பேச்சு வந்த ஊமைக்காதல்!
மண் போன்ற மனம்
மலரைத்தொட நேர்ந்தால்
ஏதோ ஒன்று நடந்துள்ளது!
தலை நிமிர்ந்த நடை ஒன்று
தயங்கி நின்றால்
ஏதோ ஒன்று நடந்துள்ளது!
பாதையை முத்தமிடும்
காலின் கொலுசொலிகள்
தேவதை வந்ததை
அறிவிக்கின்றன!
பேசப்பழகிய
விழியின் அசைவுகள்
ஆணின் வெட்கத்தை
அழைக்கின்றன!
அள்ளிப்போட்ட துப்பட்டா மேலே
நெசவில் முளைத்த பூத்தோட்டம்!
உன்மேல் போட்டதும் பூத்ததடி!
கருப்பும் ஒரு கண்ணாடியே!
கருவிழியும்
முகம் காட்டுதடி!
கண்பட்டுப்போய் விடுமா?
கண்பட்டை நெளிவில்
கரு மை தீட்டியது
புத்திசாலித்தனம்!
காற்றின் அறிகுறி
வழியும் கூந்தலின்
மெல்லசைவில்!
என் இதயத்துடிப்புக்குப் போட்டியாய்
உன் இமைத்துடிப்பு வரிந்து நிற்கிறது!
மூக்கைத்தொட்ட அதிர்ஷ்டம்
மூக்குத்திக்கு!
மூச்சுக்காற்றின் அதிர்ஷ்டம்
மூக்கின் வழி
உனக்குள்ளேயே நுழைகிறது!
இருவர்
சேர்ந்தாலும் அழகு!
பிரிந்தாலும் அழகு!
அசைந்தாலும் அழகு!
நெளிந்தாலும் அழகு!
இரட்டையர் பெருமை வாய்த்த
உதடுகள்!
இம்சை செய்யும் உதடுகள்!
சிரித்திடு பெண்ணே!
பற்களை ரகசியமாய்
உதட்டில் ஒளிப்பது ஏன்?
சிரி!
முத்தேதும் உதிர்ந்திடாது!
தாவணிப்பெண்ணே!
இடையைச்சொருகு!
ஆடை தொடாத மிச்சத்தின் வழியே
ஆதவன் விழி தொட்டால்
மெல்லிடை கருத்துப்போகும்!
இப்படியான
கவிதைகள் மட்டும்தான்
உன் விருப்பமா?
எழுதப்பட்ட காதல் கவிதையே
உன்னிடம் வெற்றிபெற்றது!
பேச்சு வந்த
என் ஊமைக்காதல்
தோற்று நின்றது!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment