Wednesday, September 20, 2017

பாடல் கவிதை 1 - பாரதி இருந்தால் இப்படி பாடியிருப்பான்

பாடல் ராகம்:
படம்      :  நேற்று இன்று நாளை
பாடல்  :   தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று






ஐயா விடுதலையான நாடுமட்டும் இங்கே – நாட்டு
மக்களுடைய விடுதலைதான் எங்கே – நாடு
அரசியல்வாதி கைகளிலே போச்சே – ஏழை
எம்வாழ்வு நடுத்தெருவாய் ஆச்சே  (ஐயா)

பாலம்கட்ட பணப்பெட்டிகள்
ஒதுக்கிய துண்டு – பாலம்
கட்டும்போதே பாதிநிலையில்
விழுந்ததும் உண்டு                   (பாலம்)
மக்களுக்கே பாலமென்று
கட்டியே முடிப்பார் – தம்
கட்சித்தலைவர் திறக்கும்வரை
மூடியே வைப்பார்                    (தம்) (ஐயா)

கூட்டணியில் இருக்கும்போது
அமைதியாய் இருந்தார் – கூட்டு
முறிந்தபின்னே வாய்ச்சொல்லில்
வாளையும் எடுத்தார்                (கூட்டணியில்)
இலங்கைத்தமிழர் இறக்கும்போது
பதவியைக் காத்தார் – ஈழம்
புதைந்தபின்னே நீதிதோண்ட
வழக்கையும் தொடுத்தார்           (ஈழம்) (ஐயா)

வாக்களித்து தேர்ந்தெடுத்த
தொகுதியில் பஞ்சம் - அவர்
நாள்தோறும் நட்சத்திர
விடுதியில் தஞ்சம்                  (வாக்களித்து)
மக்களுடைய பிரச்சனைகளை
காற்றினில் விட்டார் - தம்
கட்சியுடைய பிரச்சனையை
கவனத்தில் எடுத்தார்               (தம்) (ஐயா)

அரசுவேலை நாளிதழில்
விளம்பரம் கொடுத்தார் - அங்கே
சென்றுபார்த்தால் மேசைக்கடியில்
கைகளை விரித்தார்                (அரசு)
தகுதிக்குத்தான் வேலையென்று
இருந்த நாட்டிலே - பணம்
ஒன்றுமட்டும் தகுதியாகி
எழுதும் ஏட்டிலே                   (பணம்) (ஐயா)
 
உரிமமெங்கே காப்பீடெங்கே
காண்பிக்கச் சொல்வார் - காட்ட
அதிவேகத்தில் வந்தாயென
காரணம் சொல்வார்               (உரிமமெங்கே)
வழிமறித்து வழிப்பறிக்கும்
திருடனும் ஒன்று - அட
நெடுஞ்சாலை வரிவாங்கும்
கொள்கையும் ஒன்று              (அட) (ஐயா)

தனியாருடைய பேருந்தைவிட
கட்டணம் அதிகம் - அங்கே
எலிவளைகள் குடைந்ததுபோல்
ஓட்டைகள் அதிகம்                (தனியாருடைய)
அதிகாரியின் கைகளிலே
நோட்டுக்கள் அதிகம் - அதனால்
தனியார்பள்ளி பேருந்திலே
விபத்துக்கள் அதிகம்              (அதனால்) (ஐயா)

மதுக்கடையை திறப்பதற்கு
வரிந்து கொண்டாரே - நம்
கல்வித்தரம் மேம்படுத்த 
மறந்து விட்டாரே                 (மதுக்கடையை) 
கட்டணமில்லா கல்வியென
முழங்கிக் கொண்டாரே - அங்கே
கட்டுக்கட்டாய் வாங்குவோரை
வளர்த்தும் விட்டாரே             (அங்கே) (ஐயா)

ஓட்டுக்கேட்டு வந்தபோது
கால்களில் விழுந்தார் - எங்கள்
உரிமைக்காகப் போராடினால்
அடித்திட வைத்தார்              (ஓட்டு)  
வெயிலில்காய்ந்து மழையில்நனைந்து
போட்ட சோற்றையே - அவர்
தின்றும்விட்டு ஏப்பம்விட்டு
மறந்தார் நன்றியே               (அவர்) (ஐயா)

