Sunday, July 30, 2017

பேச்சு வந்த ஊமைக்காதல்

பேச்சு வந்த ஊமைக்காதல்!


மண் போன்ற  மனம்
மலரைத்தொட நேர்ந்தால்
ஏதோ ஒன்று நடந்துள்ளது!
தலை நிமிர்ந்த நடை ஒன்று
தயங்கி நின்றால்
ஏதோ ஒன்று நடந்துள்ளது!

பாதையை முத்தமிடும்
காலின் கொலுசொலிகள்
தேவதை வந்ததை
அறிவிக்கின்றன!
பேசப்பழகிய 
விழியின் அசைவுகள்
ஆணின் வெட்கத்தை
அழைக்கின்றன!

அள்ளிப்போட்ட துப்பட்டா மேலே
நெசவில் முளைத்த பூத்தோட்டம்!
உன்மேல் போட்டதும் பூத்ததடி!
கருப்பும் ஒரு கண்ணாடியே!
கருவிழியும்
முகம் காட்டுதடி!

கண்பட்டுப்போய் விடுமா?
கண்பட்டை நெளிவில்
கரு மை தீட்டியது
புத்திசாலித்தனம்!
காற்றின் அறிகுறி
வழியும் கூந்தலின்
மெல்லசைவில்!

என் இதயத்துடிப்புக்குப் போட்டியாய்
உன் இமைத்துடிப்பு வரிந்து நிற்கிறது!

மூக்கைத்தொட்ட  அதிர்ஷ்டம் 
மூக்குத்திக்கு!
மூச்சுக்காற்றின் அதிர்ஷ்டம்
மூக்கின் வழி
உனக்குள்ளேயே நுழைகிறது!

இருவர் 
சேர்ந்தாலும் அழகு!
பிரிந்தாலும் அழகு!
அசைந்தாலும் அழகு!
நெளிந்தாலும் அழகு!
இரட்டையர் பெருமை வாய்த்த
உதடுகள்!
இம்சை செய்யும் உதடுகள்!

சிரித்திடு பெண்ணே!
பற்களை ரகசியமாய்
உதட்டில் ஒளிப்பது ஏன்?
சிரி!
முத்தேதும் உதிர்ந்திடாது!

தாவணிப்பெண்ணே!
இடையைச்சொருகு!
ஆடை தொடாத மிச்சத்தின் வழியே
ஆதவன் விழி தொட்டால்
மெல்லிடை கருத்துப்போகும்!

இப்படியான
கவிதைகள் மட்டும்தான்
உன் விருப்பமா?
எழுதப்பட்ட காதல் கவிதையே
உன்னிடம் வெற்றிபெற்றது!
பேச்சு வந்த 
என் ஊமைக்காதல்
தோற்று நின்றது!

- சரவணபெருமாள்

Sunday, July 23, 2017

புலிவாலைப்பிடித்தேன்

புலிவாலைப்பிடித்தேன்



தந்தாரும் வந்தாரே!
தடுப்பாரும் வந்தாரே!
சோறு தந்து
ஆடை தந்து
ஆரம்பப்பள்ளி தந்தாரும் வந்தாரே!
ஆதார் கேட்டு
சோறு தடுத்து
காயவிட்டாரும் வந்தாரே!

பள்ளிப் பிள்ளைக்கு
பயண அட்டை
இலவசம் என்றாரே!
பள்ளிச்சீருடை பார்த்தாலே
நிறுத்தாப்பேருந்தை
வேடிக்கையும் பார்த்தாரே!

ஒத்தக்கருத்தும்
ஒருங்கிணைப்பும்
கட்சிக்குள்ளே வளர்ப்பார்
ஒற்றுமையே வலிமையாம்
சாதிமதமும்
சமய உணர்வும்
நாட்டுக்குள்ளே வளர்ப்பார்
ஓட்டு வங்கியாம்

ஆயிரத்தில்
ஆசை வைத்து
கை விரலில் மையை வைத்தேன்
ஆயிரம்
வட்டிமேலே வட்டிபோட்டு
ஜிஎஸ்டி கட்ட நேர்ந்தேன்

நதிகளை இணைக்க
பாடாய் படும் விவசாயிகள்
அணிகளை இணைக்க
பாடுபடும் அரசியல்வாதிகள்

பூனையை விட்டு
புலிவாலைப் பிடித்தேன்
இலங்கைத்தமிழன் அழித்தானை
இறக்க நினைத்து
இந்தியத்தமிழன் அழிப்பானை
ஏற்றிவிட்டோமடா,
இறைவா!

விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்
தெருத்தெருவாய் கூவினாரே!
விவசாயம் பார்க்கோம்
விவசாயி பார்க்கோமென
நடுத்தெருவில் வீட்டினாரே!

விவசாயக்கடன் பேட்டி தந்தான்
வாங்குவதற்குள் உயிர் இல்லை
கடன் வாங்கியும் பயிர் போட்டால்
செடி முளைக்க மழை இல்லை
மழை இறங்கி மண் வந்தால்
வடிந்து செல்ல வாய்க்கால் இல்லை
தானாய் பாதைகண்டு பயணித்த நீரும்
தேங்கி நிற்க கண்மாய் இல்லை

கூடுதலும் குறைதலும்
ஆழப்படுத்தலில்
கிரானைட் குவாரியும்
மீத்தேன் குழியும்
கூடுமப்பா ஆழம்
கண்மாய் பள்ளமும்
குளத்துக்குழியும்
குறையுமப்பா ஆழம்

உழுதுண்டு வாழ்ந்தானை
தொழுதுண்டு வாழ்ந்தானப்போ!
தொழுதுண்டு தொழுதுண்டு
மெய்வளர்த்து உயிர்வளர்த்து
அழுதுண்டு அழுதுண்டு
கால்பிடித்து ஆசனம்பிடித்து
உழுதுண்டு வாழ்ந்தானை
தொழுதுண்டு வாழவிட்டானப்போ!

கோடிகள் கொண்டானை
குடைய முடியாது
எந்திரக்கலப்பை எடுத்தானை
கடன்கேட்டு அடித்ததே
வங்கித்துறை வெற்றி

மானைக்காத்தார்
மாட்டைக்காத்தார்
மனிதனை மறந்தார்
வீட்டைக்காத்தார்
கோட்டை காத்தார்
விவசாயம் மறந்தார்

பாலைவனத்தை
பசுமையாக்கத்தோற்று
பசும்பூமி தஞ்சை
பாலைவனச்சோலையாக
பாடுபடும்
ஹைட்ரோகார்பன்
ஒரு அறிவியல் பிழை
விளைநிலத்தில் திணித்தது
ஒரு ஆட்சிப்பிழை

நாச்சுவற்றுள் யோசித்து
நள்ளிரவில் சட்டம் போட்டாருக்கு
நாற்றிசையில் வாழ்வாரின்
நட்டம் எப்படித்தெரியும்?

வயதாகிலும்
எம் தலைவர்
உலகம் சுற்றும் வாலிபன்
வெளிநாட்டுப் பயணங்களில்
சுற்றுலாத்துறையின்
இளமை ஊஞ்சலாடுகிறது

                             - Written By,

                             சரவணபெருமாள்

Thursday, July 20, 2017

வேடம் கட்டியோன் தலைவனாகிறான்; வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்

வேடம் கட்டியோன் தலைவனாகிறான்; 
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான்







சாதிகள் இல்லையடி பாப்பா
பாரதி பாட்டு பலகையில்;
பலகை எழுதி வைத்த
பள்ளிக்கூட பெயரோ சாதியில்

எம்மதமும் சம்மதம்
ஏட்டிலே எழுதி வைத்தார்;
எம்மதம் எஞ்சாதி கேட்டு
பதிவேட்டிலும் எழுதிக்கொண்டார்

ஏறிய மேடையெல்லாம்
சாதி இல்லை என்கிறார்;
ஏறாத வாசல் ஏறி
சாதி ஓட்டுக்கலைகிறார்

மக்களைக் கூட்டிவைத்து
மதம்சாரா மன்றம் என்கிறார்;
மக்கள் கலைந்தபின்னே
மதவாத கூட்டணி அமைக்கிறார்

