Monday, April 24, 2017

வலிய விதியடா!

வலிய விதியடா!




புதைத்தேன்
நெல்லைப் புதைத்தேன்
நெல்லோடு உழைப்பைப் புதைத்தேன்
காலடியை தண்ணீரில் நனைத்தேன்
தலைமுடியை வெயிலில் நனைத்தேன்
நெல் விளைந்தது
சோறு குழைந்தது
சாவகாசமாய் நானமர்ந்து உண்டதில்லை
வலிய விதியடா!
 
மண்வெட்டி பிடித்தேன்
மண்ணைப் பிளந்தேன்
கடப்பாறை பிடித்தேன்
கல்லைப் பெயர்த்தேன்
காய்த்துப்போன கைகள்
விரைத்துப்போன விரல்கள்

அம்மம்மா….!
    ஒரு வாயென்றாலும்,
      கையில் அள்ளித்தின்ன பசிபோகும்
நாசமான நாகரீகம் - இன்று
    சோற்றை அள்ளித்தின்ன
    கரண்டி இடைத்தரகன்

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்றான்
என்ன உலகமடா?
அரிசியாய் வந்தபோது
      சோறாக்கி உப்பிட்ட தாய்
      முதியோர் இல்லத்தில்
நாற்றாய் நிமிர்ந்தபோது
      மண்ணால் உப்பிட்ட நிலத்தில்
      கட்டிடங்கள்
நெல்லாய் இருக்கும்போது
      வேர்வையில் உப்பிட்டன்
      கோவணத்தில்
வலிய விதியடா!  

தூங்கியவனை எழுப்பினேன்
எழுந்து பார்த்து என்ன என்றான் – காது
கேளாதவனை தட்டினேன்;
திரும்பிப்பார்த்து என்ன என்றான் – ஐயா
“தூங்கிவிட்டேன்” என்றுசொல்லி
      தூங்குவானை எப்படி எழுப்புவேன்
நாற்பது நாளாய் கத்தியும்
     கண்ணெதிரே நின்று
கேளாதுபோல் நிற்பானை என் செய்வேன்
“தெரியாது” எனவே பேட்டியளிப்பனை என் செய்வேன்
“எழுப்பித்தான் பாரேன்” என்கிறானோ?
 
பளபளப்பான ஆடைக்கு பருத்தி போட்டேன்
நான் அணிந்தது கோவணமும் வேட்டியும் தான்!
வெள்ளைவெளேரென்ற அரிசி கொடுத்தேன்
நான் உண்பது அரை வயிறு தான்
உயர்ந்து நிற்கும் மரங்கள் நட்டேன்
நான் உழுவதும் திரிவதும் வெயிலில் தான்
உருவாக்கியும் அனுபவிக்க முடியாத
      துர்பாக்கியசாலி நான்
உழைப்பே இல்லாமல் அனுபவிக்கும்
      பாக்கியசாலி நீ
வலிய விதியடா!

உண்பது என் அரிசி
உண்டும் தொலைக்காட்சி பசி
      நீயா? நானா? என்று
உடுப்பது என் பருத்தி
மஞ்சள் ஆடை பைத்தியக்காரன்
      மண்வெட்டி வேண்டாம் என்கிறான்
ஜெர்மனி உதாரணம் தந்த உதாசீனமது
          அதற்கு தெரியுமோ? தெரியாதோ?
ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு
          உணவிட்டது எம் விவசாயிகள்

விற்றோமே நம் ஓட்டை ஒருமுறைதான்-ஐயா
பெற்றோமே அதன் பலனை தினம்தினம்தான்
வீழ்ந்தாரே நம் காலில் ஒருமுறைதான்-ஐயா
      வீழ்ந்தோமே விவசாய பெருங்குடிதான்
தண்ணீருக்காக நாம் டெல்லி சென்றோம்-ஐயா
      கண்ணீர் வற்றிய குளங்கள் மிச்சம்
வலிய விதியடா! 

                                      -  Written By,
                                        சரவணபெருமாள்
குறிப்பு:
தண்ணீருக்காவும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வேண்டி, டெல்லியில் பிரதமரை சந்திக்கச்சென்ற விவசாயிகள் போராட்டம் நாற்பதாவது நாளைக்கடந்த சமயத்தில் நிகழ்ந்தவற்றத்தழுவி எழுதப்பட்ட வரிகள் இவை.

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...