Saturday, July 1, 2017

மதுவாகிய நான்.....

மதுவாகிய நான்......


யார் அங்கே?
மார்தட்டிச் சொல்வேன்
மதுவாகிய நான்,
மாபெரும் இரட்சகன்

ஏய்! மானிடா!
என்னை வாயில் சிந்தும்
உன்னை
உலகத்திற்கே ராஜாவாய் சித்தரிப்பேன்
குடும்பமே கண்ணீர் சிந்தும்
ஆனாலும் மாறிவிடாதே

கடந்த கால கடிகாரம், நானே!
வா! வா!
என்னை அருந்து!
ஆடை அவிழ்த்து
அம்மணம் ஆக்கி
ஆதி காலத்திற்கே அழைத்துச்செல்கிறேன்
பயப்படாதே!
ஒருநாள் சலுகைதான்
மறுநாள் நிகழ்காலத்தில் விடுகிறேன்

வாகன ஓட்டியே!
என்னைக்குடி!
விமான ஓட்டியாய் மாற்றுகிறேன்
சாலையே ஓடுதளம்;
பறக்க விடு!
முன் செல்வோனும்
எதிர் வருவோனும்
நம் சொந்தமா? பந்தமா?
நம்மில் முட்டிச்சாகட்டும்

மரணம் சம்பவம்
வீரமரணம் சரித்திரம்
என்னை அருந்து!

கிளப்பு இருசக்கர விமானத்தை!
பேருந்தோ லாரியோ
மரமோ மின்கம்பமோ
காத்திருக்கிறது உனக்காக
வீரமரணம் நிச்சயம்

அடுத்த நொடி நிச்சயமில்லை
அனுபவி உன் வாழ்வை!
இல்லத்தை 
பட்டினி போட்டும்
கிண்ணத்தில்
என்னை வாங்கு
உற்சாகத்தை பரிசளிக்கிறேன்
விலை அதிகம்தான்
மாண்டால்
அவிழும் தாலிக்கொடியை
மனமகிழ் மதுவிற்கு
அவிழ்த்தால் என்ன?

என்னை 
உன்னுடன் கூட்டிச்செல்
சாக்கடையில் வீழ்வாய்
சேறு பூசிய வேடமணிவாய்
ஆடைகளும் களைவாய்
நடனங்களும் புரிவாய்
மிரட்டுவாய் அரற்றுவாய்
மறுகணமே புன்னகை பூப்பாய்
அழுவாய் சிரிப்பாய்
ஊரும் சிரிக்கும்
உறவும் சிரிக்கும்
நீ மாபெரும் கலைஞன்
ஏனென்றால்,
மற்றோரை சிரிப்பிப்போன் கலைஞன்

மரணமே
மானுட விடுதலை
மரணம் செய்கிறேன்;
என்னை வாய்க்கொள்!
தொண்டைக்குழி அரியும்
குரல்ஒலி சரியும்
கல்லீரல் கசடாகும்
மண்ணீரல் மயக்கமாகும்
சிறுநீரகம் ஓய்வெடுக்கும்
இதயம் இளைப்பாறும்
கோபம் சோகம் அதிர்ச்சி
இரத்தக்கொதிப்பு
மூச்சு அடையும்
ஆம்!
இதுவே மரணத்திட்டம்
நானே உன் ஆயுதம்
போரிடு!
உன் மானுட விடுதலைக்காக!
உன் மரணத்திற்காக!

                                               -Written By,
                                                 சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...