சாதி ஒழிக்கத் துடித்தவரை
சாதி அமைப்பில் முடக்குவார்;
பார் போற்றிய அவர்புகழை
சாதி பெயரில் அடக்குவார்

சமத்துவத்தை வலியுறுத்தி
மனிதசங்கிலியும் தொடங்குவார்;
சமுதாயத்திற்கு இடம் ஒதுக்கீட
போராட்டங்களும் நடத்துவார்

அரசுப்பணி என்றே
போட்டித்தேர்வு வைத்திடுவார்;
இடஒதுக்கல் என்றே
சாதித்தேர்வாய் முடித்திடுவார்

இருண்டால் ஒன்று;
விடிந்தால் ஒன்று
வேடம் கட்டியோன் தலைவனாகிறான்;
வேடிக்கை பார்ப்போன் மேடையாகிறான் 

                                     -Written By,
                                       சரவணபெருமாள்

Wednesday, July 12, 2017

அதனால்தான் பயமாய் இருக்கிறது!

அதனால்தான் பயமாய் இருக்கிறது! 





இனிவரும் காலம் என்னவோ?
பயமாய் இருக்கிறது!

போட்டிகள் வரலாம்
பெட்ரோல் விற்பனை நிலையத்தோடு
தண்ணீர் விற்பனை நிலையம் 
போட்டியாய் வரலாம்

பணம் சம்பாதிக்கலாம்
விவசாய விளைநிலத்தை
விற்பனை விலைநிலமாக்கி
பஞ்சத்தையும் சம்பாதிக்கலாம்

வசதியாய் வாழலாம்
கம்மங்கதிர் முளைத்த காட்டில்
கட்டிடங்கள் முளைத்து
பசியோடும் வாழலாம்

டிஜிட்டலாய் மாறலாம்
பருப்பும் அரிசியும் போட்டகடை
பணத்தை கணக்கில் போட்டு
பசியையே தீர்த்ததாய் நினைக்கலாம்

மெத்தனங்கள் போகலாம்
வாய்புசி தண்ணீரில் வாராஅக்கறை
கைபேசி கட்டணத்தில்
சிக்கனம் ஆகலாம்

போக்குவரத்து முன்னேறலாம்
ஆளுக்கொரு இருசக்கர
வீட்டுக்கிரு நாசக்கர வாகனபந்தா
மாசுபட்ட காற்றாய் முன்னேறலாம்

தமிழ்பண்பாடு வளரலாம்
கட்டுக்கடங்கா காளையை
கையடக்க கைபேசியில் அடக்கி
வீரத்தை நிலைநாட்டலாம்

குற்றவாளிகள் கூடலாம்
ஓடியாடி விளையாடா சிறுவர்
ஓரிடத்தில் விளையாடி
கணிப்பொறியிடம் கைதியாகலாம்

சட்டங்களை மதிக்கலாம்
தடியெடுத்தவன் தண்டல்காரன்
பிடிபட்டவன் குற்றவாளி
எழுதப்பட்டது தீர்ப்பாகலாம்

நீதிகள் கிடைக்கலாம்
நித்தம் நித்தம் அலைந்து
நீதி  கேட்டவன் செத்தபின்
நீதிகள் கிடைக்கலாம்

புதியன புகலாம்
விவசாய திட்ட நுட்பத்தினும்
மதுக்கடை திறநுட்பத்தில்
புதுத்திட்டம் புகலாம்

உடற்பயிற்சி செய்யலாம்
தினமொன்றில் ஆதாரை
திடீரென இணைத்திட
நடைபயிற்சி செய்யலாம்

தேசக்கடன் அடைக்கலாம்
உழைத்து சம்பாதித்த பணம்
வரியாக வழங்கி
நிதிச்சுமை குறைக்கலாம்

கடன் தள்ளுபடியாகலாம்
கார்ப்பரேட் கடன் மெல்ல குறைத்து
விவசாய கடன் கழுத்தை நெறித்து
உயிரும் தள்ளுபடியாகலாம்

மரணம் வரலாம்
விவசாயி மாண்டு விவசாயம் மாண்டு
பஞ்சத்தில் வந்த பசியில்
எனக்கும் மரணம் வரலாம்

அதனால்தான்,
பயமாய் இருக்கிறது!

