அவமானமாய் குப்பையோரம்
எச்சில் தட்டு
கழுவப்பட்டு
மறுபந்தி போனது
எச்சில் சோறு வீசப்பட்டு
குப்பைத்தொட்டி
வந்தது
அணியா உறையால்
பிறந்து
அணியப்பட்டதன்
நடுவே கிடந்தேன்
சிறுநீரும் வாசம்
அசுத்தமும் அழகு
நான் அசிங்கம்
காதல் பரிசு நானல்ல,
திருமணமே!
திருமணக்காதல்
முறிந்தாலும்
வீதிக்கு வருவதும்
என் இனமே!
சோறு கண்டால் சொர்க்கம்
சோற்றுக்குள்ளே
நானிருக்க
உடலோடு சோறு ஒட்ட
சோற்றோடு நாய்
கவ்வியது
பசி வந்தால்
பத்தும் போகுமே!
கருவிற்கும் உயிருண்டு
– சதைப்
பிண்டத்திலும்
துடிப்புண்டு
முறுக்கில் துடித்து
முறையற்ற கரு வேண்டாம்
கருக்கலைப்பும்
சிசுக்கொலையே!
வரம் வேண்டும்
இறைவா!
ஆண்-பெண் கழிவாய்
கர்ப்பத்தில் கொட்டி
கழிவுநீர்த்தொட்டி
நான் போக வேண்டாம்
தாய்-தந்தை பட்டம்பெறா
தாயவள் கருவறையில்
புழுப்பூச்சாய்
நான் வீழ வேண்டும்
தாயென்ற அடையாளமும்
அவசரத்தால் அவமானமானது
பத்துமாத சுமைதாங்கி
வீதியில் இறக்கி
வைத்தது
பத்தோடு பதினொன்றாய்
காப்பகம் சுமந்து
கொண்டது
காலமே ஓடட்டும்
மழலைச்சொல்
சத்தமாய் ஒலித்தது,
“எங்கம்மா சாமிக்கிட்ட
போய்ட்டாங்க….!”
காலமே விரையட்டும்
வாலிபக்குரல்
வாய்க்குள்ளே முணிக்கிறது,
“அம்மா நீ எங்கருக்க…??”
கண்ணோரத்திலும்
காட்டாறு ஓடும்,
“அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா….!!!!”
-
Written
By,
சரவணபெருமாள்
No comments:
Post a Comment