிச்செல்லும் தவறா

எழுதப்பட்ட சட்டப்புத்தகம்
ஏறத்தாழ காலாவதி
ஐம்பதிற்கு சரிதான்
அறுபது முடிந்து தேவையா
மாற்றம் வேண்டாமா
மாற்றிட வேண்டாமா

கண்கட்டு போதும்
அவிழ்த்திடுங்கள்
காந்தாரி அல்ல
கண்கட்டி வாழ
நிஜம் எது
பொய் எது
நான் பார்க்க வேண்டும்
நீதி எது
அநீதி எது
தீர்ப்புரைக்க வேண்டும்

இப்படிக்கு
நீதி தேவதை


                                                       - Written by,
                                                          சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...