தமிழகத்தின் நெற்களஞ்சியம்
எங்கள் தஞ்சையே - அதை
பாலைவன மாக்கும்திட்டம்
சிலரின் சூழ்ச்சியே               (தமிழகத்தின்) 
விவசாயி அழித்துவிட்டு
விவசாயம் இழப்பாய் - ஒருநாள் 
சோற்றுக்காக நடுத்தெருவில்
பிச்சையும் எடுப்பாய்            (ஒருநாள்) (ஐயா)


நோய்நொடிக்கு  மருந்துதரும்
வழக்கங்கள் அன்று - நோய்கள்
வரவழைத்து மருந்துதரும்
பழக்கங்கள் இன்று              (நோய்நொடிக்கு) 
தெருக்களிலே குப்பைகொட்ட
கூடாது என்பார் - தாமே
கொட்டிவிட்டு கூட்டிவிட்டு
விளம்பரம் தருவார்             (தாமே) (ஐயா)

ஊழலையே ஒழிப்போமென
முழங்கிய துண்டு - தன்னைச்
சார்ந்தோருடைய ஊழலெல்லாம்
விடுபட்ட துண்டு               (ஊழலையே)
எதிர்ப்பவரை அடித்திடவே
ஆயுதம் உண்டு - தமதை
எதிர்த்தாலும் மறுத்தாலும்
சோதனை உண்டு              (தமதை) (ஐயா)

கஷ்டப்பட்டு உழைத்தெடுத்த
எங்கள் பணத்தையே - எந்த
உழைப்புமின்றி வரியாக்கி
வழிப் பறித்தையே            (கஷ்டப்பட்டு) 
கைபேசி பேச்சுக்கட்டணம்
குறைந்து போனதே - நாங்கள்
உண்ணுகின்ற காய்கறிவிலை
உயர்ந்து போனதே            (நாங்கள்) (ஐயா)

நீட்விலக்கு வாங்கித்தர
முயற்சிப்போம் என்றார் - தம்
கட்சித்தலைமை கால்பணிந்து
பல்டியும் அடித்தார்           (நீட்)
மருத்துவராய் சொல்கிறேனென
மேடையில் முழக்கம் - தம்
மருத்துவத்தை மறந்துவிட்டு
கட்சிக்குள் இணக்கம்        (தம்) (ஐயா)

சுதந்திரதின வாழ்த்துக்களை
அறிக்கையில் விடுவார் - மக்கள்
சுதந்திரத்தை பறிக்கும்திட்டம்
அடிக்கடி தருவார்            (சுதந்திர)
ஏய்ப்பவரின் மகுடியிலே
மயங்கிட வேண்டாம் - இங்கே
என்னென்ன நடக்கிறது
மறந்திட வேண்டாம்        (இங்கே) (ஐயா)
          


                                - Written By  
                                  சரவணபெருமாள்


தானமும் என் சுயநலமே

தானமும் என் சுயநலமே




அன்பால்
கோடிபேரது உள்ளங்களில்
உட்கார்ந்திடக்கூட ஆசையில்லை

யாரென்றே தெரியாதவரில்
உயிருக்கு உதிரமாய் வாழ
இரத்ததானமிட ஆசை

கண்கட்டியே கண்ணாமூச்சி
கட்டாமலே காலம்கடப்பார்
கட்டவிழ்ந்து காட்சிபெற
கண்தானமிட ஆசை

செத்தால் சிதைந்துபோகும்
கொடுத்தால் ஈருயிர் மீளும்
சிறுநீரக தானமும் ஆசை

தொட்டுவிட்டது மரணம் என்றால்
துரத்தப்படும் ஒருவர்
நெஞ்சுக்குள் துடித்திடும்
இதயமாக ஆசை

கொடைவள்ளலாக ஆசையில்லை
உயிர்போனபின்னும்
உடல்உறுப்பு வாழட்டுமே
வாழ்கவே 
என் சுயநலமே 


                             - Written By

                                சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...