                 - Written By,

                   சரவணபெருமாள்

Tuesday, July 4, 2017

தற்கொலை

தற்கொலை

 
















வாழ்க்கையே ஒரு நாடகம்
எனக்குமே ஒரு வேடம்
நாடகம் முடியும் முன்னே
நானே களைக்க முயற்சிக்கிறேன்,
தற்கொலை

     - Written By,

       சரவணபெருமாள்

Saturday, July 1, 2017

மதுவாகிய நான்.....

மதுவாகிய நான்......


யார் அங்கே?
மார்தட்டிச் சொல்வேன்
மதுவாகிய நான்,
மாபெரும் இரட்சகன்

ஏய்! மானிடா!
என்னை வாயில் சிந்தும்
உன்னை
உலகத்திற்கே ராஜாவாய் சித்தரிப்பேன்
குடும்பமே கண்ணீர் சிந்தும்
ஆனாலும் மாறிவிடாதே

கடந்த கால கடிகாரம், நானே!
வா! வா!
என்னை அருந்து!
ஆடை அவிழ்த்து
அம்மணம் ஆக்கி
ஆதி காலத்திற்கே அழைத்துச்செல்கிறேன்
பயப்படாதே!
ஒருநாள் சலுகைதான்
மறுநாள் நிகழ்காலத்தில் விடுகிறேன்

வாகன ஓட்டியே!
என்னைக்குடி!
விமான ஓட்டியாய் மாற்றுகிறேன்
சாலையே ஓடுதளம்;
பறக்க விடு!
முன் செல்வோனும்
எதிர் வருவோனும்
நம் சொந்தமா? பந்தமா?
நம்மில் முட்டிச்சாகட்டும்

மரணம் சம்பவம்
வீரமரணம் சரித்திரம்
என்னை அருந்து!

கிளப்பு இருசக்கர விமானத்தை!
பேருந்தோ லாரியோ
மரமோ மின்கம்பமோ
காத்திருக்கிறது உனக்காக
வீரமரணம் நிச்சயம்

அடுத்த நொடி நிச்சயமில்லை
அனுபவி உன் வாழ்வை!
இல்லத்தை 
பட்டினி போட்டும்
கிண்ணத்தில்
என்னை வாங்கு
உற்சாகத்தை பரிசளிக்கிறேன்
விலை அதிகம்தான்
மாண்டால்
அவிழும் தாலிக்கொடியை
மனமகிழ் மதுவிற்கு
அவிழ்த்தால் என்ன?

என்னை 
உன்னுடன் கூட்டிச்செல்
சாக்கடையில் வீழ்வாய்
சேறு பூசிய வேடமணிவாய்
ஆடைகளும் களைவாய்
நடனங்களும் புரிவாய்
மிரட்டுவாய் அரற்றுவாய்
மறுகணமே புன்னகை பூப்பாய்
அழுவாய் சிரிப்பாய்
ஊரும் சிரிக்கும்
உறவும் சிரிக்கும்
நீ மாபெரும் கலைஞன்
ஏனென்றால்,
மற்றோரை சிரிப்பிப்போன் கலைஞன்

மரணமே
மானுட விடுதலை
மரணம் செய்கிறேன்;
என்னை வாய்க்கொள்!
தொண்டைக்குழி அரியும்
குரல்ஒலி சரியும்
கல்லீரல் கசடாகும்
மண்ணீரல் மயக்கமாகும்
சிறுநீரகம் ஓய்வெடுக்கும்
இதயம் இளைப்பாறும்
கோபம் சோகம் அதிர்ச்சி
இரத்தக்கொதிப்பு
மூச்சு அடையும்
ஆம்!
இதுவே மரணத்திட்டம்
நானே உன் ஆயுதம்
போரிடு!
உன் மானுட விடுதலைக்காக!
உன் மரணத்திற்காக!

                                               -Written By,
                                                 சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...